Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

ஆழமும் அலைகளும் அற்ற கடல்

$
0
0

1355893832_Kadal-Movie-New-Posters-3

தேவனின் பிரதிநிதியாக ஒருவன்… சாத்தானின் பிரதிநிதியாக இன்னொருவன்… சாத்தானின் பிரதிநிதி தேவனின் பிரதிநிதிக்குத் தொடர்ந்து நெருக்கடிகள் கொடுக்கிறான். ஆனால், அன்பின் பாதையில் இருந்து துளியும் பிசகாமல் தேவனின் பிரதிநிதி போராடுகிறான். கடைசியில் தேவனின் பிரதிநிதி சாத்தானின் வலையில் விழ நேருகிறது. அதாவது, சாத்தானின் பிரதிநிதியின் கொடுமை தாங்காமல் அவனைக் கொல்ல முடிவெடுக்கிறான். உன் கையால் நான் கொல்லப்பட்டால், நான் செத்தாலும் ஜெயிப்பேன். நீ வாழ்ந்தாலும் தோற்பாய்… என்று கெக்கலிக்கிறான் சாத்தான். என்னைக் கொல்லாதே.. நீயும் என் பக்கம் வந்துவிட்டால் உலகில் நன்மையே இல்லாமல் போய்விடும் என்று நைச்சியமாகப் பேசிப் பார்க்கிறான். இந்த மாபெரும் போராட்டத்தில் கடைசியில் என்ன நடக்கிறது என்பதுதான் கடல் படத்தின் மையக்கரு.

மிகவும் அருமையான கதை. ஜெயமோகன் போன்ற இலக்கியவாதியால் மட்டுமே எழுத முடிந்த கதை. பொய்யே சொல்லமாட்டேன் என்று ஒருவன் சபதம் எடுக்கிறான். உன்னைப் பொய் சொல்ல வைத்தே தீருவேன் என இன்னொருவன் கங்கணம் கட்டுகிறான். க்ளைமாக்ஸில் யார் ஜெயிக்கிறார் என்ற அரிச்சந்திர புராணக் கதையின் சாயலை மையமாகக் கொண்ட கதை.  அநேகமாக ஜெயமோகன் இந்தக் கருவை மையமாகவைத்துத்தான் தன் திரைக்கதையை எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்.

ஆனால், தமிழ் திரையுலகம் தனக்கான தனி இயங்குவிதிகளைக் கொண்டது. அது எதையுமே காதல் என்ற கண்ணாடி வழியாகத்தான் பார்க்க விரும்பும். எனவே, இந்தக் கதைக்குள் ஒரு காதல் கதையை நுழைக்கும்படி இயக்குநர் மணிரத்னம் அன்புடன் கேட்டுக்கொண்டிருப்பார். அவருடைய அன்பைத் தட்டமுடியாமல் இளகிய மனம் கொண்ட ஜெயமோகன் காதல் கதையை மையக்கதைக்குள் ”கலை நய’த்துடன் திணிக்க முயற்சி செய்திருக்கிறார்.

அதாவது, தேவனின் வளர்ப்பு மகனுக்கும் சாத்தானின் மகளுக்கும் இடையிலான காதலை எழுதி, அதனை மையக்கதைக்குள் செருகியிருக்கிறார். தேவனின் வளர்ப்பு மகன் சாத்தானின் குணமுடையவனாகவும் சாத்தானின் மகள் தேவனின் அம்சம் மிகுந்தவளாகவும் ஒரு ”முரணியக்க நகை முரணை’யும் சிரமப்பட்டுக் கதைக்குள் கொண்டுவந்திருக்கிறார்.

காதல் இருந்தால்தான் தமிழ்ப் பார்வையாளர் படத்தைப் பொறுமையாக உட்கார்ந்து பார்ப்பார் என்ற இயக்குநரின் இந்த முன்முடிவின் மூலம் தரமான பார்வையாளரை நிறையவே ஏமாற்றமடையச் செய்துவிடுகிறார் திரைக்கதை ஆசிரியர். அதிலும் தேவனின் வளர்ப்புமகன் கடத்தல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது, சாத்தானின் மகள் கிறிஸ்தவ சமூக சேவை மையத்தில் வளர்வது போன்ற காட்சிகள் எல்லாம் திரைக்கதையின் படு சினிமாத்தனமான கண்ணிகள்.

இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் ஒரு கதையானது காட்சி ஊடகத்துக்குக் கொண்டுசெல்லப்படும்போது செய்தாகவேண்டிய நியாயமான மாற்றங்கள் வேறு… ரசனை குறைந்த பார்வையாளர் கூட்டத்துக்காக என்று அல்லது அந்தப் போர்வையில் நீர்க்கவைப்பது என்பது வேறு என்பதைத்தான். இப்படியான சமரசத்தின் மூலம் ஜெயமோகன் எழுதும் கதை ரொம்பவும் மலினப்படவில்லை என்பதுதான் ஒரே ஆறுதல். அவருடைய இலக்கிய சாதனைகளோடு ஒப்பிடும்போது இந்தத் திரைக்கதை பலவீனமாகத் தோன்றக்கூடும். ஆனால், இப்போதும் பிற தமிழ்த் திரையுலகத்தினரின் படைப்புகளைவிட அது மேலானதுதான் (இந்த ஆறுதல் நீண்டகாலத்துக்கு இப்படியே நீடிக்கவும் கூடாது. அவருடைய இலக்கியப் படைப்புகளுக்கு நிகரான திரைக்கதைகளை எழுதுவதற்கான சூழலை அவர் உருவாக்கிக் கொண்டுவிடவேண்டும்).

மணிரத்னத்துக்கு இது மிகவும் வித்தியாசமான முயற்சி. இந்து கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட படங்களில் கண்ணில் விளக்கெண்ணை விட்டுத் தேடிப்பார்த்தாலும் இந்து அடையாளங்கள் தென்படவே செய்யாத அல்ட்ரா மாடர்ன் தனம்தான் அவர் படத்தில் இருக்கும். இந்தப் படத்துக்கான ஃபைனான்சியர்கள் என்ன சொல்லியிருப்பார்களோ தெரியவில்லை. கிறிஸ்தவப் பின்னணியை படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் வலிந்து திணித்திருக்கிறார் (அழகியலுடன்தான்). இப்படியான இந்து அடையாளங்கள் ரஜினி, விஜய் வகையறா படங்களில் டைட்டில் சாங்கில் இருந்து ஏராளம் இடம்பெறுவது உண்டென்றாலும் மணிஜி அதில் இருந்து ரொம்பவும் விலகியே இருப்பார். கதைக்களம் என்ற பேரில் கிறிஸ்தவ அடையாளத்தை திகட்டும் அளவுக்குத் திணித்திருப்பவர் இனி வரும் இந்து பின்னணிப் படங்களை எப்படி எடுப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பொருளாதார பலத்தைப் பெற ஆரம்பித்ததும் மேற்கத்திய கிறிஸ்தவ நிறுவனங்கள் எப்படியாகத் தங்கள் மத மதிப்பீடுகளை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் ஏற்றுவார்கள் என்பதற்கு சமீபத்தில் வெளியாகும் படங்களே சான்று. கென்னி விக்ரம் – ஜீவா அன்கோவின் டேவிட் என்ற படமும் இதே நாளில்தான் வெளியாகியுள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா, பயணம், நான் ஈ, நீர்ப்பறவை, தாண்டவம் என கிறிஸ்தவச் சார்பு படங்கள் சாரைசாரையாக வர ஆரம்பித்திருக்கின்றன. ஏற்கெனவே, பாரதிராஜாவில் ஆரம்பித்து கமலஹாசன் வரை கிறிஸ்தவ மென் சாய்வுடன் பழைய ஏற்பாட்டில் இயங்கிவந்திருக்கிறார்கள். என்றாலும் இந்தப் புதிய ஏற்பாடு நின்று விளையாடும் என்றே தோன்றுகிறது. இஸ்லாமிய வெறுப்பு, இந்து மத இழிவுபடுத்தல்கள் என மேற்கத்திய கிறிஸ்தவத்தின் இரண்டு பிரதான இசைகுறிப்புக்கு ஏற்ப தமிழ்/இந்தியக் கலையுலகம் ஆடத் தயாராகிவருகிறது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு பொருளாதார அதிகாரம்… அதன் பிறகு சமூக/மத அதிகாரம்தானே…

