அக்காலத் தமிழர்கள் உணவு என்பதனைக் குறிக்க உணா, உணவு, வல்சி, உண்டி, ஓதனம், அசனம், பகதம், இசை, ஆசாரம், உறை, ஊட்டம், புகா, மிசை போன்ற பல சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் 623ஆவது நூற்பா, “எண்வகை உணவு“ பற்றிக் குறித்துள்ளது. அவை எவை என்பது பற்றித் தொல்காப்பியர் விளக்கவில்லை. ஆனால், உரையாசிரியர்கள் விளக்கியுள்ளனர். ஆனால் அவ்விளக்கம் ஏற்புடையதாக இல்லை. தமிழர் உணவுகள் எட்டுவகை என்றால், அவை சமைக்கப்படும் முறையிலா அல்லது உண்ணப்படும் முறையிலா என்ற வினா எழுகின்றது. சங்க இலக்கிய அடிகள், தமிழர்கள் உணவுவகை எண்பதுக்கும் மேற்பட்டது என்று காட்டுகின்றன.
சைவ உணவு (மரக்கறி)
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில்தொல்தமிழர்கள் அரிசியைப் பயன்படுத்தியதற்கான வலுவான சான்றுகள் கிடைத்துள்ளன.
நெல்லிலிருந்து அவர்கள் அரிசியைக் கைக்குற்றல் - கைக்குத்தல் (உலக்கை கொண்டு இடித்தல்) முறையில் இடித்துப் பிரித்துப் பயன்படுத்திய செய்தியினைப் புறநானூற்றின் 399ஆம் பாடல் தெரிவித்துள்ளது. பெரும்பாணாற்றுப்படையின் 98ஆவது அடியிலும் சிறுபாணாற்றுப்படையின் 193ஆவது அடியிலும் இச்செய்தியினைக் காணமுடிகின்றது.
அகநானூற்றின் 37ஆவது பாடலில் காணப்பயிறுடன் (கொள்) பாலினைக் கலந்து வைத்த கஞ்சி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலைபடுகடாமின் 434 ஆவது அடியில் அவரை விதையை அரிசியுடன் கலந்து செய்த கஞ்சி பற்றிய செய்தி காணப்படுகின்றது.
பட்டினப்பாலையின் 44, 45ஆவது அடிகளில் சோறுவடித்த கஞ்சி ஆறுபோல ஓடியதாகக் குறிப்புள்ளது.
பழந்தமிழர்கள் சோறு என்பதற்கு அடிசில், அழினி, கூழ், அவிழ், கொன்றி, நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவை எனப் பல்வேறு சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
பச்சரிசியால் உருவாக்கப்பட் சோறினைப் “பொங்கல்“ என்றும் வேகவைத்த அரிசியால் உருவாக்கப்பட்ட சோற்றினைப் “புழுங்கல்“ என்றும் அழைத்தனர்.
சோறினைச் சிறுசோறு, பெருஞ்சோறு என்றும் வகைப்படுத்தியிருந்தனர். மேலும், சோறில் கலக்கும் அல்லது சோறின் தன்மைக்கு ஏற்ப அதனை ஊன்சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெய்ச்சோறு, புளிச்சோறு, உளுந்தஞ்சோறு, பாற்சோறு, வெண்சோறு எனப் பலவகைப்படுத்தியிருந்தனர்.
உழவர்கள் வரகரிசிச்சோற்றுடன் புழுக்கிய அவரைப் பருப்பினைக் கலந்து உண்ட செய்தியினைப் பெரும்பாணாற்றுப்படையின் 195ஆம் அடி குறிப்பிட்டுள்ளது.
அகநானூற்றின் 250ஆவது பாடல் மற்றும் நற்றிணையின் 344ஆவது பாடலின் வழியாக அக்காலத் தமிழர்கள் தானியங்களை வெயிலில் காய வைத்தபின் சமைத்த செய்தியினை அறியமுடிகின்றது.
தின்பண்டங்கள்
பெரும்பாணாற்றுப்படையின் 194 மற்றும் 195ஆம் அடிகள் “கும்மாயம்“ என்ற ஓர் உணவுப் பண்டம் பற்றிக் குறிப்பட்டுள்ளது. இதே பண்டம் பற்றிய குறிப்பினை அம்பாசமுத்திரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டிலும் காணப்படுகின்றது. இப்பண்டத்துக்குப் பயிற்றுப்போகம் என்ற வேறொரு பெயரும் உண்டு.
