பேசு மனமே பேசு / அத்தியாயம் 3
நேர்மறை சிந்தனை என்றால் நேராக, நேர்மையாக சிந்திப்பது என்று அர்த்தமல்ல. பிரச்னைகள் வரும்போது, அவற்றுடன் கூடவே, ‘என்னாகுமோ’ என்ற பயம், பரிதவிப்பு, ஒருவிதமான ஆத்திரம், போன்றவையும் கூடவே பயணம் செய்யும். இந்தச் சமயத்தில் நமது மனத்தில் அடிப்படை மாற்றம் ஒன்றைக் கொண்டுவரவேண்டும். அதாவது நமக்கு ஏற்பட்டது பிரச்னை என்பதை, ‘சவால்’ என்பதாகக் கருதவேண்டும். இதற்குத்தான் ஆங்கிலத்தில் ‘பாசிடிவ்’ மனோநிலை என்று கூறப்படும் நேர்மறை சிந்தனை தேவைப்படும்.
நமது நடத்தைகள் அனைத்தும், புரிதல்களின்படி அமைகின்றன. உதாரணமாக ‘மலர்’ என்றால் உடனே நமக்குப் புரிவது என்ன? அழகானது, மணமுள்ளது, மிருதுவானது, இவை சார்ந்த புலன்களைத் தூண்டக் கூடியது என்பன போன்ற புரிதல்களும், இவை சார்ந்த நம்பிக்கைகளும்தான். இது மட்டுமின்றி, ‘மலர் போன்ற மென்மை’ என்ற உருவகங்களும், கற்பனைகளும். மேற்கண்ட அணுகுமுறையைப் பின்பற்ற வைக்கும்.
இது போலவே அனைத்து விஷயங்களிலும் நிகழ்கிறது. எவை பற்றிய தகவல்களாக இருந்தாலும், மனத்தில் செல்லும்போது, வார்த்தைகளாக, சொற்களாக அல்லது மௌனப் பேச்சாகவே இருக்கும். இவைதான் எண்ணங்களாக மாறுகின்றன. இவற்றின் அடிப்படையில்தான் செயல்களும், அவற்றை வெளிப்படுத்தும் அணுகுமுறைகளும் அமைகின்றன. நேர்மறை சிந்தனையும், அதை ஒட்டிய செயல்பாடுகளும், இதே விதத்தில்தான் இருக்கின்றன.
பிரபலமான ஆங்கில செய்தி சேனலில் பணி புரிந்த பெண்மணி, மந்தாகினி மல்லா. சிறு வயதிலிருந்தே அவரது தந்தையின் ஊக்குவிப்பால், வீர விளையாட்டுகளான, மலையேற்றம், படகுப்போட்டி, உடல்திறன் போட்டிகள் போன்றவற்றில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார். அவரது 16ம் வயதில் மலையேற்றம், படகு சவாரி ஆகியவற்றில் தொழில்முறை போட்டியாளர் என்ற தகுதியைப் பெற்றார். அந்த சமயத்தில் ஒருமுறை மலையேற்றத்தின்போது நடந்த விபத்தினால், கீழே விழுந்து தோள்பட்டை எலும்பு முறிந்து போனது. அத்துடன் மலையேற்றக் கனவு சிதைந்தது.
ஒரு வருடம் சிகிச்சை பெற வேண்டியிருந்ததால் வீட்டிலேயே இருந்தார். குறிப்பிட்ட ஒருநாளில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுற்றுலா பயண நிகழ்ச்சியின் ஒளிபரப்பைக் கண்டார். நிகழ்ச்சியின் படப்பிடிப்பு மற்றும் திறன், மந்தாகினியின் மனத்தில் புதிய யோசனையை உருவாக்கியது. தானும் ஒளிப்பதிவாளராக ஆக வேண்டும் என்பதுதான் அந்த எண்ணம்.
உடல்நிலை தேறி, கல்லூரி படிப்பை முடித்த பின், முனைப்புடன் முயற்சி செய்து ஒரு தொலைக்காட்சியில் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு முதலில் அளிக்கப்பட்ட பணி, குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு வேண்டிய தகவல்களைத் திரட்டுவதுதான். ஆனாலும், எப்படியாவது ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற எண்ணம் வலுத்துக்கொண்டே வந்தது. அதற்கான வேலை வாய்ப்புகளையும் தேடினார். சிறிது காலத்திலேயே, நினைத்தபடியே வேறொரு தொலைக்காட்சியில், ஒளிப்பதிவாளருக்கு உதவியாளராக வேலை கிடைத்தது.
அங்கே ஏற்கெனவே ஒளிப்பதிவாளராக இருந்த பெண்மணிக்கு உதவியாளராகச் சேர்ந்து, சிரத்தையுடன் உழைத்தார். சில வருடக் கடின உழைப்பிற்குப் பின், மந்தாகினி மல்லா, தனியாக நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்யும் அளவுக்கு உயர்ந்தார். இந்தத் துறையில், அதுவும் தொலைக்காட்சியில், பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பார்கள். அந்தத் துறையில் பெண் தனது திறமையை நிரூபித்து, ஒளிப்பதிவாளராக ஆவது சாதாரண விஷயமே அல்ல. அதை மந்தாகினி மல்லா சாதித்துக் காட்டினார்.