*********

திரைப்படத்துக்குப் பொருத்தமானது சிறுகதை வடிவம்தான். ஒரு குறிப்பிட்ட இலக்கு அல்லது முடிச்சு. அது எவ்வாறு அடையப்படுகிறது அல்லது அவிழ்க்கப்படுகிறது இதுதான் சினிமாவின் அடிப்படை இலக்கணம். தென்னிந்திய குக்கிராமத்தில் இருக்கும் ஒரு பெண்ணை வட இந்தியத் தீவிரவாதி கடத்தினால் என்ன ஆகும்? தத்தெடுக்கப்பட்ட குழந்தை தன் அசல் அம்மாவைத் தேடிச் செல்கிறது. அந்த அம்மாவோ ஒரு விடுதலை இயக்கத்தின் போராளி… என்ன ஆகும்? தன் தங்கையை காவல்துறையினர் மானபங்கப்படுத்துவதால் காவலரின் மனைவியை கடத்திச் சென்றுவிடுகிறான் பழங்குடித் தலைவன்… காவல்துறை அதிகாரி தன் மனைவியை எப்படி மீட்கிறார்? மணிரத்னம் இந்த சினிமா இலக்கணம் நன்கு தெரிந்தவர். ஆனால், எப்போதுமே சரியான பாதையில்தான் போகவேண்டுமா என்ன..? கொஞ்சம் தவறாகவும் செயல்பட்டுப் பார்ப்போமே என தீர்மானித்து இந்தப் படத்தில் பல கதைகளை அதாவது ஒரு நாவலைப் படமாக்க முன்வந்திருக்கிறார். இதற்கு முன் கலை ரசிகர்களையும் திருப்திப்படுத்த முடியாமல் வணிக வெற்றிகளையும் குவிக்க முடியாமல் இரண்டுங்கெட்டான் தனமான படங்களை இயக்கிய மணிரத்னம் இந்த முறை கதைக்குள்ளேயே அந்த இரண்டுங்கெட்டான் தனத்தைக் கொண்டுவந்திருக்கிறார்.

படமானது தேவன் – சாத்தான் போராட்டமாகவும் உருப்பெறவில்லை. காதல் படமாகவும் உருப்பெறவில்லை. இரண்டு படங்களை வெட்டி ஒட்டி உருவாக்கிய ஒரு படம் எப்படி இரண்டுக்கும் நேர்மையாக இருக்க முடியாதோ அதேபோல் இந்தப் படம் ஆகிவிட்டிருக்கிறது.

********

 தங்கத் தொட்டிலில் தூங்கிய சீமான் அரவிந்த்சாமியும் (சாம்) பட்டினியின் தொட்டிலில் தூங்கிய அர்ஜுனும் (பெர்க்மான்ஸ்) கிறிஸ்தவ கல்வி மையம் ஒன்றில் பாதிரியார் பணிக்காகப் படிக்கிறார்கள். அர்ஜுன் ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதை அரவிந்த்சாமி பார்த்து மேலிடத்தில் சொன்னதும் பாவ மன்னிப்பு கேட்கச் சொல்கிறார்கள். அதை மறுத்து அர்ஜுன் பள்ளியை விட்டு வெளியேறிவிடுகிறார். அதன் பிறகு இடைவேளைக்கு சற்று முன்பாகத்தான் திரும்பி வருகிறார். இத்தனைக்கும் நம் இருவருக்கும் இடையிலான ஆட்டம் ஆரம்பித்துவிட்டது. தயாராக இரு என்று சவால் விட்டுவிட்டுத்தான் பள்ளியைவிட்டு வெளியேறுகிறார். ஆனால், அடுத்த 20 வருடங்களில் பெரிய கடத்தல்காரராக உருவாகிறாரே தவிர தன் பரம விரோதியான அரவிந்த்சாமியைப் பற்றி எந்த நினைவும் இல்லாமலேயே இருக்கிறார் (இதற்குக் காரணமாக எந்த நோயும் படத்தில் யோசித்துச் சொல்லப்பட்டிருக்கவில்லை).

