Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

எழுதிச்சென்ற விதியின் கை

$
0
0

சங்க காலம் / தேடல் – 3

தமிழரின் “தலை“யெழுத்து

Influence of Christianity on Tamil Languageகல்தோன்றிய, மண்தோன்றிய காலத்துக்குப் பின்தோன்றிய மொழிகள் பல. அவற்றுள் ஒன்று தமிழ்மொழி.எகிப்து நாட்டில் பொ.யு.மு. 60ஆம் நூற்றாண்டுக்கு முன்பே கல்வெட்டுகள் இருந்தன.[1] சீன நாட்டில் பொ.யு.மு. 20ஆம் நூற்றாண்டுக்கு முன்பே கல்வெட்டுகள் இருந்தன. உலக மொழிகளோடு ஒப்பிடும்போது தமிழ்மொழிக் கல்வெட்டுகளின் காலம் மிகப் பிற்பட்டதுதான்.

பாரத கண்டத்தில் தோன்றிய ரிக் வேதத்தின் காலம் பொ.யு.மு. 14 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.[2] ரிக் வேதத்தின் காலத்தைத் தீர்மானிப்பதில் பல அறிஞர்களிடம் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எப்படியானாலும் பாரதகண்டத்தில் தோன்றிய மொழிகளோடு ஒப்பிடும்போதும் தமிழ்மொழியின் எழுத்துருவின் காலம் பிற்பட்டதுதான்.

ஆனால், மற்றவை வழக்கிழந்தபோதும் தமிழ் வழக்கிழக்காமல் தன்னைச் செம்மைப்படுத்திக் கொண்டு உயர்ந்து வளர்ந்தது என்பதில் எந்த அறிஞர் குழுக்களிடமும் கருத்துவேறுபாடு இருக்காது.

‘தமிழி’ எழுத்தின் காலம்

தமிழ்மொழியின் எழுத்து வடிவம் முதலில் உருவ (படம்) எழுத்தாக இருந்து, கருத்தெழுத்தாக மாறிப் பின்னர் அசையெழுத்து நிலையினை அடைந்து, பின் செம்மையடைந்து வரியெழுத்தாக மாறியது. அதற்குத் “தமிழி“ என்றுபெயர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலைக்கு அருகில் உள்ள கொடுமணல் என்ற பகுதியில் அகழ்வாய்வுசெய்து கண்டெடுக்கப்பட்ட பானையோட்டில் தமிழி எழுத்தில் ஒரு பெயர் எழுதப்பட்டிருந்தது. அப்பானையோட்டினை கார்பன் டேட்டிங் பரிசோதனை செய்ததில் அதன் காலம் பொ.யு.மு.எட்டாம் நூற்றாண்டு என்று தெரியவந்தது.அதாவது, தமிழி எழுத்து ஏறத்தாழ பொ.யு.மு.எட்டாம் நூற்றாண்டிலிருந்தே வரியெழுத்தாக வழக்கிலிருந்துள்ளது. அப்படியென்றால், அது உருவ (படம்) எழுத்தாக இருந்த காலகட்டம் ஏறத்தாழ பொ.யு.மு. 13ஆம் நூற்றாண்டு என்பது என் கணிப்பு.

தமிழகத்தில் அரசலூர், ஆதிச்சநல்லூர், பொருந்தல், அழகர்மலை, ஆனைமலை, எடக்கல் கல்வெட்டு, கருங்காலக்குடி, கலசக்காடு, கழுகுமலை, கீழவளவு, கொடுமணல், சமணர்மலை, சித்தன்னவாசல், பரங்குன்றம், திருவாதவூர், பஞ்சபாண்டவர்மலை, புகழூர், மறுகால்தலை, மாங்குளம், மாமண்டூர், முத்துப்பட்டி, மேட்டுப்பட்டி, விக்கிரமங்கலம், தேனூர், ஐம்பை, போர்ப்பன்னக்கோட்டை போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட பொ.யு.மு.மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கல்வெட்டுகளில், மட்பாண்டச் சில்லுகளில் தமிழி எழுத்தில் அமைந்த சொல், சொற்கள், தொடர் ஆகியன காணப்படுகின்றன.

