1) பிரபல கொலை வழக்குகள் / SP. சொக்கலிங்கம்
தமிழ்பேப்பரில் தொடராக வெளிவந்த வழக்குகளின் புத்தக வடிவம். நூலாசிரியர் SP. சொக்கலிங்கம் ஒரு வழக்கறிஞர். அவர் கவனம் செலுத்திவரும் துறை காப்புரிமை தொடர்புடையது என்றாலும் சிவில், கிரிமினல் குற்றவியல் துறைகளில் அவருக்கு ஈடுபாடு அதிகம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் திறன் படைத்தவர்.
எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு, இறந்துபோன ஒரு சமஸ்தானத்து இளவரசர் ஒரு மர்ம சந்நியாசியாகத் திரும்பி வந்த கதை, ஜின்னா வாதாடிய வழக்கின் விவரங்கள், தமிழகத்தை ஒரு காலத்தில் உலுக்கியெடுத்த விஷ ஊசிக் கொலை வழக்கு ஆகியவை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
இப்போது வெளிவந்திருப்பது பிரபல கொலை வழக்குகள் பற்றிய முதல் பாகம் மட்டுமே. தொடர்ச்சியாக மேலும் பல வழக்குகள் குறித்து தமிழ்பேப்பரில் இவர் எழுதவிருக்கிறார். இதுவும் புத்தக வடிவம் பெறும்.
200 பக்கங்கள் / விலை ரூ.140
2) மோட்டார் சைக்கிள் டைரி / மருதன்
தமிழ்பேப்பரில் வெளிவந்த மற்றொரு தொடரின் நூல் வடிவம். தனது பயணங்கள் குறித்து எர்னஸ்டோ சே குவேரோவே விரிவாக எழுதிவிட்ட பிறகு இன்னொரு புத்தகம் எதற்கு? ஏனென்றால், ஒருவரை அவருடைய எழுத்துகளை மட்டுமே வைத்துக்கொண்டு புரிந்துகொள்ளமுடியாது.
இந்தப் புத்தகத்தில் கீழ்வரும் அம்சங்கள் இடம்பெறுகின்றன.
* எர்னஸ்டோ பயணம் மேற்கொண்டதன் பின்னணி.
* தென் அமெரிக்க நாடுகளில் அவர் மேற்கொண்ட பயணம் குறித்த விவரங்கள்.
* லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக, அரசியல் பின்னணி.
* இந்தப் பயணத்தின் வாயிலாக எர்னஸ்டோ கற்றது என்ன?
* எர்னஸ்டோ என்னும் மருத்துவக் கல்லூரி இளைஞர் சே குவேராவாக மாறுவதற்கு இந்தப் பயணம் எந்த வகையில் உதவியது?
எர்னஸ்டோ எழுதிவைத்த குறிப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டடைவது சாத்தியமில்லை. ஜான் லீ ஆண்டர்சன், ஃபிடல் காஸ்ட்ரோ, எர்னஸ்டோவின் பயணத் தோழர் ஆல்பர்ட்டோ கிரானடோ உள்ளிட்ட பலரின் எழுத்துகள் வாயிலாக எர்னஸ்டோவின் மோட்டார் சைக்கிள் பயணத்தை மதிப்பிடும் முயற்சியே இந்நூல்.
எர்னஸ்டோ எழுதிய பயணக் குறிப்புகள் விடியலில் கனவிலிருந்து போராட்டத்திற்கு என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. அந்தப் புத்தகத்துக்கு இது எந்த வகையிலும் மாற்று அல்ல. மாறாக, அதன் ஒரு பாகத்தைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு சிறு வழிகாட்டி மட்டுமே என் நூல்.
இன்னும் பலருடைய முக்கியப் படைப்புகளுக்கு இப்படிப்பட்ட வழிகாட்டி நூல்கள் தேவை என்று நினைக்கிறேன்.
160 பக்கங்கள் / விலை ரூ.110
0