இடைவேளைக்கு முன்பாகத் திரும்பி வருபவர் பாதிரியாரான அரவிந்த்சாமி தன்னை மிகப் பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிய பிறகும் பழைய பகையை மனத்தில்வைத்துக்கொண்டு, அரவிந்த்சாமியை ஒரு விபச்சாரியுடன் இணைத்து கதைகட்டி ஊர் மக்களைக் கொண்டு அடித்துவிரட்ட வைக்கிறார். அரவிந்த்சாமியால் தத்துப் பையன்போல் வளர்க்கப்பட்டுவரும் தொம்மன் (கார்த்திக்கின் மகன் கவுதம்) தனக்கு ஆதரவாக இருந்த பாதிரியாரை அடித்துத் துரத்திய ஊரைத் தன் காலடியில் விழவைக்கவேண்டும் என்று கடத்தல்காரரான அர்ஜுனுடன் போய்ச்சேருகிறார். கண்ணில் தென்படுபவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்துகிறார். ஏராளமான கடத்தல் பணிகளை மளமளவெனச் செய்து முடிக்கிறார்.

நான்கு வருடங்களில் அரவிந்த்சாமி ஜெயிலில் இருந்து வெளியே வந்துவிடுகிறார். தன்னை அடித்து விரட்டிய அதே ஊருக்குத் திரும்புகிறார். அங்கிருப்பவர்கள் அவரை மறுபடியும் அடித்து விரட்ட முயற்சி செய்கிறார்கள். அரவிந்த்சாமியோ என்னைக் கொன்றாலும் பரவாயில்லை நான் ஆரம்பித்த பணியை முடிக்காமல் போகமாட்டேன் என்று சூளுரைத்து அங்கேயே தங்குகிறார். தொம்மனைச் சந்தித்து தேவனின் பாதைக்குத் திரும்பும்படிக் கேட்டுக் கொள்கிறார். அவனோ மறுத்துவிடுகிறான்.

இதனிடையில் அவன் கிறிஸ்தவ அநாதை விடுதியில் இருக்கும் ஒரு செவிலிப் பெண்ணை (பியாட்ரஸ்) சந்தித்துக் காதல்வயப்படுகிறான். அந்தப் பெண் அவனை நல்வழிக்குத் திரும்பச் சொல்கிறாள். அடுக்கடுக்காகத் தான் செய்த பாவங்களையெல்லாம் சொல்லி நான் கெட்டவன் எனக்கு பாவ மன்னிப்பே கிடையாது என்று கதறுகிறான். அந்தப் பெண்ணோ ”இதுவரை தப்பு செய்திருந்தா என்ன… இனிமே செய்யாத’ என்று குழந்தைபோல் சொல்லி அவனை மனம் மாற வைத்து விடுகிறாள். பாதிரியாரும் அந்த இளம் சிட்டுகளை ஒன்று சேர்க்க முன்வருகிறார். அந்தப் பெண்ணின் அப்பா அம்மாவிடம் அனுமதி கேட்டுவரச் சொல்லி அனுப்புகிறார். இந்த இடத்தில்தான் ஒரு அதி பயங்கர திருப்பம் வருகிறது. அதாவது அந்தப் பெண்ணின் தந்தை வேறு யாருமில்லை நம்ம சாத்தான் அர்ஜுன்தான்.

நேராக அந்தப் பெண்ணை அர்ஜுனின் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான் தொம்மன். அவளைப் பார்த்ததும் அர்ஜுன் கோபத்தின் உச்சத்துக்குப் போகிறான். உண்மையில் அர்ஜுனின் மகள் அவனுடைய வன்முறைச் செயல்களை (அம்மாவை மாடியில் இருந்து தள்ளிக் கொன்றது, எதிரிகளை துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது போன்றவற்றைப்) பார்த்து சிறு வயதில் சித்தம் கலங்கிப் போயிருப்பாள். அதாவது மூளை இரண்டு மூன்று வயதுக்கு மேல் வளராமல் அப்படியே இருந்துவிடுகிறது. இந்த நோயுடைய அந்தப் பெண் தன் அப்பாவை பத்து பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு பார்த்ததும் பழைய நினைவுகள் வந்து சித்தம் கலங்கிவிடுவாள்.

