சங்க காலம் / தேடல் – 4
சங்கத் தமிழர்கள் வந்தேறிகளா?
தமிழ்நாட்டின் தெற்கேயுள்ள கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள கடல், சங்ககாலத்தில் இல்லை என்றும் அங்கு மிகப்பெரிய நிலப்பரப்பு இருந்தது என்றும் பின்னர் கட(ற்)ல்கோளால் (சுனாமி) அந்நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கியது என்றும் அங்கு வாழ்ந்த தமிழர்கள் (சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழர்கள்) தப்பிப் பிழைத்து இப்போது இருக்கும் தென் தமிழகப் பகுதியில் குடியேறினர் என்றும் செவிவழிச்செய்தி சார்ந்த வலுவான தொன்மக் கருத்து உள்ளது.
அப்படியென்றால், இப்போது இருக்கும் தென் தமிழகப் பகுதிகளுக்கு வந்த சங்கத் தமிழர்கள் அனைவரும் வந்தேறிகள்தானா? அவர்கள் கடல்கோளால் தப்பிப்பிழைத்து அகதிகளாகத்தான் இப்போது இருக்கும் தமிழகத்துக்கு வந்தார்களா? அப்படியானால் இப்போது உள்ள தமிழகம் அவர்களின் தாய்நிலம் இல்லையா? அவர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் அல்லரா? இவ்வினாக்களுக்குரிய விடைகளை நாம் சுனாமிகளின் பின்னணியில்தான் தேட வேண்டியுள்ளது.
அழிக்கும் கடற்பேரலைகள்
பொ.யு.மு. 426 ஆம் ஆண்டிலும் பொ.யு.மு. 365 ஆம் ஆண்டிலும் உலகில் ஏற்பட்ட சுனாமிகள் பற்றிய எழுத்தாதாரங்கள் கிடைக்கின்றன. பொ.யு. 1755, பொ.யு.1883, பொ.யு.1929, பொ.யு.1946, பொ.யு.1950, பொ.யு.1958, பொ.யு.1960, பொ.யு.1964, பொ.யு.1998, பொ.யு.1999, பொ.யு.2001, ஆகிய ஆண்டுகளில் உலக அளவில் சுனாமிகள் ஏற்பட்டுள்ளன. அவற்றின் பாதிப்பு பற்றிய விரிவான செய்திகளை அறியமுடிகின்றது.
தற்காலத் தமிழர்கள் அறிந்த சுனாமிகள் இரண்டு. ஒன்று, 22.12.1964 ஆம் நாள் தனுஷ்கோடியைத் தாக்கிய சுனாமி (ஆழிப் பேரலை). இரண்டு, 26.12.2004 ஆம் நாள் சென்னை உள்ளிட்ட கடலோரத் தமிழகத்தைத் தாக்கிய சுனாமி. இரண்டும் இப்போதும் நெஞ்சில் நிழலாடுகின்றன.
தமிழ் இலக்கியங்களில் உள்ள சில குறிப்புகள் பழந்தமிழகத்தைத் தாக்கிய ஒரு பெரிய சுனாமி பற்றிக் குறிப்பிட்டுள்ளது. இலக்கியம் என்றால் புனைவுதான், கற்பனைதான். அவற்றில் உள்ள செய்திகளின் மிகைப்படுத்தலை நாம் ஒதுக்கிவிடலாம். ஆனால், அச்செய்திகளின் மையத்தை நாம் புறக்கணிக்க முடியாது.
குமரிக் கண்டம் இருந்ததா?
குமரி (கன்னியாகுமரி) என்பது, சங்ககாலத்தில் நாஞ்சில் என்ற சிற்றூரினை உள்ளடக்கிய ஓர் ஊர். இப்போது பேரூராட்சியாக உள்ளது. அப் பழங்காலத்து நாஞ்சில் இப்போது வீரநாராயண மங்கலம் என்ற பெயரில் உள்ளது. நாஞ்சில் என்றால், கலப்பை என்று பொருள். கலப்பை வடிவில் உள்ள மலையினைக் குறிக்கிறது. அம்மலையைச் சுற்றியுள்ள நாட்டினை நாஞ்சில் நாடு என்கிறனர். அந்நாட்டின் தலைநகர் நாஞ்சில். இவ்வூர் பற்றிய குறிப்பு புறநானூரில் 137ஆவது பாடலில் உள்ளது.
