சங்க காலம் / தேடல் - 11
உணவளிக்கும் பண்பு
தொல்தமிழர்கள் தம் வாழ்வில் ஒருவேளை உணவுக்குக்கூடப் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டவர்கள். அப்படியிருக்க, அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் தம்மை நாடிவந்தோருக்கு மிகுதியாக உணவளித்துள்ளனர். அரும்பாடுபட்டுப்பெற்ற உணவினைப் பிறருக்கு வழங்கி மகிழும் பண்பு அவர்களுக்கு எப்படி வந்தது?
அவர்கள் எத்தகைய உணவினை, எவ்விதத்தில், எவருக்கெல்லாம் வழங்கினர் என்பதனைச் சங்க இலக்கியப் பாடல்கள் பல விரிவாகக் கூறியுள்ளன. அவை விருந்தினை மிகைப்படுத்திப் பாடினாலும், அவற்றின் உள்ளார்ந்த சாரத்தை நம்மால் மறுக்கமுடியாது. உணவினைத் தேடுவதில் தமிழரின் வீரம் மிளிர்கிறது. அவ் உணவினைப் பலரோடு பகிர்ந்துண்பதில் அவர்களின் கொடைப் பண்பு சிறப்படைகிறது. தமிழரின் வாழ்வைக் “காதலும் வீரமும்“ என்று சொல்வதைவிட “வீரமும் கொடையும்“ என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். ஆம்! இது உணவுக்கொடை. கொடைகளுள் சிறந்தது – தலையாயது.
விருந்து உருவாக்கம்
சங்க காலத்தில் இனக்குழுக்களாக வாழ்ந்த தமிழர்கள் தாங்கள் வேட்டையில் பெற்ற, கொள்ளையடித்துப் பெற்ற உணவுகளைக் கொண்டுவந்து தங்களின் குழுவினரிடையே பகிர்ந்துகொண்டனர். எஞ்சியவற்றைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கத் தெரியாததால், தங்கள் குழுவினர் அல்லாதோருக்குக் கொடையாக வழங்கியுள்ளனர்.
தொல்காப்பியத்தில் உள்ள வெட்சித்திணை துறைகளுள் இறுதியாக “பாதீடு, உண்டாட்டு, கொடை“ என்ற மூன்றும் இடம்பெற்றுள்ளன. “பாதீடு“ என்பது, இனக்குழுக்கள் உணவுகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளுதல். “உண்டாட்டு“ என்பது, கள்ளுண்டு மகிழ்தல். “கொடை“ என்பது, தங்களை நாடிவரும் பிற இனக்குழுவினருக்கு இலவசமாக வழங்குதல். இதனை நற்றிணையின் 85, 336 ஆகிய பாடல்கள் குறிப்பிட்டுள்ளன.
உணவைக் கொடையாக வழங்கும் செயல் பெரிய அளவில் நடைபெறும்போதும் உணவினைக் கொடையாகப் பெற்றவர்கள் அங்கேயே இருந்து உண்டபோதும் அவ் உணவுக்கொடை, விருந்தாகப் பரிணமித்தது.
நூலின் வனப்பு இயல்புகள் எட்டனுள் ஒன்று “விருந்து“ என்று தொல்காப்பியம் சுட்டியுள்ளது. அதாவது, மரபார்ந்த நூலாக்க முறையைவிடப் புதிதாக ஒரு நூல் உருவாக்கப்படுமானால் அதற்குப் பெயர் விருந்து. புதிதாக வருவது விருந்து. புது வரவு என்பதுபோல. புதிதாக வருபவர் விருந்தினர். அவ்விருந்தினருக்கு உணவளித்தல் விருந்து. இவ்வாறுதான் “விருந்து“ என்ற சொல்லுக்கு விளக்கம் அளிக்கநேர்கிறது.
வாங்க சாப்பிடலாம்!