அர்ஜுனுக்கும் தன் மகளை மீண்டும் சந்தித்தது பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தும். தன்னுடைய பழைய விரோதியான அரவிந்த சாமி, அவருடைய வளர்ப்பு மகனான தொம்மன், தன் மகள் மூவரையும் கொல்லத் தீர்மானிப்பான். பைக்கில் வரும் தொம்மனை டாடா சுமோவை விட்டு மோதி ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டு, அரவிந்த்சாமியையும் தன் மகளையும் அடித்துக் கட்டிப்போட்டு, கடலில் சுறா மீன்களுக்கு உணவாக எறியப் போவான். அது நாள் வரை அமைதியாக இருந்த கடல், க்ளைமாக்ஸ் நெருங்கியது தெரிந்ததும் பேயாட்டம் ஆட ஆரம்பித்துவிடும். அந்தப் புயலில் அர்ஜுன் தன் மகளை தாறுமாறாக அடித்து அவளைக் கடலில் தள்ளிக் கொல்லபோவார். அதாவது, இரண்டு காலையும் பிடித்து தலைகீழாக அவளை போட்டுக்கு வெளியே வீசி எறியப் போவார். இந்த இடத்தில் அவர் தன் மகளைக் கொன்றாரா இல்லையா என்பது சஸ்பென்ஸாக இருக்க காட்சி சட்டென்று தொம்மன் பக்கம் திரும்பும். தன் காதலியை அவளுடைய அப்பா போட்டில் ஏற்றிக்கொண்டு கொல்வதற்காகப் போயிருக்கிறார் என்பது தெரிந்ததும் கட்டுமரத்தில் ஏறி அந்த போட்டைச் சென்று சேர்ந்துவிடுவான். அங்குதான் அரவிந்த்சாமியையும் கட்டிப் போட்டிருகிறார் என்பது தெரிந்ததும் அவரை விடுவிப்பான். இருவருமாகச் சேர்ந்து அர்ஜுனைப் பந்தாடுவார்கள். ஆனால், சாத்தானின் பிரதிநிதியான அர்ஜுனோ சளைக்காமல் இருவரையும் துவைத்து எடுப்பான்.

கடைசியில் சினிமா இலக்கணத்தின்படி வில்லன் தோற்றுவிடுவான். அரவிந்த்சாமி அவனுடைய காலை ஒரு பெரிய கயிற்றில் கட்டி கடலுக்குள் முக்கி எடுத்துக் கொல்லுவார். அர்ஜுனோ தயவு செய்து என்னைக் கொல்லாதே… நீ நல்லவன். உன் கைகளைக் கறையாக்கிக் கொள்ளாதே என்று கெஞ்சுவான். நீ என்னைக் கொன்றால் நீயும் என்னைப் போல் சாத்தானாக ஆனதுபோல் ஆகிவிடும். அது எனக்கு வெற்றிதான் என்று எகத்தாளம் செய்வான். ஆனால், அரவிந்த்சாமியோ எதையும் கேட்காமல் அவனை கடலுக்குள் மூழ்கடித்துவிடுவார். இதனிடையில் தொம்மன், அர்ஜுனைக் கட்டிய கயிற்றை மேலே இழுத்து அவனைக் காப்பாற்றிவிடுவான். அரவிந்த்சாமி நல்லவனாகவே இருக்க வேண்டும். ஒரு கொலையை செய்யக்கூடாது என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தங்களுடைய கட்டுமரத்தை நோக்கிப் போவான். அப்போது இன்னொரு திருப்பம் நடக்கும் அதாவது, அர்ஜுன் தன்னுடைய மகளைக் கொல்லவில்லை. உயிருடன்தான் இருக்கிறாள் என்று சொல்வார். ஆனால் அவள் பயத்தில் மன நிலை பிறழ்ந்துபோயிருப்பாள். மருத்துவமனையில் அவளை தொம்மன் போய்ப் பார்ப்பான். மன நிலை பிறழ்ந்த நிலையிலும் அவள் அவனுடைய கை விரல்களைத் தன் விரல்களால் பற்றிக் கொண்டு தன் அன்பைத் தெரிவிப்பாள். அப்படியாக காதலர்களும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.