மதுரைக்காஞ்சியின் 624ஆவது அடியில் “மெல்லடை“ என்ற ஓர் உணவுப் பண்டம் பற்றியும் 625ஆவது அடியில் “மோதகம்“ (அப்பம்) என்ற ஓர் உணவுப் பண்டம் பற்றியும் 627ஆவது அடியில் “தீஞ்சேறு“ (அப்பம்) என்ற ஓர் உணவுப் பண்டம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாணாற்றுப்படையின் 372 மற்றும் 373ஆவது அடிகளில் “அப்பம்“ செய்யும் முறை சுட்டப்பட்டுள்ளது.
புறநானூற்றின் 381ஆம் பாடலில் “பண்ணியம்“ என்ற ஓர் உணவுப் பண்டம் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.
வேகவைத்த நெல்லிலிருந்து “பொரி“ தயாரிக்கும் செயல் பற்றி ஐங்குறுநூற்றின் 53ஆவது பாடல் சுட்டியுள்ளது.
வேகவைக்காத நெல்லிலிருந்து “நெல்மா“ என்ற பெயரில் பாசவல் (அவல்) தயாரித்த செய்தியை அகநானூற்றின் 141ஆம் பாடல் குறிப்பிட்டுள்ளது.
மயக்கமென்ன?
அக்காலத்தில் மன்னர்கள், வீரர்கள், புலவர்கள், பாணர்கள் இன்னபிற மக்களும் தங்களின் தகுதிக்கு ஏற்பவும் விருப்பத்துக்கு ஏற்பவும் பல்வேறு வகையான மயக்க உணவுகளையும் உண்டுள்ளனர். சங்க இலக்கியத்தில் பல இடங்களில் இடம்பெற்றுள்ள “உண்டாட்டு“ என்ற சொல் நீர்ம மயக்க உணவினைப் பருகி (குடித்து) மகிழ்வதனைக் குறிப்பிட்டுள்ளது. அக்கால மக்கள் கள், அரியல், தோப்பி, கந்தாரம், பிழி, மட்டு, மட்டம், வேரி, நறவு, தேறல், மது என்ற பல்வேறு வகையான மயக்க பானங்களைப் பருகினர்.
சிறிய கள், பெரிய கள் என்பன மதுவின் அளவினைக் குறித்தன. அவை மது வகைகள் அல்ல. அக்காலத்தில் மட்டுமல்ல இக்காலத்திலும் எல்லா வகையான மதுவும் நொதித்தல் முறையால் தயாரிக்கப்படுபவையே!
அக்காலத்தில் மதுவைத் தயாரிப்பதற்காகப் பழச்சாறு, அரிசிக் கஞ்சி, தேன் முதலியவற்றைப் புளிக்கவைத்துள்ளனர். இவற்றை வளைந்த மூங்கில் குழாய்களிலோ அல்லது தசும்பு என்ற பானையிலோ (இத்தசும்புப் பானையைப் பற்றித் தமிழரின் மண்பாண்டத் தொழில்நுட்பம் பற்றிய அத்தியாயத்தில் காண்போம்) ஊற்றிக் காற்றுப் புகாதவாறு களிமண் பூசி அடைத்து அவற்றை மண்ணில் புதைத்துவைத்தனர். இச்செயல்முறைகளைப் புறநானூறு 120 மற்றும் 129ஆம் பாடலிலும் மலைபடுகடாம் 463ஆம் பாடலிலும் காணமுடிகின்றது.
மதுவுக்கு எப்போது “கிக்“ (சுள்ளாப்பு) ஏறும் என்பது பற்றியும் சங்க இலக்கியம் குறிப்பிட்டுள்ளது. இரு பகல் இரண்டு இரவு புளிக்கவைத்தால் மதுவுக்குச் சுள்ளாப்பு மிகுதியாகும் என்பதனைப் பெரும்பாணாற்றுப்படையின் 279 முதல் 281 வரையிலான அடிகள் தெரிவித்துள்ளன. நீண்ட நாள்கள் புளிக்கவைத்த மதுவின் சுள்ளாப்பு தேள் கொட்டியது போல நாவில் ஏறும் என்று புறநானூற்றின் 392ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.
“கள்“ என்பது தென்னை அல்லது பனை பாளைகளைச் சீவி அதிலிருந்து வடியும் நீர்மத்தை மண்பாண்டத்தில் சேகரித்து அதனைப் புளிக்கவைத்து உண்பதாகும். பனை மரத்திலிருந்து கள் வடிக்கப்பட்ட செய்தியினை நற்றிணையின் 323 ஆம் பாடல் தெரிவித்துள்ளது. அக்கள்ளினைப் பருகி தன்னிலை மறந்து ஆடிய மக்கள் பற்றி அகநானூற்றின் 256, பட்டினப்பாலையின் 89, நற்றிணையின் 38 ஆகிய பாடல்கள் குறிப்பிட்டுள்ளன. சங்க இலக்கியத்தில் “கள்“ என்று வெறுமனே குறித்தால் அது தென்னங்கள்ளையே குறிக்கும். “பனங்கள்“ என்று குறித்தால் மட்டுமே அது பனைமரத்தின் கள்ளினைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும்.