பெரும்பான்மையாக இந்த உணவுக்கொடை ஓர் இனக்குழுவுக்கும் பிரிதொரு இனக்குழுவுக்கும் ஒரு பாலமாக இருந்துள்ளது. உணவால் உருவாக்கப்பட்ட இந்த உறவு அவர்களுக்குள் நட்புறவை ஏற்படுத்தி, ஒற்றுமையைக் கொண்டுவந்தது. வேட்டைக்காகவோ அல்லது உண்வுப்பொருள் தேடியோ தொலைதூரம் செல்லும் இனக்குழுக்களுக்குப் பிற இனக்குழுக்கள் உணவும் உறைவிடமும் நல்கியுள்ளன. இதனை அகநானூற்றின் 187ஆவது பாடலில் காணமுடிகின்றது.
இந்த விருந்துமுறை பின்னாளில் அவர்களுக்குள் புறமணமுறையையும் தோற்றுவித்தது. இருவேறு இனக்குழுவைச் சார்ந்த தலைவன் – தலைவியர் சந்தித்து மகிழும்போது தலைவி, தலைவனைத் தன் இல்லத்துக்கு உணவு உண்ண அழைப்பதும் (அகநானூறு-200, 300), தலைவியிடம் தலைவன் உன் வீட்டுக்கு உணவு உண்ண வரலாமா என்று வினவுவதும் (அகநானூறு-110) தலைவிக்காகத் தோழி, தன் தலைவியின் தலைவனை விருந்துண்ண அழைப்பதும் (அகநானூறு-340, குறுந்தொகை–179, நற்றிணை-276) வெறுமனே உண்டு, உறங்க அல்ல. தலைவன்-தலைவியின் காதல் நெருக்கத்துக்கு வழிவகுக்கத்தான். இவற்றின் வழியாகத் தலைவன், தலைவியின் வீட்டாரிடம் நெருங்கிப் பழகவும் பின்னாளில் தலைவியைப் பெண்கேட்டு வரவும் வழிவகை ஏற்படுகின்றது.
மன்னன் கோப்பெருநற்கிள்ளி மானை வேட்டையாடி அதன் கறியினைத் தீயில் வாட்டிப் புலவர்களுக்கு உணவளித்த செய்தியைப் புறநானூற்றின் 150 மற்றும் 152ஆவது பாடல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
தற்காலத்தில் விருந்தினருக்கு முதலில் எலுமிச்சைச் சாறு தருவதுபோல அக்காலத்தில் விருந்தினருக்கு முதலில் தரப்படுவது மது. அதனைக் குடித்து மகிழ்ந்த பின்னர் அவர்களுக்குப் புலால் உணவினை வழங்கியுள்ளனர்.
பொருநராற்றுப்படையின் 85 முதல் 89 வரையிலான அடிகள், விருந்தினர்கள் (வழிப்போக்கர்கள்) மதுவை மாந்தி மகிழ்ந்த செய்தியைத் தடுமாற்றம் இன்றிக் குறிப்பிட்டுள்ளன.
அருகம்புல்மேய்ந்து கொழுத்த செம்மறிஆட்டுக்கறியினைச் சுடச்சுட விருந்தினருக்கு வழங்கிய செய்தியையும் விருந்தினர்கள் அக்கறியினைத் தம் வாய்க்குள்ளேயே ஆறவைத்து உண்ட செய்தியையும் பொருநராற்றுப்படையின் 103 முதல் 108 வரையிலான அடிகள் படம்பிடித்துக் காட்டியுள்ளன.
மலைபடுகடாமின் 164 முதல் 169 வரையிலான அடிகள் விருந்தினருக்குத் தினையரிசிச் சோற்றினை நெய்யில் பொரித்த புலாலுடன் கலந்து அளித்ததாகத் தெரிவித்துள்ளன.