********

கார்த்திக் கவுதம் மிகவும் அழகாக இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்கிறார். ஓரளவுக்கு நல்ல தொடக்கம்தான். ஆனால், சுப்பிரமணியபுரம், பருத்திவீரன் போன்ற படங்களில் அறிமுகமாகியிருந்தாலோ தந்தையைப் போலவே பாரதிராஜாவின் படத்தில் அறிமுகமாகியிருந்தாலோ ஒரு பெரும் கொண்டாட்டம் சாத்தியப்பட்டிருக்கும் (அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நாயகன் இளவயதினன் இல்லையா… எப்படி கோட்டைவிட்டார்கள் தெரியவில்லை). ஓகே. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

இந்தப் படத்தின் அடுத்த அட்ராக்‌ஷன் ராதாவின் மகள் (பியாட்ரஸ்). தேவதை தேவதை என்று படத்தில் அவரைச் சொல்கிறார்கள். கழுத்தில் இருந்து கால்வரை தேவதைதான். ஆனால், முத்திப்போன முகம் ரொம்பவே படுத்துகிறது. அதிலும் அவருடைய கதாபாத்திர வார்ப்பு படு சினிமாத்தனமாக இருக்கிறது.

காதல் காட்சிகளைப் பொறுத்தவரை திரைக்கதையும் பலவீனம். பின்னணி இசையும் படு சுமார். நடன அசைவுகள் வழக்கம்போலவே பி.சி. செண்டர்களின் ரசனைக்குச் சற்றும் பொருந்தாத தளத்திலேயே இருக்கின்றன. பிற மணிரத்னத்தின் மேட்டுக்குடிப் படங்களில் இது நெருடலாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், கிராமப்புற மீனவப் பின்னணிப் படத்தில் இவை எண்ணெய் கசிந்த கடலில் மிதக்கும் இறந்த மீன்களைப் போல் ஒட்டாமல் மிதக்கின்றன. நெஞ்சுக்குள்ளே போன்ற அழகான பாடல்களையும்கூட எவ்வளவு முடியுமோ அவ்வளவு வீணடித்திருக்கிறார் இயக்குநர். இப்படியான ஒரு நிலையில் நாயகியின் அழகின்மை காதல் காட்சிகளை சராசரி பார்வையாளரிடமிருந்து மேலும் அந்நியப்படுத்திவிடுகின்றன. அதிலும் குழந்தைத்தனமான பெண் என்ற பெயரில் செவிலிப் பணியில் இருப்பவள் ஸ்லீவ் லெஸ் உடை உடுத்துவது, பிரசவம் பார்க்கும்போது ஊரே கூடியிருக்கையில் ஓர் ஆண்மகனை உதவிக்கு அழைத்துக் கொள்வதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியானதாகவேபடுகிறது.

கார்த்திக்கின் மகனையும் ராதாவின் மகளையும் தேர்ந்தெடுத்தது என்ன வணிக ஆதாயத்தைத் தந்திருக்குமோ அதில் பத்தில் ஒரு பங்கு சந்தோஷத்தைக்கூடப் படம் பார்வையாளர்களுக்குத் தரவில்லை.

