ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 26
சிறு தொழில் அதிபர்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இப்பொழுது நாம் சொல்லும் செய்தி, இருபாலருக்கும் பொருந்தும். நல்ல கல்விப் பின்னணி மற்றும் அனுபவத்தோடு தொழிலை மேற்கொள்பவர்கள் முதல் வகை. தகுந்த முன்னேற்பாடுகளோ பின்னணியோ இன்றி சுயதொழிலில் இறங்குபவர்கள் இரண்டாவது வகை. முந்தைய பிரிவினரைவிட இவர்களே அதிகம் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இவ்வாறான சிக்கல்களைத் தகுந்த வல்லுனர்களைக் கொண்டு இவர்கள் நிவர்த்தி செய்துகொள்கிறார்கள். தவறான வழிகாட்டுதல்கள் அமைந்துவிட்டால் இவர்களால் பிரச்னையில் இருந்து மீளமுடியாமல் போய்விடுகிறது. இவர்களை மனத்தில் கொண்டு வழிகாட்டும் திறன் கொண்டவர்கள் நிரம்பிய ஓர் ஆய்வுக்கூடங்களை அரசாங்கம் ஏற்படுத்தவேண்டும்.
குறுந்தொழில் அதிபர்கள் பெரும்பாலும், சுற்றுப்புறச்சூழலைப் பற்றியோ, தங்கள் நிறுவனங்களால், தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குச் சங்கடங்கள் ஏற்படுவது பற்றியோ கவலைப்படுவதில்லை என்று ஒரு பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. இதைக் குறைப்பதற்கு குறைந்த செலவில் எரிபொருள் சேமிப்பதற்கும், சுற்றுபுறச்சூழலைப் பாதுகாப்பதற்கும் நல்ல ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதற்கும் வழிமுறைகளை ஏற்படுத்தி, அவர்களை அதை செயல்படுத்துமாறு கட்டாயமாக்கினால், தொழில் வளர்ச்சியோடு சமுதாயமும் பாதுகாக்கப்படும்.
இதன் மூலம் இன்னொரு அனுகூலமும் உண்டு. சுயதொழிலை தீவிரமாக கையாளாமல் மேம்போக்காக அதில் இறங்குபவர்களுக்கு தெளிவான ஒரு செய்தியை அளிக்கமுடிகிறது. கடுமையான சட்டத்திட்டங்களைக் கருத்தில் கொண்டு கவனமாகத் தொழிலைத் தொடரவேண்டும். அல்லது, விலகிக்கொள்ளவேண்டும்.
பல துறைகளில் பல பொருள்களுக்கு வரிவிகித சதவிகிதங்கள் தாறுமாறாக இருக்கின்றன. நமது நாட்டில் பெரும் நிறுவனங்கள் பட்ஜெட் வருவதற்கு முன்பே வரிகளின் போக்கைத் தீர்மானம் செய்யுமளவுக்குத் திறமை படைத்தவை. ஆனால் இந்த விதத்தில் இன்னும் குறுந்தொழிலதிபர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குக்கூடப் போராடவேண்டியுள்ளது. ஆகவே அரசாங்கம் கலந்தாய்வுக் கூட்டங்கள் மூலம், நேர்மையான அதிகாரிகளை தொழிலதிபர்கள் முன்நிறுத்தி, அவர்களுடைய தொழில் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முயற்சிக்கலாம்.
