ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 2
சின்ன வயதிலிருந்தே நான் பார்வையற்றோர் பள்ளியில்தான் படித்து வந்தேன். படிப்பில் ஓரளவு சுட்டிதான் நான். ஆனால் கணக்கில் மட்டும் கொஞ்சம் வீக். நிறைய பேருக்கு இருக்கும் பிரச்னைதான் இது. எல்லா சப்ஜெக்டும் நல்லா வந்தாலும் ஏதாவது ஒரு சப்ஜெக்ட் மட்டும் மக்கர் பண்ணும். எனக்கும் அதே பிரச்னை, கணக்கில்.
அப்போ நான் எட்டாம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருந்தேன். கணித பாடத்துக்கு அதுவரை இருந்த ஆசிரியர் விடைபெற்று வேறு ஒரு புது ஆசிரியர் வந்திருந்தார்.
இடைநிலைத் தேர்வு (மிட்டெர்ம் டெஸ்ட்) வருகிறது. தேர்வு முடிந்து திருத்தப்பட்ட விடைத்தாள்களை எங்களுக்குக் கொடுத்துக்கொண்டே வருகிறார். எல்லாரையும் இயல்பாக அவரவர் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் வாங்கியிருந்த மதிப்பெண்களை கூறிக்கொண்டே வந்த ஆசிரியர், என் பெயரைக் குறிப்பிடும்போது மட்டும், ‘இப்போ ஒருத்தரோட மார்க்கை நான் சொல்லப்போறேன். அவர் ரொம்ப பெரியவர். நம்ம கிளாஸ்லயே ஹீரோ அவர். அவர் யார் தெரியுமா? யார் தெரியுமா? மிஸ்டர். இளங்கோதான்!’ என்று கிண்டலாக என்னை விளித்து பின்னர், எல்லாரையும் பார்த்து ‘ஐயா எடுத்த மார்க் எவ்ளோ தெரியுமோ? 100 க்கு 35. பெரிய மார்க் இல்லே?’ என்றார்.
மாணவர்கள் மத்தியில் களுக்கென்று ஒரு சிரிப்பொலி.
நான் ஒரு கணம் கூனிக் குறுகிப் போனேன்.
என்னைப் பார்த்துத் திரும்பி, மேற்கொண்டு அவர் தொடர்கிறார். இதே மாதிரி போப்பா… நல்ல வளர்ச்சி. சூப்பரா இருக்கும். இவங்கல்லாம் அடுத்து நைன்த் ஸ்டாண்டர்ட் போய்டுவாங்க. நீ இதுலயே இருக்கலாம்.
இது சின்ன விஷயமா சிலருக்குப் படலாம். ஆனா என்னைப் பொருத்தவரை அவமானத்துக்கு மேல் அவமானம். அவரோட வார்த்தைகள் ஒவ்வொன்னும் ஈட்டியா இருக்கு எனக்கு.
நான் ஒரு பார்வையற்ற மாற்று திறனாளியாய் இருந்தும் நான் ஆறாம் வகுப்பிலிருந்தே எல்லா விஷயத்துலயும் ஒரு முன்மாதிரி மாணவர்னு பேரெடுத்தவன். பள்ளியில் நடக்கும்
போட்டிகள் எதுவாக இருந்தாலும் அது பேச்சுப் போட்டியாக இருந்தாலும் சரி… பாட்டுப் போட்டியாக இருந்தாலும் சரி…. எதுவாக இருந்தாலும் அதில் கலந்துகொண்டு முதல் மூன்று பரிசுகளுள் ஒன்றை தட்டிக்கொண்டு வந்துவிடுவேன்.
இப்படி எல்லாவற்றிலும் நான் அடித்து தூள் செய்யும்போது என்னுடைய கணித பலவீனத்தை மட்டும் குத்திக்காட்டும் முயற்சி தொடர்ந்து நடந்து வந்தது. ஆசிரியர் ஸ்தானத்தில் இருந்து ஒரு மாணவனை சரியாக வழி நடத்தவேண்டியவர்… இப்படிச் செய்தது கொடுமைதான். என்ன செய்வது?