நெல் விளையாத புன்புலச் சீறூரில் விளைய வைத்த வரகையும் தினையையும் முற்றிலுமாக இரவல் மாக்களுக்குத் தந்தாலும்கூட, தன்னிடம் வந்தவர்க்குக் கிண்ணத்தில் தயிரும் களாப்பழம் போலப் புளிக்கும் கள்ளும் வாடூனும் வரகரிசியோடு நெய்யிட்டுச் சமைத்த வெண்கோற்றுக்களியையும் வழங்கிய சீறூர் மன்னர் பற்றிய செய்தியினைப் புறநானூற்றின் 328ஆம் பாடல் உரைத்துள்ளது.
விருந்தினர் வராத நாள்களை வீண் நாள்களாகப் பண்டைத்தமிழர்கள் கருதியுள்ளனர். தங்களுக்கு அமிர்தம் கிடைத்தாலும் அதனை விருந்தினரோடு பகிர்ந்து உண்ணவே அவர்கள் விரும்பியுள்ளனர். இதனைப் புறநானூற்றின் 182ஆவது பாடல் தெரிவித்துள்ளது.
தாங்கள் நெடுவழிப்பயணம் மேற்கொள்ளும்போது தங்களுடன் மூங்கில் குழாய்களில் அடைத்தும் தம்முடன் அழைத்துச்செல்லும் கால்நடைகளின் கழுத்தில் பல்வேறு உணவுகளைச் சுமத்தியும் செல்வர். அவை, அவர்கள் செல்லும் வழியில் யாராவது வழிப்போக்கர்கள் பசியுடன் எதிர்ப்பட்டால் அவர்களுக்கு அளிப்பதற்காகத்தான். இதனை அகநானூற்றின் 311ஆவது பாடல் உறுதிசெய்துள்ளது.
எப்படிக் கவனித்துக்கொண்டனர்?
பொருநர்கள் விருந்துக்குச் சென்ற இடத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்ட உணவுவகையறாக்கள் குறித்துப் பொருநராற்றுப்படையின் 113 முதல் 116 வரையிலான அடிகளில், வேகவைத்ததும் விரல்போல் நிமிர்ந்து நிற்கும் கடினமற்ற அரிசிச் சோற்றைப் பாலில் கலந்து, பொரிகறிகள் மற்றும் புளிக்கறியுடன் சேர்த்துத் தங்களுக்கு வழங்கப்பட்டதாகப் தெரிவித்துள்ளனர்.
பொருநராற்றுப்படையின் 74 முதல் 78 வரையிலான அடிகள் எவ்வாறு விருந்தினரைக் கவனிக்கவேண்டும் என்று விவரித்துள்ளன. விருந்தினருடன் நட்புறவுடன் இனியசொற்களைப் பேசி, புதிதாகக் கன்றினை ஈன்ற பசு எவ்வாறு தன் கன்றுடன் நெருங்கிப் பரிவுகாட்டுமோ அவ்வாறு அணுகி, அவர்களின் எலும்பும் குளிரும்படியாக அன்புசெலுத்துதல் வேண்டும் என்று அந்த இலக்கிய அடிகள் தெரிவித்துள்ளன.
பெரும்பாணாற்றுப்படையின் 477 முதல் 479 வரையிலான அடிகள் எவ்வாறு விருந்தினருக்கு உணவளிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. விருந்தினருக்கு இரவில் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களைப் போல பல்வேறு வகையான உணவுகளைத் தனித்தனிக் கிண்ணங்களில் வைத்து, அவர்களுக்கு அருகே அமர்ந்து, அவர்கள் விரும்பியவற்றை உய்த்தறிந்து, அவர்களுக்குப் பரிமாறி உணவளிக்க வேண்டும் என்று மேற்குறிப்பிட்ட அடிகள் சுட்டியுள்ளன.
விருந்தினரை வழியனுப்பும்போது அவர்களுக்குக் குதிரை பூட்டிய தேரினைப் பரிசளிப்பதும் உண்டு. இதனைக் குறுந்தொகையின் 205ஆவது பாடல் உறுதிசெய்துள்ளது.