இந்திய விடுதலையின்போது திருவதாங்கூருக்கு உட்பட்டிருந்த குமரி தமிழ்பேசும் பகுதியாக இருப்பதால் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தமிழகத்தோடு இணைந்த்து. இப்போது குமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் பேசப்படும் தமிழ்மொழியினை “நாஞ்சில் தமிழ்“ என்றுதான் சுட்டுகிறோம்.
“நாஞ்சில்நாட்டின் கடற்கரையினைக் குமரிமுனைதான் இப்போது கிழக்கு, மேற்காகப் பிரித்துள்ளது. மேற்குக்கடற்கரையில் கடல் அரிப்பு மிகுதியாக உள்ளது. ஆதலால், கடற்கோளால் விழுங்கப்பட்ட பகுதி நாஞ்சில்நாட்டின் மேற்குக்கடற்பகுதியாக இருக்கலாம்“[1] என்பது சு.கி. ஜெயகரனின் கருத்து.
பழைய சுனாமி
சிலப்பதிகாரத்தின் காலம் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு. சிலப்பதிகாரத்தில் உள்ள காடுகாண்காதையில் பழந்தமிழகத்தில் பாய்ந்த பஃறுளி ஆற்றினையும் பலமலைகளைத் தொடராக உள்ள குமரி எனும் மலையினையும் கடல் விழுங்கிய செய்தியைக் காணமுடிகின்றது. ஆக, ஒரு பெரும் நிலப்பரப்பும் அதில் பாய்ந்த ஆறும் நீள் மலையும் நீருள் ஆழந்த செய்தி புலனாகிறது. இது நிகழ்ந்தது அந்நூல் எழுதுவதற்கு ஏறத்தாழ நூறாண்டுகளுக்குள் முன் இருக்கலாம்.
குமரிக்கோடு பகுதியில் 49 நாடுகள் இருந்ததாகக் கூறுவர். இப்போது இருக்கும் நாடு என்ற சொல்லுக்கும் அப்போதிருந்த நாடு என்ற சொல்லுக்கும் நில அளவையில் மிகுந்த வேறுபாடுகள் உண்டு. நாடு என்றால் அக்காலத்தில் சிறிய அளவில் உள்ள நிலப்பரப்புதான். அதாவது, இப்போதுள்ள ஓர் ஊரினைப் போன்ற நிலப்பரப்பு.
வடபகுதியில் இருந்த குமரியாற்றுக்கும் தென்பகுதியில் உள்ள பஃறுளியாற்றுக்கும் இடைப்பட்ட தொலைவு 700 காதம் என்பர். ஒரு காதம் என்பது 1.1கி.மீ.[2] என்ற அளவில் மொத்தம் 770 கி.மீ. தூரம்தான். அதுவும் ஆறு வளைந்து நெளிந்து ஓடும் என்பதால் மொத்தத் தூரம் வடக்குத் தெற்காக 400கி.மீ. இருக்கலாம்.
குமரிக்குத் தெற்கே ஒரு கண்டம் இருந்தது என்று சொல்லப்படுகிறது. அது கடல்கோளால் நீருள் மூழ்கியது என்றும் கூறுகின்றனர். கடலுக்கு அடியில் இருப்பது நிலம்தான். அந்த நிலமெல்லாம் நீருள் மூழ்கிய நாடுகள் என்றோ நீருள் மூழ்கிய கண்டங்கள் என்றோ நாம் நம்புவதும் கற்பனைசெய்வதும் ஏற்புடையதல்ல.
குமரிக்கண்டம் என்ற கருத்து ஆங்கிலேயர்களால் கற்பனையில் உருவாக்கப்பட்டு பின்னர் அதனைத் தமிழர்கள் தங்களின் பழமைக்கு ஆதாரமான விவரித்துக்கொண்ட நீள்புனைவு என்பது சு.கி. ஜெயகரன் முதலானோரின் அசைக்கமுடியாத கருத்து.
கண்டம் அல்ல நிலத்துண்டம்
தற்போது இருக்கும் கன்னியாகுமரிக்கு அடுத்துள்ள கடற்பகுதியில் ஓர் ஊரினைப் போன்ற நிலப்பரப்பும் அதற்குள் திசை அளவில் 400கி.மீ. நீளமுள்ள ஓர் ஆறும் இருந்திருக்க வாய்ப்புள்ளது.
ஆக, ஒரு நிலத்துண்டு இருந்துள்ளது. அது கண்டம் அளவிற்கு இல்லை. காரணம், கண்டம் என்பது, “பெரும் நீர்ப்பரப்பால் பிரிக்கப்ட்ட பெரிய தொடர்ச்சியான நிலத் தொகுதிகளாகும்“[3] என்று கூறப்பட்டுள்ளது.
