இந்தியப் பிரிவினை குறித்து தமிழில் வெளிவந்திருக்கும் முக்கியப் பதிவு, மௌனத்தின் அலறல். ஊர்வசி புட்டாலியா எழுதிய The Other Side of Silence என்னும் நூலை கே.ஜி. ஜவர்லால் எளிய, அழகிய நடையில் மொழிபெயர்த்துள்ளார்.
முன்னதாக கிழக்கில் வெளியான ஆண்ட்ரூ வைட்ஹெட் எழுதிய காஷ்மிர் முதல் யுத்தம் புத்தகத்துக்கும் மௌனத்தின் அலறலுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.
- இரண்டுமே நேரடிப் பதிவுகள் (reportage).
- முதல் காஷ்மிர் யுத்தம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் போதவில்லை, நேரடியாகக் களத்துக்குச் சென்று சாட்சியங்களைச் சந்தித்துப் பேசி அவர்களுடைய கதையைப் பதிவு செய்யவேண்டும் என்பது ஆண்ட்ரூ வைட்ஹெட்டின் நோக்கம். ஊர்வசி புட்டாலியாவின் நோக்கமும் இதுவேதான். பிரிவினை குறித்து பல்லாயிரம் பதிவுகள் இருந்தபோதும், பாதிக்கப்பட்ட பெண்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவில்லை என்னும் உந்துதலின் விளைவாக இந்நூல் உருவானது.
- Oral History எனப்படும் முறையில் சாட்சியங்களின் நேரடிப் பதிவுகள் முக்கிய ஆவணங்களாக இந்த இரு நூல்களிலும் உருவாவதைக் காணலாம்.
- இரு நூல்களுமே இதுவரை நாம் அறிந்திராத மனிதர்களையும் இதுவரை சொல்லப்படாத கதைகளையும் நமக்கு அறிமுகம் செய்கிறது.
- ஆவணங்களையும் பிரதிகளையும் மட்டுமே ஆராய்ந்து வரலாற்று நூல்களை உருவாக்கிவிடமுடியாது; களப்பணி அத்தியாவசியமானது என்பதை இந்த இரு நூல்களும் உணர்த்துகின்றன.
- வரலாறு என்பது தலைவர்கள் பற்றியது மட்டுமல்ல, அது சாமானியர்களைப் பற்றியது என்னும் மிகப் பெரிய புரிதலை இந்த இரு நூலாசிரியர்களும் நமக்கு ஏற்படுத்துகிறார்கள்.
காஷ்மிர் முதல் யுத்தம் குறித்து நான் முன்னர் எழுதிய பதிவு.
மௌனத்தின் அலறல், இந்தியப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட பெண்களின் நேரடி வாக்குமூலங்களை உள்ளடக்கிய ஒரு புத்தகம். இதை வாசித்து முடிப்பது மிகவும் கடினம். மொழியல்ல, காரணம். இதிலுள்ள நிகழ்வுகள் நெஞ்சை உலுக்கியெடுக்கக்கூடியவை. அகிம்சையால்தான் சுதந்தரம் பெற்றோம் என்று சாதிப்பவர்கள் ஒருமுறை இதை வாசித்துவிடுங்கள்.
352 பக்கங்கள் / விலை ரூ.250