“தேறல்“ என்பது நாரால் வடிகட்டித் தெளிய வைக்கப்பட்ட “கள்“ ஆகும். பார்ப்பவர் முகம் தெரியுமாறு தெளியவைக்கப்படும் தேறலைப் “புறத்தேறல்“ என்று புறநானூற்றின் 398ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.
“தேறல்“ என்பதற்குக் “கள்ளின் தெளிவு“ என்றும் “தேனின் தெளிவு“ என்றும் இருவகையான விளக்கத்தினைத் தந்துள்ளனர். இதில் எதனைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற தெளிவினைத் திருமுருகாற்றுப்படையின் 195ஆவது அடி தந்துள்ளது. ஆம், அது தென்னை மரத்திலிருந்து இறக்கப்பட்ட கள்ளின் தெளிவு என்று பொருள்கொள்வதே சிறப்பு.
கள்ளினைத் தம் வீரர்களுக்கும் கள்ளின் தெளிவினைத் (தேறல்) தானும் உண்டான் தலைவன் என்ற செய்தி புறநானூற்றின் 298ஆம் பாடலில் இடம்பெற்றுள்ளது. இதில் நாம் ஒன்றினைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். தெளிய வைத்த கள்ளினைவிடத் தெளிய வைக்காத கள்ளில்தான் சுள்ளாப்பு மிகுதியாக இருக்கும். அதனைத்தான் தலைவன் தன் வீரர்களுக்கு வழங்கியிருக்கிறான். தான் சுள்ளாப்பு குறைந்த கள்ளினையே பருகியிருக்கிறான்.
மாம்பழம், தேன், பலாச்சுளை ஆகியவற்றைச் சேர்த்துப் புளிக்கவைத்த கள்ளின் தெளிவுதான் தேறல் என்று குறிஞ்சிப்பாட்டின் 188 முதல் 190 வரையுள்ள அடிகள் தெரிவித்துள்ளன. ஆனால், இவ்வாறு செய்யப்படுவன “அரியல்“ என்று பதிற்றுப்பத்தின் 61ஆவது பாடல் தெரிவித்துள்ளது. ஆனால், அரிசிக் கஞ்சிலிருந்து தயாரிக்கப்படுவதுதான் “அரியல்“ என்று பெரும்பாணாற்றுப்படையின் 275முதல் 281வரையிலான அடிகள் குறிப்பிட்டுள்ளன. இது என்ன புதுக்குழப்பம்? மது என்றாலே குழப்பம்தானே!
வீட்டிலேயே தாயரிக்கப்படும் கள்ளுக்குத் “தோப்பி“ என்று பெயர். நம் வீடுகளில் காப்பி, டீ தயாரிப்பது போல அக்காலத் தமிழர்கள் “தோப்பி“ தயாரித்தார்கள்போலும். இதனைப் பெரும்பாணாற்றுப்படையின் 142ஆவது அடி தெரிவித்துள்ளது. வீட்டில் தயாரிக்கப்பட்டாலும் அதன் வீரியம் குறைவதில்லை. தோப்பி நன்கு முற்றியிருந்தால் அது பாம்பின் நஞ்சு உடலில் ஏறுவது போலச் சுள்ளாப்பினைத் தரும் என்று அகநானூற்றின் 348ஆவது பாடல் தெரிவித்துள்ளது.
காரைப் பழத்தினைப் பிழிந்து “காந்தாரம்“ என்ற மதுவினைத் தயாரித்துள்ளனர். இது திராட்சைச் சாறுபோலக் கரிய நிறமுடையது. காந்தாரம் பற்றிய குறிப்பு புறநானூற்றின் 258ஆவது பாடலில் உள்ளது.
“மட்டு“ என்பது சுள்ளாப்பு குறைந்த மதுவகையாக இருந்துள்ளது. இதனைப் பெண்கள் உண்டுள்ளனர். அவர்களுக்கு அச்சுள்ளாப்பு மிகவும் குறைவாக இருந்ததால் தன் கணவர் உண்ணும் சுள்ளாப்பு மிகுந்த மதுவினை அருந்தியதாகப் பட்டினப்பாலையின் 108ஆவது அடி தெரிவித்துள்ளது.
