காதல் அணுக்கள் / அத்தியாயம் 19
(அதிகாரம் – அவர்வயின்விதும்பல்)
குறள் 1261:
வாளற்றுப்புற்கென்றகண்ணும்அவர்சென்ற
நாளொற்றித்தேய்ந்தவிரல்.
வழி பார்த்துப் பூத்த விழி
காலண்டர் காய்த்த விரல்
அழகழிக்கும் ராட்சசனாய்
அவனுக்கான காத்திருப்பு.
*
குறள் 1262:
இலங்கிழாய்இன்றுமறப்பின்என்தோள்மேல்
கலங்கழியும்காரிகைநீத்து.
பிரிவுத் துயரினில்
நழுவும் வளையல்
உடைந்து சிதறும்
உன்னை மறந்தால்.
*
குறள் 1263:
உரன்நசைஇஉள்ளம்துணையாகச்சென்றார்
வரல்நசைஇஇன்னும்உளேன்.
விரும்பிய வெற்றியை
நெருங்க விலகியவன்
திரும்புதல் நோக்கியே
அரும்பி நீளும் ஆயுள்.
*
குறள் 1264:
கூடியகாமம்பிரிந்தார்வரவுள்ளிக்
கோடுகொடேறுமென்நெஞ்சு.
காடேறி மேடேறி
மரமேறி மலையேறி
அவனைக் கண்தேடும்
காதல் பித்து மனம்.
*
குறள் 1265:
காண்கமன்கொண்கனைக்கண்ணாரக்கண்டபின்
நீங்கும்என்மென்தோள்பசப்பு.
மீண்டு வருமென்
தேகத் திருவனப்பு
மீண்டும் அவனைக்
கண்கள் கண்டால்.
*
குறள் 1266:
வருகமன்கொண்கன்ஒருநாள்பருகுவன்
பைதல்நோய்எல்லாம்கெட.
பிரிந்திருந்த நாட்களுக்கும்
சேர்த்து திரும்பிய தினமே
தேகம் தேயத் துய்ப்பேன்
மோகக் கடன் தீர்ப்பேன்.
*
குறள் 1267:
புலப்பேன்கொல்புல்லுவேன்கொல்லோகலப்பேன்கொல்
கண்அன்னகேளிர்விரன்.
அவன் திரும்பினால்
அழுது தீர்ப்பேனோ
தழுவிக் கிடப்பேனோ
அல்லது இரண்டுமோ!
*
குறள் 1268:
வினைகலந்துவென்றீகவேந்தன்மனைகலந்து
மாலைஅயர்கம்விருந்து.
வினை வென்ற பின்
விரைந்து வந்தவளைத்
திறந்து விருந்துண்ண
இரவு இனித்திருக்கும்.
*
குறள் 1269:
ஒருநாள்எழுநாள்போல்செல்லும்சேண்சென்றார்
வருநாள்வைத்துஏங்குபவர்க்கு.
காதல் பிரிவுத்துயரில்
கிடப்பவளது கற்பனை
கிழிந்து க்ளீஷேவாகும்
ஒரு கணம் ஒரு யுகம்.
*
குறள் 1270:
பெறின்என்னாம்பெற்றக்கால்என்னாம்உறினென்னாம்
உள்ளம்உடைந்துக்கக்கால்.
பிரிவு தாங்காமல்
மனசு சிதைந்தால்
திரும்ப வந்தென்ன
தீரக் கலந்தென்ன!
***