விருந்தினருடன் ஏழு அடிகள் முன்சென்று அவர்களை வழியனுப்பி வைப்பது சங்கத் தமிழரின் பண்பாடுகளுள் ஒன்றாக இருந்துள்ளது. இதுபற்றிப் பொருநராற்றுப்படையின் 164 மற்றும் 165ஆவது அடிகள் விளக்கியுள்ளன.
விருந்து வைத்தே தீருவேன்!
தன்னைக் காணவந்தோருக்கும் ஏதுமில்லாது வருந்திவந்தோருக்கும் தன்னால் இயன்ற விருந்தினை நல்கியுள்ளனர். அதற்காகத் தம்பொருளினைப் பணையமும் வைத்துள்ளனர். முதல் நாள் தன்னுடைய வாளையும் மறுநாள் தன்னுடைய கரிய சீறி யாழினையும் ஒரு பாணர் பணையப் பொருளாக வைத்து விருந்து பேணியதனைப் புறநானூற்றின் 316ஆம் பாடல் காட்டியுள்ளது.
ஓர் இனக்குழுத்தலைவன் தான் வறுமையில் வாடும்போதும் தன்னை நாடிப் பசியுடன் வந்த பாணருக்கு வரகினைக் கடனாகப் பெற்று உணவு படைத்த செய்தியினைப் புறநானூற்றின் 327ஆம் பாடல் தெரிவித்துள்ளது.
வீட்டிலிருந்த வரகு, தினை என எல்லாவற்றையும் இரவலர்க்கு உண்ணக் கொடுத்துவிட்டதால் கதிரில் முற்றிக் காய்ந்த விதைத் தினையை உரலில் இட்டு, இடித்து, சமைத்து அவ்வூர்த் தலைவனின் மனைவி உண்டதாகப் புறநானூற்றின் 333ஆவது பாடல் கூறியுள்ளது.
விருந்தளிக்கப் பெருவிருப்பம் கொண்டு, அதற்காகப் பொருளீட்டி வருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பொருள் தேடச் சென்ற சங்கத் தமிழர் பற்றி அகநானூற்றின் 205ஆவது பாடல் எடுத்துரைத்துள்ளது.
ஒவ்வொருநாளும் தன் வீட்டின் தலைவாசல் கதவினை அடைக்கும் முன்னர், வீதிகளில் யாரேனும் புதியவர்கள், விருந்தினர்கள் (அதிதிகள்) வருகிறார்களா என்று உற்றுநோக்கி, அவ்வாறு யாரேனும் வந்தால் அவர்களுக்கு உணவளித்த பின்னரே உறங்கச் சென்றுள்ளனர். இதனை நற்றிணையின் 142ஆவது பாடல் குறிப்பிட்டுள்ளது.
தலைவியின் வீட்டிற்குத் தலைவன் விருந்துண்ண வருவது தலைவியின் வீட்டாருக்கு அதிர்ச்சியையும் வழங்கியுள்ளது. தலைவன் ஒருநாள் மட்டும் விருந்தினராகத் தலைவியின் வீட்டில் உண்டு, தங்குகிறான். அதனால் மனநலம் சிதறிய தலைவியின் தாய், போர் நிகழும் இடத்துக்கு அருகில் உள்ள ஊராரைப்போலப் பலநாள் உறங்காது தவித்திருக்கிறாள். இதனை குறுந்தொகையின் 292ஆவது பாடல் தெரிவித்துள்ளது.
விருந்தும் விதிமுறைகளும்
தலைவனும் தலைவியும் இணைந்து தன்னினத்தினருக்கும் பிற இனத்தினருக்கும் விருந்துபடைத்த நிலை காலவோட்டத்தில் மறுபடத்தொடங்கியது. ஒருவகையில் இம்மாற்றம் விருந்து படைத்தல் சார்ந்த விதிமுறையாகவும் கைக்கொள்ளப்பட்டது.