நிறம் மாறிய மட்டுவை “மட்டம்“ என்றனர். இது நீல மணியின் நிறத்தைப் பெற்றிருக்கும். இதுபற்றிப் பதிற்றுப்பத்தின் 12ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.
பசுவின் நெய்போன்ற மதுவுக்கு “வேரி“ என்று பெயர். இது பற்றிப் புறநானூற்றின் 152ஆவது பாடல் சுட்டியுள்ளது.
பண்டைத் தமிழர் மிகுதியான கள்ளினைக் கொண்டுசெல்ல வண்டிகளைப் பயன்படுத்திய செய்தியை அகநானூற்றின் 126ஆவது பாடல் தெரிவித்துள்ளது. இந்திய விடுதலைக்கு முன் தமிழகத்தில் “கள்வண்டிகள்“ புழக்கத்தில் இருந்தன. அவை சங்கத் தமிழரின் மதுமயக்கத்தின் குறியீடாகத் தள்ளாடித் தெருவலம் வந்தன. அக்காலத்தில் “கள்ளுக்கடைகள்“ இருந்தமை பற்றிய செய்தியைப் பதிற்றுப்பத்தின் 75ஆவது பாடல் குறித்துள்ளது.
“இங்குக் கள்ளுக் கடை உள்ளது“ என்பதனை அறிவிப்பதற்காக அடையாளக் கொடிகளையும் அக்காலத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். இப்போது ஃபிளக்ஸ் பேனர் வைப்பதுபோல. இச்செய்தியினைப் பட்டினப்பாலையின் 180, 181ஆகிய அடிகளும் மதுரைக்காஞ்சியின் 372ஆவது அடியும் தெரிவித்துள்ளன.
அக்கால மக்கள் கடனுக்குக் கள்வாங்கிக் குடித்தும் பின்னர் கைக்குப் பொருள் கிடைத்ததும் அதனைக் கொண்டு அக்கள்ளுக் கடனினை அடைத்த செய்திகளைப் பெரும்பாணாற்றுப் படையின் 140, 141 ஆகிய அடிகளும் பதிற்றுப்பத்தின் 20ஆவது பாடலும் குறிப்பிட்டுள்ளன.
கள்ளுக்குக் விலையாக (பண்டமாற்று) நெல்லும் யானைத் தந்தமும் பசுவும் தேனும் கிழங்கும் கொடுத்துள்ளனர். இதனை மலைபடுகடாமின் 462 முதல் 464 வரையிலான அடிகளும் பதிற்றுப்பத்தின் 30ஆவது பாடலும் பெருநராற்றுப்படையின் 214, 215ஆகிய அடிகளும் உறுதிசெய்துள்ளன.
இன்னபிற உணவு
பெரும்பாணாற்றுப்படையின் 307 முதல் 310 வரையிலான அடிகளில் “மாங்காய் ஊறுகாய்“ செய்து, உண்ட செய்தி கூறப்பட்டுள்ளது.
கரும்பினை எந்திரங்களினால் பிழிந்த செய்தியைப் புறநானூற்றின் 99ஆவது பாடலும், அதன் சாற்றினைக் கட்டியாக்கி இனிப்புக்குப் பயன்படுத்திய தகவலைப் பெரும்பானாற்றுப்படையின் 259ஆவது பாடலும் குறிப்பிட்டுள்ளன.
குறிஞ்சி நில மக்களுக்குத் தேன் முதன்மையான உணவாக இருந்துள்ளது.
நெய்தல்திணை மக்கள் குழல் மீனினைக் காயவைத்து அதனைக் கருவாடாக்கி உண்டசெய்தியை சிறுபாணாற்றுப்படையின் 163ஆவது அடி தெரிவித்துள்ளது.
அசைவ உணவு (புலால்)
பழந்தமிழர் அசைவ உணவினைப் (இறைச்சியைப்) பைந்தடி, ஊன், பைந்துணி எனப் பலப் பெயர்களால் குறிப்பிட்டுள்ளனர்.
பசுவின் இறைச்சியினைப் பாறையில் காயவைத்து உண்டதாக அகநானூற்றின் 390ஆவது பாடல் கூறியுள்ளது.