இவற்றுள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கண்டறியப்பட்ட குகைக் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள் தமிழி தானா? அல்லது மூலத் தென் திராவிட மொழியா? என்ற ஐயம் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாருக்கு இருந்தது. காரணம், இக்குகைக் கல்வெட்டுகளின் மொழி தமிழ் மற்றும் பிராகிருத மொழிகளின் கலப்பில் ஒரு கலப்புமொழியாக அமைந்திருந்ததே.[3]

இக்கல்வெட்டுகளைச் செதுக்கிய புத்தசமயத்தைச் சார்ந்தோர்கள் பிராகிருத மொழியில் புலமைபெற்றவர்கள். அதே நேரத்தில் அவர்கள் தமிழைத் தாய்மொழியாகப் பெற்றவர்கள் அல்லர். தமிழகத்தில் வாழும் தமிழ் மக்கள் “இக்குகை இவரது“ என்றோ, “இக்குகையை இவருக்கு இவர் அமைத்துக்கொடுத்தார்“ என்றோ அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில்தான் அக்குகைகளில் அச்செய்திகளை எழுதிவைத்தனர்.

தென்தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து குகை மற்றும் குகைசார்ந்த பகுதிகளில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளின் மொழி, மொழி நடையின் அடிப்படையிலும் அவை தொல்காப்பிய விதி ஒழுங்குக்கு உட்படுவதாலும் சங்க இலக்கியங்களில் பயின்று வரும் சொற்களாக இருப்பதாலும் அவை தமிழி மொழிதான் என்பதனை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

மூன்றுமுகம்

தமிழி எழுத்துரு மூன்றுகட்ட நிலைகளில் மாற்றங்களைப் பெற்று வளர்ந்துள்ளது.[4] முதல்கட்ட வளர்ச்சி நிலையில் அதாவது, பொ.யு.மு.எட்டாம் நூற்றாண்டு முதல் பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டு வரையில் தமிழி எழுத்தில் “கந்தசாமி“ என்ற சொல்லினை எழுதினால் நம்மால் அதனைக் “காந்தாசாமி“ என்றே படிக்கநேரிடும். அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் அதனைக் “கந்தசாமி“ என்றே புரிந்து சரியாகப் படித்தார்கள்.

இரண்டாம் கட்ட வளர்ச்சி நிலையில் அதாவது, பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டு வரையில் தமிழி எழுத்தில் கந்தசாமி என்ற சொல்லினை எழுதினால் அதனைக் “கநதசாமி“ என்றே படிக்கநேரிடும். அக்காலத்தவர்கள் அதனைச் சரியாகவே படித்தார்கள்.

மூன்றாம் கட்ட வளர்ச்சி நிலையில் அதாவது, பொ.யு.மு. ஒன்றாம் நூற்றாண்டு முதல் பொ.மு. மூன்றாம் நூற்றாண்டுவரையில் தமிழி எழுத்தில் கந்தசாமி என்ற சொல்லினை எழுதினால் அதனைக் “கந்தசாமி“ என்று மட்டும் படிக்கமுடிந்தது. அவர்களும் அவ்வாறே படித்தார்கள். அதனால், தமிழி எழுத்துவடிவம் தன்னுடைய மூன்றாம் கட்ட வளர்ச்சி நிலையில் செம்மையுற்றது என்று உறுதிபடுத்தலாம்.

மொழிகள் பல – எழுத்துரு ஒன்றே

அக்காலத்தில் எழுத்துவழக்கில்லாத பல மொழிகள் தமிழி எழுத்தினையே தமது எழுத்துவடிவமாகக் கொண்டிருந்தன. வடஇந்தியப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள் பிராகிருத மொழியைப் பேசினாலும் அவர்களுடைய மொழியைத் தமிழி எழுத்துவடிவிலேயே எழுதியுள்ளனர். அங்குக் கண்டறியப்பட்ட பழைய கல்வெட்டுக்கள் அனைத்தும் தமிழி எழுத்துவடிவில் எழுதப்பெற்றவையே.

