புன்னகை மன்னன் படத்தில் கதாநாயகி ரேவதி சிங்களப் பெண்ணாக வருவார். விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சில்லறை வில்லனாக வருவார்கள். அவர்கள் சிங்களப் பெண்ணைக் கடத்துவதாகவும், கமல்சார் அவர்களை அடித்து விரட்டுவதாகவும்கூட காட்சி உண்டு. சிங்களப் பெண்ணின் தந்தைதான் க்ளைமாக்ஸில் வெடிகுண்டு வைத்துக் கொல்வார் என்றாலும் அதற்கு உதவுவது இலங்கைத் தமிழ் கதாபாத்திரங்கள்தான். இது இலங்கையில் இன அழித்தொழிப்பு படு மும்மரமாக நடந்த காலகட்டத்தில் வந்த படம்.
வேட்டையாடு விளையாடு படத்தில் ஹோமோசெக்ஸ்காரர்களாகச் சித்திரிக்கப்படும் வில்லன்களுக்குத் தூய தமிழ்ப்பெயர். தெனாலி படத்தில் யாழ்ப்பாணத் தமிழ் பேசும் கதாபாத்திரம் ஒரு கோமாளியாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும்.
சிட்ஃபண்ட் நடத்துபவர்கள் ஏழை எளிய மக்களின் பணத்தையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு ஓடியபோதுதான் சிட்ஃபண்ட் நடத்தி ஏமாற்றப்பட்டு சின்னாபின்னமாகும் நல்லவர் ஒருவரைப் பற்றி படம் எடுத்தார்.
தென் மாவட்டங்களின் சாதி கலவரங்களுக்கு தேவர் ஜாதி அடிப்படைவாதிகளே காரணமாயிருக்க, கமலோ தொடர்ந்து தேவர் ஜாதிப் பெருமிதத்தையே தன் படங்களில் இடம்பெறச் செய்துவந்திருக்கிறார்.
இப்படியெல்லாம் செயல்பட்டும் கமலுக்குத் தமிழகத்தில் ஒருவகையான முற்போக்கு பிம்பம் உருவானதற்கான முக்கியக் காரணம் அவர் இந்து மதத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் விமர்சிப்பதுதான். அதையும் கூர்ந்து கவனித்தால் அவர் சைவ இந்து மதத்தை மட்டுமே எள்ளி நகையாடுவது தெரிந்திருக்கும்.
இதுதான் அவருடைய அரசியல் செயல்பாடுகள். இவற்றாலெல்லாம் பெரிய அபாயம் எழுந்ததில்லை. ஆனால், மாறுபட்டுச் சிந்திக்கிறேன் என்ற போர்வையில், இப்போது சர்வதேச ரவுடி அமெரிக்காவின் தரப்பு நியாயத்தை எடுத்தியம்பக் கிளம்பியிருக்கிறார். இது மிகவும் தவறானது; கேவலமானது. ஹிட்லரைப் பற்றிப் படமெடுப்பதாக இருந்தால் ஹிட்லர் பக்கம் இருக்கும் நியாயத்தைப் பேசுவார் என்று நினைக்கிறேன்.
பேசாப் பொருளைப் பேசுதல் என்பது வேறு. அதிகார மையத்தின் பக்கத்தில் இருக்கும் அரைகுறை நியாயங்களைப் பேசுவது என்பது வேறு. கமல் இரண்டாவதைத்தான் கால காலமாகச் செய்துவருகிறார். அந்த வகையில் அவர் ஒரு கலைஞன் என்ற மரியாதைக்கு ஒரு காலமும் உரியவர் அல்ல. அவரும் தன்னை வெளிப்படையாக ஒரு வியாபாரியாகத்தான் அடையாளப்படுத்தியும் கொள்கிறார். அப்படி இருக்கும்போது அவருடைய விஸ்வரூபம் படத்துக்குத் தடை விதிக்கப்பட்டதை ஒரு கலைப்படைப்புக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும் கருத்து சுதந்தரத்துக்கு எதிரானதாகவும் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
கமலின் இந்தச் செயலானது செருப்பு நிறுவனம் ஒன்று காலணிகளில் இந்து தெய்வங்களின் படத்தை அச்சிட்டு வியாபாரம் செய்ய முயன்றதைப் போன்ற ஒரு செயல்தான். அவர்களைப் பொறுத்தவரை சீப் பப்ளிசிட்டியில் ஆரம்பித்து விற்பனையைப் பெருக்க உதவும் ஒரு தந்திரம் அது. ஆனால், ஒரு வியாபாரிக்கு மக்கள் கூட்டத்தில் ஒரு பிரிவினரின் நம்பிக்கையை அவர்கள் எவ்வளவு சிறிய தரப்பாக இருந்தாலும் இழிவுபடுத்த எந்த அதிகாரமும் கிடையாது. இங்கு சுதந்தரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே, ஒரு கலைஞனுக்குத் தரவேண்டிய மரியாதையை ஒரு வியாபாரிக்கு வீணடிக்காமல் இருப்பதுதான் ஒரு சமூகத்துக்கு நல்லது.