கனத்த மனதுடன் வீட்டுக்குத் திரும்பிய எனக்கு அன்றைய இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. நடந்த இந்த அவமானத்தை நான் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் இல்லை.ஏன் இப்படி? எங்கே தவறு நடந்தது? எப்படி இந்த அவமானத்தைத் துடைப்பது? இப்படி பலவாறாக சிந்தனை ஓடுகிறது.
அடுத்த பத்து நாட்களுக்கு வகுப்பு வரும்போதெல்லாம் இதே சிந்தனைதான் எனக்கு மனத்தில் நிழலாடியது.
கணக்கென்ன பெரிய விஷயமா? அதெப்படி வராமல் போய்விடும்? கணிதத்தின் அடிப்படையே வாய்ப்பாடுதான். எல்லாரும் 16 ஆம் வாய்ப்பாடு வரைதான் அப்போதெல்லாம் மனனம் செய்வது வழக்கம். ஆனால் நான் 20ம் வாய்ப்பாடு வரை மனனம் செய்ய ஆரம்பித்தேன்.
வாய்ப்பாடு ஓரளவு கைவரப்பெற்றதும் நம்பிக்கை கைகூடியது. நம்மால் நிச்சயம் கணிதத்தில் ஒரு நல்ல மதிப்பெண்ணைப் பெற முடியும் என்று நம்பிக்கை உறுதியாக ஏற்பட்டது. வேப்பங்காயாக கசந்த கணிதம் இப்போது இனிக்க ஆரம்பித்தது.
அதற்குப் பின்னர் பல கணக்குகள், கூட்டல்கள், கழித்தல்கள், சூத்திரங்கள் என எல்லாவற்றையும் திரும்பத் திரும்ப ப்ராக்டீஸ் செய்தேன். கணக்குக்கு மட்டும் கொஞ்சம் கூடுதல் நேரம் ஒதுக்கினேன்.
சரியாக ஆறு மாதங்கள் கழித்து திரும்பவும் ரிவிஷன் தேர்வு வந்தது.
இந்த முறை வாத்தியார் விடைத்தாள்களை அவரவர் பெயர்களை கூறிக்கொண்டே கொடுக்கிறார். என்னோட தாளை அளிக்கும்போது. ‘முன்னேற்றம் அப்படின்னா அதுக்கு அர்த்தம் இதுதான். இப்போ ஒருத்தரோட மார்க்கை நான் சொல்லப்போறேன். அதை சொல்றதுக்கு முன்னாடி அவர் முந்திய தேர்வுகளில் எல்லாம் எடுத்த மார்க் எவ்ளோ தெரியுமா? 35, 50. இப்போ எவ்ளோ தெரியுமா? 90!’
‘வெல்டன் இளங்கோ. 100 க்கு 90 மார்க் எடுத்திருக்கிறார் மிஸ்டர். இளங்கோ’ என்று கூற, மாணவர்கள் கை தட்டுகிறார்கள்.
அன்றைக்குதான் நான் தலை நிமிர்ந்தேன். பட்ட அவமானம் துடைத்தெறியப்பட்டது. மேற்படி அனுபவங்களுக்கு பிறகு கணக்குமீது எனக்கு அலாதி பிரியம் ஏற்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதத்தில் நான் வாங்கிய மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? நூறுக்கு நூறு.
ஒரு காரியத்தை உங்களால் செய்யமுடியாது என்று யாராவது கூறினால், சொன்னவர்கள் மேல் கோபப்படாமல், அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? அது ஏன் நம்மால் முடியாது? நம்மிடம் உள்ள பலவீனம் என்ன? என்று யோசியுங்கள். நமது மைனஸை ப்ளஸ்ஸாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.