அசோகர் தமது பிராகிருத மொழி மற்றும் பாலி மொழிக் கல்வெட்டுக்களைத் தமிழி எழுத்துவடிவிலேயே எழுதினார். காரணம் இந்திய அளவில் பல மொழி பேசுவோரும் அறிந்த எழுத்துருவாகத் தமிழி இருந்துள்ளது. அதாவது, இப்போது உலக அளவில் ஆங்கில எழுத்துரு இருப்பதுபோல.

பதினெட்டுள் ஒன்று

பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற “சமவயங்க சுத்தா“ என்ற சமணசமய நூல் அக்காலத்தில் இந்தியாவில் வழக்கிலிருந்த 18 வகையான எழுத்துவடிவங்களைப் பட்டியலிட்டுள்ளது.[5] அவற்றுள் ஒன்று தமிழி.

பொ.யு.மு. 168 இல் எழுதப்பெற்ற “பன்னவயங்க சுத்தா“ என்ற சமண சமய நூலும் அப்பதினெட்டு எழுத்துவடிவங்களுக்குரிய பெயர்களைக் குறிப்பிட்டுள்ளது.

அவை 1.பம்பி, 2.யவநாளி, 3.தொசபுரியா, 4.கரோத்தி, 5.புக்க ரசரியா, 6.போகவையா, 7.பஹாரையா, 8.உய-அம்த ரிக்கியா, 9.அக்கரபித்தியா, 10.தேவானையா, 11.நினித்யா, 12.அம்கலிபி, 13.கணியலிபி, 14.கம்தவ்வ-லிபி, 15.ஆதம்சலிபி, 16.மஹேசரி. 17.தமிழி, 18.பொலிம்தி என்பனவாகும். இந்நூலில் இவ்வெழுத்துகள் அவை தோன்றிய காலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படவில்லை. அவ்வாறு வரிசைப்படுத்தப்பட்டிருந்தால் தமிழி எழுத்து வடிவம் முதலாவதாகச் சுட்டப்பட்டிருக்கும்.

இந்திய எல்லையைக் கடந்த தமிழி எழுத்து

தாய்லாந்து நாட்டில் குவான் லுக் பட் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் உரைகல்லில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்டிருந்தனைக் கண்டுபிடித்துள்ளனர். அவ்உரைகல்லின் காலம் பொ.யு.மு. நான்காம் நூற்றாண்டு ஆகும்.

இலங்கையில் கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட கருப்பு – சிவப்பு மட்பாண்டங்களில் தமிழி எழுத்தினைக் கண்டுள்ளனர். இதன் காலம் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டாகும்.

அதே நாட்டில் திசமகாராமையில் அதே காலகட்டத்தைச் சார்ந்த கருப்பு – சிவப்பு மண் தட்டில் தமிழி எழுத்தினைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதே நாட்டில் பூநகரியில் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டுக்குரிய ஒரு மட்பாண்டத்தில் தமிழி எழுத்தினைக் கண்டுள்ளனர்.

தாய்லாந்து நாட்டில் அதே காலகட்டத்தைச் சார்ந்த ஒரு மட்பாண்டத்தில் தமிழி எழுத்தினைக் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழி எழுத்தில் “பானை ஒறி“ என்று எழுதப்பெற்ற பொ.யு.மு. முதல் நூற்றாண்டிற்குரிய ஒரு சாடியினை எகிப்து நாட்டில் உள்ள லெக்குஸ் லிமன் என்ற இடத்தில் கண்டுபிடித்துள்ளனர்.[6]

அதே நாட்டில் பெரின்ஸ் ரொக்ளோடிசியா என்ற இடத்தில் அதே கால கட்டத்தைச் சார்ந்த ஒரு சாடியில் தமிழி எழுத்தில் எழுதப் பெற்ற ஒருவாசகத்தைக் கண்டறிந்துள்ளனர்.