விஸ்வரூபம் பட விவகாரத்தில் முதலில் டி.டி.ஹெச்சில் படத்தை வெளியிடுவதாகப் பொய் சொல்லி மக்களிடம் இருந்து பணத்தைக் கறந்தார். படத்தின் தேதியைத் தனது சொந்த வசதிக்காக மாற்றி வைத்ததாகச் சொன்னபோது கூட தனது மீடியா பார்ட்னர்களுக்கு நன்றி தெரிவித்தவர் பணம் கட்டிய பார்வையாளர்களுக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. இஸ்லாமிய கூட்டமைப்பினருக்குப் படத்தைப் போட்டுக் காட்டியவர் அவர்களுடைய உணர்வுகளுக்குத் துளியும் மரியாதை செலுத்தவில்லை. கதை நிகழும் களம் ஆஃப்கானிஸ்தான். அங்கே தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களாக முஸ்லிம்களைத்தானே காட்ட முடியும் என்று இன்று நியாயம் பேசுகிறார். (முஸ்லிம்களை தீவிரவாதியாகக் காட்டத்தான் ஆஃப்கானிஸ்தானைக் களமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் கமல் என்கிறார்கள் தமிழக முஸ்லிம் கூட்டமைப்பினர். இரண்டாம் பாகம் இந்தியாவில் நடக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதாவது அதில் இந்து அடிப்படைவாதிகளை கட்டம்கட்டப்போகிறார். இப்போது இஸ்லாமியர்களுக்குத் தன்மீது ஏற்பட்ட கோபத்தைச் சரிக்கட்டும் வகையிலும் தனது முற்போக்கு பிம்பத்துக்கு ஏற்பட்ட அடியை சீர் செய்யும்வகையிலும் அந்தப் படத்தை அதீதமாக எடுப்பார் என்றுதான் தோன்றுகிறது. ‘கலைஞனல்லவா’, இப்படித்தான் இருப்பார்.)
உன்னைப் போல் ஒருவன் படத்தைப் போல இந்து ஆயுத வியாபாரி உதவுவதாக ஆஃப்கானிஸ்தானை மையமாகக் கொண்ட படத்தைக் காட்ட முடியாதுதான். இந்த விஷயம் பிரச்னையை உருவாக்கும் என்பதால், கதாநாயகனை ஒரு முஸ்லிமாகக் காட்டி பேலன்ஸ் செய்யப் பார்த்திருக்கிறார். ஆனால், இஸ்லாமிய அமைப்பினர் இந்த பம்மாத்தை நன்கு புரிந்துகொண்டுவிட்டதால் கமல் சொல்லும் எந்த சமாதானத்தையும் ஏற்க முன்வரவில்லை. இஸ்லாமியர் அமைப்பினர் படத்துக்குத் தடை கோரியதில் ஓரளவு நியாயம் உண்டு என்றாலும் அதை அவர்கள் வெளிப்படுத்தியவிதமும் பேசிய பேச்சுகளும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கவையே.