ஆக, குமரிக்கண்டம் என்று கூறுவது சரியன்று. குமரியின் தென் எல்லை ஓர் ஊரின் அளவில் நீண்டிருந்திருக்கலாம். அதனால்தான், சு.கி. ஜெயகரன் “குமரிக்கண்டம் இருந்ததா?“ என்பது பற்றிய ஆய்வு நூலில் தான் கண்டடைந்த முடிவினையே, உண்மையினையே அந்நூலுக்குத் தலைப்பாகக் “குமரி நிலநீட்சி“ என்று தலைப்பிட்டுள்ளார்.
பாண்டியனின் சங்கம்
அந்த நிலநீட்சிப்பகுதியினைத்தான் கடல் அழித்தது. அங்குள்ள மணவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்த பாண்டிய மன்னன் சங்கம் வைத்துத் தமிழாராய்ந்து வந்தான். அப்பகுதி கடலால் மூழ்கடிக்கப்படவே இப்போது இருக்கும் தமிழகத்தை அதாவது, அப்போது சேரர்களும் சோழர்களும் ஆட்சிபுரிந்துவந்த, தமிழர்கள் வாழ்ந்த, தமிழகத்தைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினான். அங்கும் தன் வழமைப்படிச் சங்கம் அமைத்துத் தன் தமிழாய்வுப் பணியினைத் தொடர்ந்துள்ளான்.
அவன் தன்னுடைய தொடர் படையெடுப்பால் கடற்கோளால் தான் இழந்த தென் தமிழகத்திற்கு ஈடாக “வடக்கே கங்கையையும் இமயத்தையும் கைப்பற்றினான்“ என்ற செய்தியைச் சிலப்பதிகாரம் காடு காண்காதை புலப்படுத்துகிறது. ஆக, பாண்டியன் தன் ஆட்சிக்குட்டபட்ட பகுதிகளில், குறிப்பாகத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சங்கம் அமைத்துத் தமிழாராய்ந்துள்ளான்.
குறிப்பாகப் பாண்டியர்கள் ஆட்சிகுட்பட்ட தமிழர் பகுதிகளில் சங்கம் என்ற அமைப்பு முனைப்புடன் செயல்பட்டுள்ளது. ஆதலால்தான் மதுரை, வையை, கூடல் என்ற சொற்களோடு சங்கம் அல்லது தமிழ்மொழி பற்றிய செய்திகளை இணைத்துப் பிற்கால இலக்கியங்கள் சிறப்பித்துள்ளன. சான்றுகள் சிறுபாணாற்றுப்படை – 65, 66, பரிபாடல் – 6. இவற்றைத் தமிழ்ச் சங்கத்துக்கும் இவற்றுக்குமான உறவாகவோ அல்லது தமிழ் மொழிக்கும் இவற்றுக்குமான உறவாகவோ கருத்தில்கொள்ள வாய்ப்புள்ளது.
மணவூரை அவன் கடல்கோளில் இழப்பதற்கு முன், தமிழகத்தில் எந்த மன்னரும் சங்கம் வைத்துத் தமிழாராயவில்லையா? என்ற வினா எழுகின்றது.
மூச்சங்கங்களும் முழுப்பொய்களும்
பொ.யு. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த இறையனார்க் களவியலுரை முதலான தமிழ் நூல்களிலும் பொ.யு. 10ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த சின்னமனூர்ச் செப்பேட்டிலும் சங்ககாலத்தில் முதல், இடை, கடை என்ற மூன்று சங்கங்கள், மூன்று வேறுபட்டக் காலகட்டத்தில், மூன்று வேறுபட்ட நிலப்பரப்பில், மூன்று வேறுபட்ட சான்றார் கூட்டத்தில் இருந்ததாகக் தெரிவித்துள்ளன. அந்நூல்கள் கூறும் காலகட்டமும், மன்னர் மற்றும் புலவர் கூட்டங்களும் ஏற்புடையனவாக இல்லை. அவை தமிழையும் தமிழரையும் மிகைப்படுத்திப் புகழும் நோக்கோடு எழுதப்பெற்ற புனைவுகளே. டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், ஏ.கே. நீலகண்ட சாஸ்திரி, இரா. இராகவ ஐயங்கார், தெ.பொ.மீனாட்சி சுந்தரம் ஆகியோர் இப்புனைவினை முழுவதும் நம்பாவிடினும் “ஒரு சங்கமாவது இருந்திருக்கக் கூடும்“ [4] என்று கருதுகின்றனர்.
பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் (பிற்காலத்தொகுப்பு நூல்கள் தவிர) மூச்சங்கங்கள் பற்றிய எக்குறிப்பும் இல்லை. “புணர்க்கூட்டு“ என்ற சொல் மதுரைக்காஞ்சியில் (762) காணப்படுகின்றது. மன்றம், தமிழ்நிறை என்ற சொற்களாலும் “சங்கம்“ என்ற அமைப்பு பிற இலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ளது.
முச்சங்க கால நூல்களான அகத்தியம், கலி, குருகு, வெண்டாளி, பெருநாரை, பெருங்குருகு, பஞ்ச பாரதீயம், பரதம், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் போன்றனவற்றுள் எவையும் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. இவையெல்லாம் கற்பனை நூல்களோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.
மதுரையில் சங்கம் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதனை மதுரா, உத்தர மதுரை, தென்மதுரை, வட மதுரை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.[5] அக்காலத்தில் மதுரைக்குக் “கூடல்“ என்ற பெயர்தான் இருந்துள்ளது. அதற்கு முற்பட்டக் காலத்தில் மதுரைக்கு “மதிரை“ என்ற பெயரே இருந்துள்ளது. இவற்றைக் கல்வெட்டாதாரங்கள் மெய்ப்பித்துள்ளன.
“முச்சங்கங்கள்“ என்ற மாயையை விரிவுபடுத்தி, ஸ்கை நலன் [6] என்ற ஒரு வலைத் தளத்தில் வரைபடத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. முச்சங்கங்கள் பற்றி மாயையின் உச்சம் அச்செய்தி.
“முச்சங்கங்கள்“ என்ற மாயையை உடைத்தெறியும் ஆய்வுக்கட்டுரைகளுள் மூ. அய்யனார் எழுதிய “இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் முச்சங்கவரலாற்றை முன்வைத்துச் சில கருத்தியல்கள்“[7] என்ற கட்டுரை ஆகச்சிறந்தது.
“சங்கம் என்ற அமைப்பு இல்லவே இல்லை“ என்ற கருத்தினை கே.என். சிவராசபிள்ளையும் பி.தி. சீனிவாச ஐயங்காரும் முன்மொழிந்துள்ளனர். நான் அவர்களின் கருத்திலிருந்து முரண்படுகிறேன்.
தமிழகமும் சங்கமும்
எங்கெல்லாம் தமிழ் அறிந்த மன்னர்கள் ஆட்சிபுரிந்தனரோ, எங்கெல்லாம் தமிழ் அறிந்த உயர்குடியினர் வாழ்ந்தனரோ அங்கெல்லாம் புலர்வர் சென்று அவர்களைச் செய்யுட்களால் புகழ்ந்தும் போற்றியுமுள்ளனர்.
அப் புலவர்களின் கூட்டம் தங்களுக்குள் வாதிட்டும், புலமைப்போர் நடத்தியும் இருக்கலாம். “புலன் நாவுழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ்“ (கலித்தொகை – 68) என்ற அடிகளால் புதிய செய்யுட் படைப்பினை மன்னர் உள்ளிட்ட சான்றார் அவையில் அரங்கேற்றம் செய்யும் மரபும் ஏறக்குறைய Public viva-vice போல இருந்துள்ளது. ஆக, அந்த அவையிலும் தமிழ்ச்செய்யுட்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. சான்று தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்ட முறை.
ஆதலால், முச்சங்கம் என்று வரையறுப்பது எவ்வகையிலும் நியாயமில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பன்முகப்பட்ட சங்கங்கள் இருந்துள்ளன. அவை தமிழ்ச் செய்யுட்களைத் தகுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன என்பது என் கணிப்பு.
சங்க காலத்தின் இறுதி என்பது பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு என்பதும் சங்க காலத்தின் தொடக்கம் என்பது தமிழி எழுத்துருக்கள் பண்பட்ட காலமான பொ.யு.மு. எட்டாம் நூற்றாண்டு என்பதும் என் கணிப்பு.
- – -
- ஜெயகரன், சு.கி., குமரி நிலநீட்சி, ப. 46.
- ஜெயகரன், சு.கி., குமரி நிலநீட்சி, ப. 30.
- Lewis, Martin W.; Karen E. Wigen,The Myth of Continents: a Critique of Metageography.p. 21
- http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04111l2.htm
- Sivrajapillai K.N., The Chronology of Early Tamils (1932)
- http://www.nalan.me/nalan.me.drupal/node/69
- http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1902:2014-01-09-03-46-43&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19