1) தமிழக அரசியல் வரலாறு / ஆர். முத்துக்குமார்
இரு பாகங்களில் வெளிவந்திருக்கும் புத்தகம். முதல் பாகம் 1947 தொடங்கி எமர்ஜென்ஸி வரையிலான காலகட்டத்தைப் பற்றியது. இரண்டாவது பாகம், எம்ஜிஆர் ஆட்சிக்காலம் தொடங்கி 2000 வரையிலானது. ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்தியா படிப்படியாக பிராந்திய கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து சேர்ந்த கதையின் ஒரு பகுதி இதில் விவரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் தோன்றியது எப்படி, திமுகவும் அதிமுகவும் போட்டிக்கட்சிகளாக வளர்ந்த பின்னணி என்ன, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற சாதிக் கட்சிகள் எப்படித் தோன்றின, தேர்தல் களத்தில் வெற்றி, தோல்விகள் எப்படித் தீர்மானிக்கப்படுகின்றன ஆகியவை இந்தப் புத்தகங்களில் எளிமையாக விவரிக்கப்பட்டுள்ளன.
எம்ஜிஆர் தொடங்கிவைத்த கவர்ச்சிவாதம் (populism) எப்படி அரசியல் களத்தை உருமாற்றியது என்பதை அறிந்துகொள்வது முக்கியமானது. ஆந்திராவில் என்டிஆர் ஆட்சியைப் பிடித்தது இப்படித்தான். இன்றும்கூட கவர்ச்சிவாதம்தான் ஓட்டு வங்கிகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. அதை மட்டுமே கொண்டு ஆட்சியாளர்கள் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
காவிரி பிரச்னை, தென் தமிழகத்தின் சாதிப் பிரச்னைகள், ஈழம், கச்சத்தீவு என்று தமிழகத்தின் அரசியல் களத்தில் அழுத்தமாகத் தடம் பதித்த பல விஷயங்களின் பின்னணியை முத்துக்குமார் தனது நூல்களில் பதிவு செய்துள்ளார்.
2) இந்திய அரசியல் வரலாறு / வி. கிருஷ்ணா அனந்த் / தமிழில் : ஜனனி ரமேஷ்
சுதந்தரத்துக்குப் பிறகான இந்திய அரசியலை விவாதிக்கும் கிருஷ்ணா அனந்த் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இது. தமிழக அரசியல் வரலாற்றோடு இணைத்து வாசிக்கவேண்டிய புத்தகம் இது. தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் டெல்லியில் நடைபெற்ற மாற்றங்களுக்கும் உள்ள நேரடி மற்றும் மறைமுகத் தொடர்புகளை இந்நூலில் இருந்து தெரிந்துகொள்ளமுடியும். இப்போதுதான் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன் என்பதால் புத்தகம் குறித்த விமரிசனத்தைப் பிறகு பார்க்கலாம்.
இந்திய அரசியல் தொடர்ந்து ஆர்வமூட்டக்ககூடியதாகவே இருக்கிறது. இந்திய எழுத்தாளர்கள் மட்டுமல்ல, பல வெளிநாட்டு எழுத்தாளர்களும்கூட தொடர்ந்து இந்தியா குறித்து ஆய்வு செய்துகொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். பாட்ரிக் ஃபிரெஞ்ச், வில்லியம் டார்லிம்பிள், மார்க் டுல்லி போன்றோரை உதாரணமாகச் சொல்லலாம். இந்திய எழுத்தாளர்களிடையே சர்வதேச கவனம் பெற்றவர், சமீபத்தில் ராமச்சந்திர குஹா. கிருஷ்ணா அனந்தின் நூலை குஹாவின் நூலோடு ஒப்பிடலாம். ஒரே ஒரு வித்தியாசம். ராமச்சந்திர குஹாவைப் போன்ற ஈர்க்கும் எழுத்து நடை கிருஷ்ணா அனந்திடம் இல்லை.
தமிழக அரசியல், இந்திய அரசியல் இரண்டையும் விவரிக்கும் மேற்காணும் நூல்கள் நிச்சயம் நல்ல வாசிப்பனுபவத்தை அளிக்கும்.
0