தலைவன் இல்லாதபோது தலைவிமட்டும்கூட தனித்த நிலையில் விருந்துபடைத்த செய்தியைப் புறநானூற்றின் 319, 326 ஆகிய பாடல்கள் குறிப்பிட்டுள்ளன.
தலைவன் இல்லாதபோது தலைவி யாருக்கும் விருந்துபடைக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை நற்றிணையின் 81, 361 ஆகிய பாடல்களும் ஐங்குறுநூற்றின் 442ஆவது பாடலும் சுட்டியுள்ளன.
ஏன் இத்தகைய விதிமுறைகள் தோற்றம் பெற்றன? இதற்கு விடையாக, “சமூகத்தின் ஒரு பண்பாட்டுக் கூறு ஒரு சமூகத் தேவை கருதித் தோற்றம் கொள்ளும். அச்சமூகத் தேவை நிறைவெய்திய பின்னர் அப்பண்பாட்டுக் கூறு அழிந்துவிடும். அல்லது உருமாறிப் போகும். இது சமூக நடப்பியல். விருந்து என்னும் பண்பாட்டுக் கூறு பரிமாற்றம் எனும் சமூகத் தேவை கருதித் தோற்றம் கொண்டது. பரிமாற்றம் என்பதன் அடிப்படைத் தன்மைகள் சங்க கால அரசியல், சமூக, பொருளாதார, சமயக் காரணிகளால் மாற்றம் பெறவே விருந்தும் தன்னை உருமாற்றிக்கொண்டது“என்று சிலம்பு நா. செல்வராசு கூறியுள்ள கருத்து சிந்திக்கத்தக்கது.
தலைவன் – தலைவி இணைந்து வழங்கிய விருந்து பொதுவுடைமைச் சமுதாயத்தின் பிரதிபலிப்பு எனலாம். தலைவன் இல்லாதபோது தலைவி வழங்கிய விருந்து தாய்வழிச் சமுதாயத்தின் “அதிகாரநிலை“ எனலாம். தலைவன் இல்லாதபோது தலைவி விருந்து படைக்கக்கூடாது என்பது தந்தைவழிச் சமுதாயத்தின் “அடக்குமுறை“ எனலாம்.
உட்சுவை குறைந்த விருந்து
“விருந்து“ என்ற ஒன்று தோற்றம்பெறாதபோது, இனக்குழுக்கள் தங்களுக்குள் மட்டும் உணவினைப் பங்கீடு செய்துவந்தன. அப்போது, அவர்களுக்குள் அகமணமுறைமட்டுமே நிலவியது. அந்நிலையில் அவர்கள் வேட்டைச் சமூகமாக இருந்ததால், அசையும் மற்றும் அசையாச்சொத்துக்கள் என எவையும் பெரிய அளவில் அவர்களிடம் இல்லை.
“விருந்து“ என்ற ஒன்று தோன்றிய பின்னர், பிற இனக்குழுக்களுடனான உறவு பேணப்பட்டது. அதன் பின்விளைவாகப் புறமணமுறை உருவானது. வேட்டைச் சமுதாயம் ஆநிரை வளர்ப்புச் சமுதாயமாகப் பரிணமித்த சூழிலில், அவர்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் பெரிய அளவில் உருவாகின. புறமணமுறையால் ஓர் இனக்குழுவுக்குள் இருந்த அசையும் மற்றும் அசையாச் சொத்து பிற இனக்குழுவுக்குச் சென்றுசேர்ந்தன.
தன்குழுவினரின் சொத்து பிறகுழுவினருக்கு உரிமையுடையதாக மாற மூலக்காரணியாகத் திகழும் விருந்தினைக் கட்டுப்படுத்த விரும்பினர். விருந்திற்கான வரைமுறைகளை, விதிகளை உருவாக்கினர். அதனால், விருந்தின் “உட்சுவை“ குறைந்தது.
- – -