ஓமன் நாட்டில் அதே கால கட்டத்தைச் சார்ந்த ஒரு பானை ஓட்டுத்துண்டில் “ணந்தை கீரன்“ என்று தமிழி எழுத்தில் எழுதப்பட்ட ஒரு சொல்லினைக் கண்டுபிடித்துள்ளனர்.

வெளிநாட்டவரின் வருகையாலும் தமிழ்நாட்டவரின் வெளியுறவு நடவடிக்கைகளாலும் கடல் வணிகத்தின் வளர்ச்சியாலும் இவை சாத்தியப்பட்டுள்ளன.

புகழ்பெற்ற தமிழிக் கல்வெட்டுகள்

மிகப்பழமையான தமிழிக் கல்வெட்டுகள் ஆதிச்சநல்லூரிலும் மாங்குளத்திலும் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன். இவற்றிற்கு அடுத்தபடியாகத் தொல்நிலையில் உள்ளவை புலிமான்கோம்பை, தாதப்பட்டி கல்வெட்டுகளாகும். இவற்றின் காலம் பொ.யு.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முன். அதற்கு அடுத்தது சித்தன்னவாசல் குகைக் கல்வெட்டுகள். இவற்றின் காலம் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்.

சித்தன்னவாசல் குகைக் கல்வெட்டு, “எருமி நாட்டுக் குமுழூர் பிறந்த காவுடி ஈதென்கு சிறுபோவில் இளயர் செய்த அதிடனம்“ என்ற செய்தியை வழங்குகிறது.[7] இதிலுள்ள “காவுடி“ என்ற சொல் “காவிதி“ என்ற ஒரு பட்டப்பெயரினைக் குறிக்கின்றது. இப்பட்டப்பெயர் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜம்பையில் கண்டறியப்பட்ட கல்வெட்டு தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியின் காலத்த்தாகும். இக்கல்வெட்டில் அதியமான் நெடுமான் அஞ்சியை “சதியபுதோ“ என்று குறிப்பிட்டுள்ளது. வட இந்தியாவில் மௌரியராட்சியின் போது அசோகர் உருவாக்கிய கல்வெட்டில், தன் அண்டைநாட்டு அரசர்கள் பற்றிய குறிப்பில், “சோழர், பாண்டியர், சத்யபுத்ரர், கேரளபுத்ரர்“ என்று உள்ளது. ஆக, அசோகர் குறிப்பிடும் “சத்யபுத்ரர்“ என்ற சொல் “சதியபுதோ அதியமான் நெடுமான் அஞ்சி“யைத்தான் குறிக்கிறது என்று உறுதிப்படுகிறது. அப்படியென்றால், பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டில் அதியமான் நெடுமான் அஞ்சி தமிழகத்தின் மூவேந்தர்களுக்கு இணையாக ஆண்டுவந்தமையை அறியமுடிகிறது.

ஜம்பைக் கல்வெட்டு திருக்கோயிலூர்க்கு அருகில் கிடைத்திருப்பதால், “அதியமான் நெடுமான் அஞ்சி திருக்கோயிலூரை ஆட்சிபுரிந்த மலையமான் திருமுடிக்காரியை வென்றதாக“ இலக்கியங்கள் குறிப்பிடும் செய்தி கதை அல்ல – நிஜம் என்று உறுதிபடுத்தியுள்ளது.

அரச்சலூரில் கிடைக்கப்பெற்ற இசைக் கல்வெட்டில் இசைக்குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் அருகில், “எழுத்துப் புணருத்தான் மசிய் வண்ணக்கன் தேவன் ஙாத்தன்“[8] என்ற செய்தி உள்ளது. அதாவது, “மசிய் வண்ணக்கன் தேவன் இவ் இசை எழுத்துகளைக் கல்லில் செதுக்கினார்“ என்ற பொருளினைத் தருகிறது. தமிழரின் இயல் (இலக்கணம், இலக்கியம்) மட்டுமல்ல இசையும் பொ.யு.மு. முதல் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது தெளிவாகிறது. குறிப்பாக, அவ் இசை “தமிழிசை“ என்பதனையும் நாம் நினைவில் நிறுத்தவேண்டும். இக்கல்வெட்டிற்குப் பிற்பட்டதே சிலப்பதிகாரம். அதில் உள்ள அரங்கேற்றுக்காதை தமிழரின் இசைப் புலமைக்கும் கூத்து நுட்பத்திற்கும் ஓர் உரைகல்.