பட்ஜெட் தொடர்களுக்கு முன்பு நேர்மையான குறுந்தொழில், சிறுதொழில் அதிபர்களை வைத்து கூட்டம் நடத்தி கருத்துக்களை அறிந்துக்கொள்ள அரசு முயற்சி செய்யவேண்டும். மத்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஈஎஸ்ஐ, பிஎஃப் போன்ற சலுகைகளுக்கு உள்ள விதிமுறைகள் இன்னும் குறுந்தொழிலதிபர்களுக்கு சாதகமாக இல்லை என்றே கூறலாம். ஒரு குறுந்தொழிலதிபர் 10 பணியாளர்களைக் கொண்டு நிறுவனம் நடத்தினால் ஈஎஸ்ஐ பிரிவுக்குள் அவர் வந்துவிடுவார் என்று விதிமுறை இருக்கிறது. அதனால், சிலர் 5 அல்லது 6 நபர்களைக் கொண்டே தங்கள் தொழிலை நடத்துகின்றனர். சில சமயங்களில் தொழிலுக்கு வேண்டிய ஆர்டர்கள் அதிகமாகும்போது, அதிகப் பணியாளர்களை நியமனம் செய்வர். அதனால் சிறு தொழில் நிறுவனத்தின் சம்பளப் பட்டுவாடா தொகை அதிகமாகும். ஆனால் ஆர்டர்கள் குறையும் போது அதே பணியாளர்கள் நிறுவனத்துக்குச் சுமையாகிவிடுகிறார்கள். இதனால் அதிக அளவில் குறுந்தொழில் நிறுவனங்கள் ஈஎஸ்ஐ சலுகைகளை அளிப்பதற்கு யோசனை செய்கின்றனர். ஆனால் ஈஎஸ்ஐ சலுகை இல்லாததால் நல்ல பணியாளர்கள் வேலைக்குக் கிடைப்பதும் கடினமாக உள்ளது. இதற்கு மாறாக கீழ்க்கண்டவாறு செய்யலாம்.
ஒரு குறிப்பிட்ட குறுந்தொழில் நிறுவனம் தொடர்ந்து மூன்று வருடங்கள் அதிக டர்ன்ஓவர் காண்பித்தால், ஈஎஸ்ஐ பிரிவுக்குள் வருமாறு செய்யலாம். தொழில் தொய்வடையும் போது அதிலிருந்து விலக்கு அளிக்கவும், மீண்டும் அது வலுவடையும் போது ஈஎஸ்ஐயில் தன்னை உட்படுத்திக் கொள்ளவும் சட்டத்தில் இடமிருக்கவேண்டும். இது குறுந்தொழில் நிறுவனங்கள் சிறப்பாகப் பணியாற்றவும் நல்ல பணியாளர்களை வேலைக்கு அமர்த்த ஏதுவாகவும் அமையும். இதைப் போல பிஎஃப் பற்றிய விதிமுறைகளும் மாற்றியமைத்தால் நல்ல அங்கீகாரத்துடன் குறுந்தொழில் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட முடியும்.
0
இன்னும் பெருமளவு பெண்கள் தொழில்முனைவோராக ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பொருளாதார ரீதியாக மட்டுமின்றி சமூக ரீதியாகவும் இந்தச் சம்பாத்தியம் அவர்களுக்குப் பல வழிகளில் உபயோகமாக இருக்கிறது. ஒருவேளை தனித்து செயல்படும் சூழல் உருவானாலும் இது அவர்களுக்குக் கைகொடுக்கும். எனவே பெண்களை அதிக எண்ணிக்கையில் சுயதொழிலில் ஈடுபட வைக்கவேண்டும். அதற்கான உந்துதலை அவர்களுக்கு அளிக்கவேண்டும். வியாபார நுணுக்கங்களையும் பணத்தைக் கையாளும் முறைகளையும் சொல்லித்தர வேண்டும்.
குடும்பத்தினரின் ஊக்குவிப்பு முதன்மையான தேவை. இரண்டாவது, வங்கிகள் உள்ளிட்ட அமைப்புகளின் உதவி. தொழில்முனைவோராக வளரத் துடிக்கும் பெண்களுக்கு துணைபுரிய வங்கிகள் முன்வரவேண்டும்.
இனி பெண்களுக்குத் தற்போது கிடைக்கும் வங்கிகளின் ஆதரவு குறித்து பார்ப்போம்.