இதற்கு முக்கியக் காரணம், தான் விரும்பிய ஒரு துறை, அதிலும் தகுதி மற்றும் திறமையை நிரூபித்த ஒரு துறையில் புகழ் பெற ஆரம்பிக்கும்போது, விபத்தினால் பாழ்பட்டு போனால், நொந்து சோர்ந்து, முடங்குபவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். ஆனால் மந்தாகினி மல்லாவைப் போன்று இதுவரையில் நம்பியது, விரும்பியது, இனி இல்லை. இனி என்ன செய்ய முடியும்? என்ற கேள்வியைக் கேட்பவர்கள் சாதிக்கவே செய்கிறார்கள். இதற்கான மனப் பக்குவம் மந்தாகினிக்கு 16 வயதினிலே ஏற்பட்டதுதான் குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றம் நிகழ, முதலில் மனத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். மற்றும் செய்திகள், எண்ணங்களாக நம்பிக்கைகளாக உள்ளே செலுத்த வேண்டும். உற்றார், உறவினர் ஆகியோர், பிரச்னைக்குரிய சந்தர்பங்களில் தைரியமும், ஆதரவும் தர முடியும். ஆனால் அவையெல்லாம், நேர்மறை செய்திகளாக மனத்திற்குள் செல்ல வேண்டும். இப்படிச் செய்ததால்தான் மந்தாகினிக்கு வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தீர்மானம் செய்ய முடிந்தது. அதுவுமின்றி, இனி எதையாவது எடுத்து சாதிப்பேன் என்ற எண்ணம் மனத்தில் இருந்தால்தான், மாற்று வழிகூட கண்ணுக்கும் மனத்துக்கும் புலப்படும்.
குறிப்பிட்ட காலம்வரை இந்தச் சூழ்நிலையில் இருந்தேன்; இப்போது மாறியிருக்கும் சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதன்மூலம், அதன் விளைவிலிருந்து தப்பிக்க முடியாது என்ற தெளிவு வேண்டும்.
‘ஐயோ இனி செய்ய என்ன இருக்கிறது?’ என்று நினைத்தால் மனத்தில் அது தொடர்பான எண்ணங்கள்தான் உள்ளே செல்லும். நமது அடுத்த கட்ட நடவடிக்கைகளும் அதையொட்டியே இருக்கும். புதிய சூழ்நிலை என்னவாக இருந்தாலும், அதிலுள்ள கஷ்டங்கள் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும். அப்படி இல்லாமல், ‘அடுத்து எதையாவது செய்து வெற்றி பெற வேண்டும்’ என்று நினைத்தால், புதிய சூழ்நிலையில் உள்ள சாதகமான அம்சங்கள் கண்ணுக்குப் புலப்படும். இதன் மூலம் நம்முள் ஏற்கெனவே உள்ள எதிர்மறைப் பதிவுகளை அழிக்கலாம். புதிய தகவல்களைச் சேர்க்கலாம். அதன் அடிப்படையில் நமது செயல்கள் இருக்கும். இவற்றுக்கெல்லாம் அடிப்படைத் தேவை, மாற வேண்டும், அதன் மூலம் சூழ்நிலையை, தற்போதைய நிலைமையை மாற்ற வேண்டும் என்று ஆழமாக விரும்ப வேண்டும்.
இந்த நேர்நிலை மனப்பாங்குதான், மனத்தில் இது தொடர்பான எண்ணங்களை ஏற்படுத்தும். வெளி சூழ்நிலையிலிருந்து தேவையான, அதாவது நமக்கு சாதகமாக இருக்கக்கூடிய அம்சங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் மனநிலை, இதனால் ஏற்படும். சூழ்நிலை மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல், நாம் மாற வேண்டும் என்ற ரீதியில் செயல்பட்டால் அது பலன் தராது. சூழ்நிலை மட்டும் மாறினால் போதும், நான் மாற மாட்டேன் அல்லது என்னால் மாற்றிக் கொள்ள முடியாது என்ற அணுகுமுறையும், பலனைத் தராது. நமக்குள்ளே செலுத்தப்படும் எண்ணங்கள் சம நிலையில் இருக்க வேண்டும். இந்த எண்ணங்களில் மாற்றம் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், மேற்குறிப்பிட்ட குழப்படியான அணுகுமுறைதான்.
எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட அனுமதித்தால், நம்பிக்கைகளும் அதே ரீதியில்தான் இருக்கும். இவ்வகையான எண்ணங்களை கண்டறிவது மிகவும் முக்கியம். நாம் இருக்கும் சுற்றுப்புறத்தில் கெட்ட வாடை வருகிறது என்றால், அந்த வாசனையை, அதை அறிந்து உணர்த்தும் மூக்கை குறை சொல்வதால் எந்தப் பலனும் இல்லை. அதற்கான காரணத்தை தேடிக் கண்டுபிடித்து, அதை அப்புறப்படுத்த வேண்டும். அது போலத்தான், அணுகுமுறைகளில், செயல்களில் அவநம்பிக்கை, சோர்வு, சலிப்பு ஆகியவை வெளிப்பட்டால், இவற்றைக் குறித்து அலுத்துக் கொள்வதால் பலனில்லை. இவற்றை உருவாக்கிய எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பதிவுகள் ஆகியவற்றை அடையாளம் கண்டு, அவற்றை நீக்க வேண்டும். இதை எப்படிச் செய்வது?
0