இசையையும் பாடல் வரிகளையும் பற்றிச் சொல்வதானால், ஏ.ஆர்.ரஹ்மான் தன் அயல் நாட்டு விமானப் பயணங்களின் போது (அல்லது சரியாகச் சொல்வதானால் இந்திய வருகையின்போது) ஜன்னலோர சீட் கிடைத்த நாட்களில், அதிலும் தூக்கம் வராத நேரங்களில் எட்டிப் பார்த்து, கீழே நீலமா அலை அலையா இருக்கே அது என்ன என்று கேட்டிருக்கக்கூடும். ஏர்ஹோஸ்டஸ் சிரித்தபடியே அதுதான் சார் கடல் என்று சொல்லியிருக்கக்கூடும். ஏ.ஆர்.ரகுமானுக்காவது கடலுடன் அப்படியான ஒரு பரிச்சயம் இருந்திருப்பது படத்தைப் பார்க்கும்போது தெரியவருகிறது.

கவிப்பேரரசுவோ கடல்ன்னா உசிலம்பட்டிக்கு தெக்கேயோ ஆண்டிப்பட்டிக்கு வடக்கயோ இருக்கற கம்மாய்தான் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது. இச்சி இலையையும், ஆட்டுக்குட்டியையும் தாண்டி கவிதைக் குதிரை நகரவே இல்லை. வடிவேலு ஒரு படத்தில் ஆனியன் ஊத்தப்பம் எப்படிப் போடவேண்டும் என்று இன்ஸ்ட்ரக்‌ஷன் தருவார். அரைக்கரண்டி நெய்யை விட்டு, ரெண்டு கரண்டி மாவை பொத்தினாப்புல ஊத்தி, பொடி பொடியா வெங்காயத்தை நறுக்கி, கொஞ்சம் காரட்டையும் நறுக்கி போட்டு, பொன்னிறத்துல பதமா திருப்பிப் போட்டு நல்ல கம கமன்னு கொண்டுவான்னு சொல்வார். சர்வரோ சரக்கு மாஸ்டரைப் பார்த்து ஒரு ஆனியன் ஊத்தப்பம் என்று ஒற்றை வரியில் முடித்துவிடுவார். நாம் என்னதான் குறிப்புகள் கொடுத்தாலும் சரக்கு மாஸ்டர் அவருக்குத் தெரிந்ததைத்தானே செய்ய முடியும். கடல்புரத்தைப் பின்னணியாகக் கொண்ட படம் என்றாலும் விவசாயப் பின்புலம் கொண்ட வைரமுத்துவுக்கு ஆடும், வயலும், ஒத்தையடிப்பாதையும் இச்சி மர இலையும் மட்டும்தானே தெரியும். இதே வைரமுத்து அன்கோதான் அந்நியன் படத்தில் ஐயங்கார் ஆத்துப் பொண்ணைப் பார்த்து ஐயங்கார் ஆத்து அம்பி, இசக்கி கடை இனிப்பு மிட்டாயே என்று உருகிப் பாடுவதாக எழுதியிருந்தது. சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும்.

பிற கலைஞர்கள் எல்லாம் இவ்வளவு அலட்சியமாக ஒரு படத்தை அணுகியிருக்கும் நிலையில் கதை-திரைக்கதை-வசனத்தின் மூலம் ஒற்றை ஆளாக ஜெயமோகன் கடல்புரத்தை முடிந்தவரையில் நம் முன் கொண்டுநிறுத்துவதை கைதட்டி வரவேற்கத்தான் வேண்டும். இடைவேளை வரையிலான படம் மிகவும் அருமை. ஆனால், இரண்டு படத்தின் கதையை தனித்தனியான இரண்டு படமாகவே எழுதியிருந்தால், அதாவது, ”மணிஜி, உங்களுக்காக காதல் படத்தை மூழ்வதுமாக எழுதித் தருகிறேன். அந்த வணிக வெற்றியை வைத்து தேவன் – சாத்தான் போராட்டம் என்ற கொஞ்சம் கனமான இன்னொரு படத்தை எடுங்கள்’ என்று பேசி ஒப்புக்கொள்ளவைத்திருந்தால் தமிழுக்கு இரண்டு அருமையான படங்கள் கிடைத்திருக்கும். என்ன செய்ய… பாகனின் திசையில் அல்லவா பயணிக்க வேண்டியிருக்கிறது, அங்குசத்துக்குக் கட்டுப்படும் யானைக்கு.

********

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!