சோவியத் ரஷ்யாவின் பின்னடைவுக்குப் பிறகு அமெரிக்கா இஸ்லாமியர்களைத் தனது எதிரியாக வளர்த்தெடுத்து வந்திருக்கிறது. இரட்டை கோபுரத் தாக்குதல் என்பது அமெரிக்கா இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செய்த அநியாயங்களுக்கான பதிலடியே தவிர அது முதல் தாக்குதல் அல்ல. அதைச் சாக்காக வைத்து அமெரிக்கா இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் எதிராக நடத்தி வரும் அராஜகங்கள் எல்லாம் குறைந்தபட்ச அரசியல் வாசிப்பு உள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மைகளே. அப்படியிருக்க அமெரிக்கர்களை நல்லவர்களாகக் காட்டி ஒரு படம் எடுக்கப்படுகிறது என்றால் அது அடிப்படையிலேயே இஸ்லாமியருக்கு எதிராகிவிடுகிறது. அதிலும் ஆஃப்கானிஸ்தான், இஸ்லாமிய தீவிரவாதிகள் என படத்தை எடுத்துவிட்டு படத்தைப் பார்த்தால் நீங்கள் எனக்கு தலை வாழை இலை போட்டு அன்லிமிடட் பிரியாணி தருவீர்கள் என்று நம்புகிறேன் என்று சொல்ல ஒருவருக்கு எவ்வளவு தெனாவட்டு இருக்கவேண்டும்.
இந்த விஷயத்தில் தமிழக அரசு நடந்துகொள்ளும் விதம் சரியென்றேபடுகிறது. இஸ்லாமியர்கள் இந்துக்களைப் போல் மிதமாகப் போராடுபவர்கள் அல்ல. மேற்கத்திய கிறிஸ்தவர்களைப் போல் தந்திரமாக ரவுடித்தனம் செய்பவர்களும் அல்ல. இதற்கு முன்பே பம்பாய் படத்தில் ஒரு இஸ்லாமியப் பெண் இந்துவைத் திருமணம் செய்வதாகக் காட்டியதற்கே வெடி குண்டு வீசியவர்கள், அமெரிக்க தூதரகத்தை வெகு சமீபத்தில் முடக்கியவர்கள். அரசு விதித்த தடையை நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து சில திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. கரூரில் இரண்டு திரையரங்குகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் கோவையில் வேறு பல குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. இப்படி நடக்கும் என்பது அரசுக்கு முன்பே உளவுத்துறை மூலம் தெரியவந்திருக்கலாம். அதன் அடிப்படையில் அரசு படத்தைத் தற்காலிகமாகத் தடை செய்திருக்கக்கூடும். எனவே, இது சரியான செயல்பாடுதான். ஆந்திரம், மலேசியா, இலங்கை என பல இடங்களில் இந்தப் படத்தின் மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இது சொந்தப் பகை காரணமாக ஜெயலலிதா எடுத்த தவறான முடிவாகச் சொல்லவே முடியாது.
சமீப காலமாக வெளியாகும் படங்களையும் மீடியாவின் பிற செயல்பாடுகளையும் பார்க்கும்போது வேறொரு சந்தேகம் பலமாக எழுகிறது. செப்டம்பர் 11க்குப் பிறகு அமெரிக்கா தெளிவான திட்டமொன்றைத் தீட்டியிருப்பதாகத் தோன்றுகிறது. தங்கள் மீது குவியும் இஸ்லாமியர்களின் எதிர்ப்பை இந்தியா மீது மடைமாற்றும் பணியில் இறங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. அதன் மூலம் இஸ்லாமிய பிரச்னையையும் தீர்த்துவிடலாம். இந்தியாவையும் சரிக்கட்டிவிடலாம். இதுதான் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையாக இருக்கிறது என்று தோன்றுகிறது. அப்படிப் பார்க்கும்போது கமல் மிகப் பெரிய சதித்திட்டத்தின் கைப்பாவையாக இருப்பதுபோல் தெரிகிறது. நிச்சயம் அவருக்கு அந்தக் கெட்ட எண்ணமிருக்காது என்றே நம்புகிறேன்.
தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களின் மூலம் தேவர் இறுமாப்பை கொம்பு சீவிவிட்டு பல்வேறு கலவரங்களுக்கு மறைமுகமாகக் காரணமாக இருந்த கமல், இப்போது இந்து முஸ்லீம் கலவரங்களுக்கு நேரடியாக வித்திடுபவராக ஆகியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. ஆஸ்போர்னிடம் என்ன கதையைச் சொல்லியிருக்கிறாரோ… ஒரு வியாபாரியாக அதிக முதலீட்டைத் தேடிப் பெற்றுக் கொள்ள கமலுக்கு உரிமை உண்டு. ஆனால், அவர் ஒரு பிரிவினைவாதி அல்ல பகுத்தறிவுவாதி என்பதால் அவரிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டியிருக்கிறது: அமெரிக்கக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே… அடி வருடியாய் ஆகிவிடாதே தாண்டவக்கோனே.
0
BR. மகாதேவன்