குறு மற்றும் சிறுதொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு பெருமளவில் ஒவ்வொரு மாநிலமும் பணஉதவி செய்வதற்கு தயாராக இருக்கின்றன. தமிழ்நாட்டில் கிராம விடியல் என்ற குறுந்தொழிலுக்குகான நிதி நிறுவனம் பிற சமூக நிறுவனங்களோடு இணைந்து கடன் உதவி செய்கிறது. இது தனிநபர் கடனாகும். இதற்கு கியாரண்டி தேவையில்லை. ஆனால் விண்ணப்பத்தில் எல்லா விதமான தகவல்களும் விரிவாக அளிக்கப்படவேண்டும். கடன் உதவியின் அளவு சுமார் 30 ஆயிரத்திலிருந்து 70 ஆயிரம் வரை இருக்கும். இதுதவிர தேனா வங்கி பெரும்பாலான குறுந்தொழிலுக்கு நிதி உதவி அளிக்கின்றது.
ஸ்ரீ சக்தி என்ற பிரிவின் கீழ் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பெண்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கடனுதவி தொகை குறு மற்றும் சிறு தொழில்களுக்கு அளிக்கிறது. (http.//.www.statebankofindia.com).
பிரியதர்ஷனி என்ற பிரிவின்கீழ் பாங்க் ஆஃப் இந்தியா பெண் தொழில்முனைவோருக்கு சிறு மற்றும் குறுந்தொழில் தொடங்க உதவுகிறது. தொழிலுக்கான இயந்திரங்கள் வாங்க கடன் தொகை அளிக்கிறது. இதில் இரண்டு லட்சத்துக்கு மேல் கடனுதவி பெறுபவர்களுக்கு 1 சதவிகித வட்டி குறைப்புக் கிடைக்கிறது. இவ்வங்கியின் இணையதளத்துக்குச் (www.bankofindia.com) சென்று மேலும் விவரங்கள் அறியலாம்.
கனரா வங்கி கேன் மஹிலா (Canara Bank-Can Mahila) என்ற திட்டத்தின்கீழ் இல்லத்தரசிகள் முதல், பணிபுரியும் பெண்கள் மற்றும் சுயத்தொழில் செய்யும் பெண்களுக்குக் கடனுதவி அளிக்கிறது. வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் கணினி, தங்க ஆபரணங்கள் வரை வாங்கலாம். 18 முதல் 55 வயது வரையுள்ளவர்களுக்கு இந்தக் கடனுதவி அளிக்கப்படுகிறது. பணிபுரியும் பெண்கள் மற்றும் சுயதொழில் முனைவோருக்கு அவரது ஆண்டு வருமானம் 1.5 லட்சத்துக்குள் இருந்தால் ரூ.50,000 வரை கடனுதவி பெறலாம். வங்கியின் இணையதளம் (www.canarabank.in) ஆகும்.
விக்லங் மகிலா விகாஸ் யோஜனா என்ற திட்டத்தில் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, உடல் ஊனமுற்ற, மாற்றுத்திறன் பெற்ற பெண் தொழில்முனைவோருக்குக் கடனுதவி அளிக்கிறது. உடல் ஊனமுற்றவரின் குறைபாடுகளைக் கண்டறிந்து அதற்கேற்ற வகையில் அவர்களுக்கு மாற்றுத்திறனுக்கான பயிற்சி வழங்கி (Vocational Training) ரூ.25,-000 வரை புதிய தொழில் முயற்சியில் இறங்க உதவி செய்கிறது. இது குறித்து விபரங்கள் வங்கியின் கீழ்கண்ட இணையதளத்தில் காணலாம். (www.unionbankofindia.co.in)
யூகோ வங்கியின் நாரி சக்தி என்ற திட்டத்தின் அடிப்படையில், பணிபுரியும் பெண்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது. 5 வருடகாலங்களில் தவணை முறையில் கடனைத் திரும்ப செலுத்துவதிலும், வட்டியில் சில சலுகையும் வழங்குகிறது. வங்கியின் இணையதளம் www.ucobank.com.
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, ‘சென்ட் கல்யாணி’ என்ற திட்டத்தின் அடிப்படையில், பெண் தொழில்முனைவோருக்குக் கடனுதவி அளிக்கிறது. விவசாயம் உள்ளிட்ட தொழில்களுக்கும் வியாபாரம் மற்றும் தொழிற்கல்வி சார்ந்த பணிகளுக்கும் பெண் தொழில் முனைவோர்களை இந்த வங்கி இருகரம் நீட்டி வரவேற்கிறது.
(தொடரும்)