முக(ம்)வரி மாறிய தமிழி

தமிழி என்பதனைக் காலப்போக்கில் தமிழ்பிராமி எழுத்து, தொல்தமிழ் எழுத்து, பண்டைத்தமிழ் எழுத்து, சங்கத்தமிழ் எழுத்து, தென்னிந்திய பிராமி எழுத்து என்றெல்லாம் அழைத்துள்ளனர். இப்போது நாம் இதனைத் “தமிழ்“ என்று சுட்டுகிறோம்.

செம்மையுடைய எழுத்துவடிவமே சிறப்பெழுத்துகளைக் கொண்டிருக்கும். தொடக்க காலத்திலேயே “தமிழி“ தனக்குரிய சிறப்பெழுத்துகளான ழ,ள,ற,ன ஆகிய நான்கு எழுத்துகளையும் பெற்றித்திகழ்ந்தது. தமிழி செம்மையுடைய எழுத்துவடிவமுடையது. “அசோகன் பிராமி“ முதலானவை அனைத்தும் தமிழிக்குப் பிற்பட்டவையே – செம்மையற்றவையே.

தமிழி எழுத்தின் எழுத்து வடிவம் பொ.யு.மு. ஒன்றாம் நூற்றாண்டளவில் மாறத்தொடங்கியது. அது முதலில் வட்டெழுத்தாகவும் மிகப் பிற்காலத்தில் தற்போது உள்ள தமிழ் எழுத்தாகவும் மாற்றம் பெற்றது.

கண்ணெழுத்து (சிலப்பதிகாரம் – 5 11-112), கோலெழுத்து (திருக்குறள் – 1285), குயிலெழுத்து (அகநானூறு – 297) என்று தமிழி எழுத்து எழுத உதவும் கருவி, எழுதப்படும் பொருள் சார்ந்து பல பெயர்களைப் பெற்றது.

சமஸ்கிருத மொழியின் உச்சரிப்புகளைச் சரியாக எழுதுவதற்காக மட்டுமே கிரந்த எழுத்துக்களைத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

“தலை“ என்ற சொல்லுக்கு “முதல்“ என்றும் பொருளுண்டு. தமிழரின் முதல் எழுத்து வடிவம் “தமிழி“ என்பதால் அது தமிழரின் தலையெழுத்துதானே! இப்போதும் “தமிழி“ இருக்கிறது– “தமிழ்“ என்ற பெயரில். “தமிழி“ தன்னுடைய வரியெழுத்தில் மாற்றம் பெற்றாலும் தன் மரபுப் பண்பினைத் தக்கவைத்துக் கொண்டு, கொள்ளுத் தாத்தாவின் தனிப் பண்பினைப் பெற்ற எள்ளுப் பெயரனைப் (எள்ளுப் பேரன்) போலத் “தமிழ்“ என்ற எழுத்து நிலையிலுள்ளது.

0

ஆதாரம்

  1. இலக்குவனார், சி. பழந்தமிழ், ப. 30.
  2. மேலது.
  3. மீனாட்சி சுந்தரனார், தெ.பொ. தமிழ் மொழி வரலாறு, ப. 59.
  4. இராசேந்திரன், பொ., சாந்தலிங்கம், சொ., கல்வெட்டுக்கலை, ப. 19.
  5. T.V.Mahalingam, Early South Indian Paleography, Pp. 110-111.
  6. ta.wikipedia.org
  7. காசிநாதன், நடன., கல்லெழுத்துக்கலை, ப. 27.
  8. மேலது, ப. 28.

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!