இறைச்சியினை “உப்புக்கண்டம்“ போட்டும் உண்டுள்ளனர். அதனை இப்போது “கொடியிறைச்சி“ என்று சில பகுதிகளில் குறிப்பிடுகின்றனர். அதாவது, இறைச்சியைக் காயவைத்துப் பதப்படுத்தி அதனை உணவுக்குப் பயன்படுத்துவது. இதனைப் பழந்தமிழர் “வாடூன்“ என்று குறிப்பிட்டுள்ளனர். புறநானூற்றின் “இரும்புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்“ என்ற அடி உறுதிசெய்கின்றது. இதனை அக்காலத்தில் “உணங்கல்“ என்றும் அழைத்துள்ளனர்.
இறைச்சியைப் பொரித்து உண்ணும் பழக்கமும் அக்காலத் தமிழரிடம் இருந்துள்ளது என்பதற்குப் புறநானூற்றின் 389ஆவது சான்றாக உள்ளது. இறைச்சியைப் பொரிக்கும் போது எழும் ஓசையானது நீர் நிறைந்த பொய்கையில் (தடாகம்) மழைத்துளி விழுவது போல இருந்தது என்று அப்பாடல் குறிப்பிட்டுள்ளது.
இறைச்சியை இரும்புக் கழியில் கோத்து, அதனைத் தீயில் வாட்டி சமைத்து உண்டுள்ளனர். இதற்குச் சான்றாகப் பொருநராற்றுப்படையின் 105ஆம் பாடலும் அகநானூற்றின் 169ஆம் பாடலும் உள்ளன.
வீரர்கள் இறைச்சியை மிகுதியாக உண்டதால் அவர்களின் பற்கள் கலப்பையின் கொழு தேய்வதைப் போலத் தேய்ந்து மழுங்கியதாகப் பொருநராற்றுப்படை என்ற இலக்கியம் சுட்டியுள்ளது.
புறநானூற்றின் 395ஆம் பாடல் “உவியல்“ என்ற ஓர் உணவுப் பண்டத்தை வாளைமீனின் சதையிலிருந்து செய்துள்ளமையைத் தெரிவித்துள்ளது.
சைவ – அசைவ கலப்பு உணவு
பழந்தமிழகத்தின் மருத நில மக்கள் சைவ – அசைவ உணவுகளைக் கலந்து உண்டுள்ளனர். சிறுபாணாற்றுப்படையின் 195ஆம் அடியில் வேகவைத்த நண்டுக்கறியுடன் பீர்க்கங்காயைக் கலந்து விருந்தளித்த செய்தி காணப்படுகின்றது.
புறநானூற்றின் 60ஆம் பாடல் மற்றும் 119ஆம் பாடல் ஆகியன இருவேறு வகையாகப் புளிக்கறி சமைத்த விதத்தினைப் புலப்படுத்தியுள்ளன. முன்னது அயிலை மீனைக் கொண்டும், பின்னது செம்புற்றீயலைக் கொண்டும் புளிக்கறி சமைத்து அதனைச் சோறுடன் இணைத்து உண்டுள்ளனர்.
உணவே வாழ்க்கை
பழந்தமிழர்கள் எவ்வாறெல்லாம் அசைவ உணவுகளை உண்டனர் என்ற செய்தியினைப் பெரும்பாணாற்றுப்படையின் 255 மற்றும் 280ஆவது பாடல், குறுந்தொகையின் 320ஆம் பாடல், பட்டினப்பாலையின் 63ஆவது பாடல் நற்றிணையின் 60ஆவது பாடல் ஆகியன விரிவாகக் கூறியுள்ளன.
அக்காலத் தமிழர் அசைவ உணவுப் பட்டியலில் மீன் வகைகள் பறவை வகைகள் எனப் பல இனங்களும் இருந்தனர். அக்காலத் தமிழருக்குப் பசுதான் சிறந்த அசைவ உணவாக இருந்துள்ளது. அதாவது, திராவிடர்களின் சிறந்த அசைவ உணவு பசு. அக்காலத்திலும் தமிழகத்து அந்தணர்கள் (அக்காலத்தில் “அந்தணர்“, “பார்ப்பார்“, “ஐயர்“ ஆகிய சொற்கள் சாதியையோ குலத்தையோ குறிக்கவில்லை. இச்சொற்கள் சான்றோரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. “சான்றோர்“ என்றால், கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர் என்பதாகும்) அசைவ உணவினை உண்ணமாட்டார்கள். பிற்காலத்தில் தமிழகத்தில் பிறக்காத அந்தணர்கள் பசுவைத் “தெய்வம்“ என்று நமக்குக் கற்பித்து, அதனை நம் அசைவ உணவுப் பட்டியலிலிருந்து நீக்கச் செய்தனர். தமிழர்கள் தம் உணவில் பசுவை இழந்தது ஒரு துன்பியல் நிகழ்வுதான்.
- – -