இந்தியா முழுமைக்கும் மக்களுக்கு நற் கருத்துக்களை கூற வந்த சமூக அமைப்புகளும் சாதி வடிவைப் பெறத் தொடங்கின. சமத்துவத்துக்காகவும் விடுதலைக்காகவும் பக்தி நெறிகளை ஏற்றுக்கொண்ட வீர சைவர்கள் (கர்நாடகத்தில் தோன்றியவர்கள்) கடைசியில் தனியொரு சாதியாக அமைந்து போயினர். கொள்வினை, கொடுப்பினை முதலியவற்றைத் தமக்கிடையே மட்டுமே செய்து கொண்டனர். அகமண முறையை அனுசரித்து தமது சாதி அடையாளத்தை நிலைநிறுத்திக் கொண்டனர். கபீர்தாசர் வழிவந்த சத்நாமிகளும் எதிர் மரபாகத் தொடங்கி இன்று தனி ஒரு சாதியாக வாழ்கின்றனர்.
குஜராத்துக்கு அருகிலுள்ள சிந்த் பகுதியில் வாழும் ‘ஜாட்’ வகுப்பினர் 8ம் நூற்றாண்டில் ‘சண்டாளர்’களாகக் கருதப்பட்டனர். இப்பகுதியை பின்னாட்களில் ஆளவந்த முகமது காஸிம் போன்ற இஸ்லாமிய அரசர்கள் ஜாட் மக்களைத் தாழ்ந்த நிலையிலேயே வைத்திருந்தனர். ஆனால் 11ம் நூற்றாண்டில் ஜாட்டுகள் பஞ்சாப், ஹரியானா நோக்கி இடம் பெயரத் தொடங்கியதும் அவர்களது தலைவிதியும் மாறியது. 17ம் நூற்றாண்டு வாக்கில் அவர்கள் மதிப்பும் மாண்புமுடைய குடியானவ சாதியாக உருமாறியிருந்தனர். அதே நூற்றாண்டில் ஜாட் வகுப்பாரில் சிலர் மேற்கொண்டு செயல்படுத்திய கிளர்ச்சிப் போராட்டத்தின் விளைவாக அவர்கள் தங்களைப் போராளிகளாக உணர்ந்தனர். தாம் ராஜபுத்திரர்களுக்கு இணையானவர் என்று பெருமை பேசத் தொடங்கினர்.
சிவாஜி, தன்னை சத்திரியனாகக் காட்டிக்கொள்ள உத்தரப் பிரதேசத்திலிருந்து சில பார்ப்பனர்களைத் தருவித்து அவர்களது ஆசியையும், அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டார். மராத்தியப் பார்ப்பனர்கள் அவனுக்கு வழங்க மறுத்த தகுதியை இவ்வாறு அவன் பெற்றுக் கொண்டான்.
மராத்தியத்தில் தையல் தொழில் புரியும் சாதியில் சிலர் சாயம் வெளுக்கும், தோய்க்கும் பணியை மேற்கொண்டபோது வேறொரு சாதியாக உருமாறினார்கள். சில சமயங்களில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அச்சாதிக்குரிய பழக்க வழக்கங்களை அனுசரிக்காதபோது ‘கீழ்’ நிலைக்குத் தள்ளப்பட்டு ‘கீழ் சாதி’யான சம்பவங்களும் உண்டு. ராஜஸ்தானைச் சேர்ந்த மால்வா பகுதியில் ராஜபுத்திர வகுப்பார் விதவைகளை மறுமணம் புரிய அனுமதிப்பதில்லை. அவ்வகுப்பைச் சேர்ந்த ஒருசில குடும்பங்களில் இவ்வாறு விதவை மணங்கள் நிகழ்ந்தபோது அவர்கள் சாதியிலிருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு பிரிந்து மால்வா ராஜபுத்திரர்கள் இரு சாதிகளாகப் பிரிந்தனர்.
நாடு முழுமைக்கும் சமணம், பௌத்தம், ஆசிவகம், சைவம், வைணவம் ஆகிய வைதிக சமயங்களின் தொகைக்கேற்ப வருண வேற்றுமையும், சாதிப் பிரிவுகளும் வலுப்பெற்று வளர்ந்தன. ஒவ்வொரு பெருங் கோயிலைப்பற்றியும், ஊர்ப்புராணங்கள் தோன்றின. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று பெருமைகளுடன் இந்திரன் சாபம் இங்கு தீர்ந்தது, சந்திரன் சாபம் அங்கு தீர்ந்தது என்னும் கதைகளும் அந்தக் கோயிலுக்கு வந்து பயன்பெற்ற முனிவர்கள், அரசர்கள், தேவர்கள் முதலியவர்களுடன் குறிப்பிட்ட சாதி மக்களையும், தெய்வ சம்பந்தம் உடையவர்களாக அப்புராணங்கள் சித்தரித்தன.
இதனால் பல சாதியர்களும் தங்களை உயர்ந்த சாதியினராகக் காட்டிக் கொள்ளத் தங்களை மேலான தெய்வங்களுடன் சம்பந்தப்படுத்தும் கதைகளைப் புனைந்தனர். இதனால் சாதி எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. இந்த நிலையில் பட்டினவர், செம்படவர், பரவர், வன்னியர் முதலியோர் பற்றிய புராணக் கதைகளும் பெருகின.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாட்டை ஆங்கிலேயர் ஆண்டு கொண்டிருந்தபோது எட்கர் தர்ஸ்டன் தென்னிந்தியச் சாதிகளும் குலங்களும் என்னும் தலைப்பிட்ட ஆங்கிலப் பெருநூலை அரசிடம் ஒப்படைத்தார். அந்த ஆய்வறிக்கையில் ஒவ்வொரு சாதியினரும், குலத்தவரும் தம்மைத் தெய்வத்தோடு தொடர்பு கொண்டவர் என்று கூறியதை குறிப்பிட்டிருந்தார்.
1910ல் அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியபோது ஒவ்வொரு சாதியரும் தங்கள் கோத்திரங்களைக் குறிப்பிட வேண்டும் என்று கூறியது. அப்பொழுதுதான் ஒவ்வொரு சாதியினரும் தம்மை இந்திரன் குலமென்றும், சந்திரன் குலம் என்றும், அக்கினிக் குலம் என்றும், சூரியன் குலம் என்றும் பெருமையாகக் கூறிக் கொள்ளத் தொடங்கினர்.
கள்ளர், மறவர், அகம்படியார் தம்மை இந்திர குலம் என்று கூறிக் கொண்டனர். கல் தச்சர், பொன் வேலை செய்யும் ஆசாரிகள் தம்மை விசுவகர்மா பிராமணர்கள் என்று கூறிக் கொண்டனர். நாடார், வன்னியர் தம்மை ‘சத்திரியர்’ என்றும் ‘பள்ளர்’ தம்மை தேவேந்திரகுல வேளாளர் என்றும் கூறிக் கொண்டனர்.
இதனால் சோழப் பேரரசு காலத்தில் மேற்சாதியினர் (வலங்கையினர்) 98 பிரிவினராகவும், கீழ்ச்சாதியினர் (இடங்கையினர்) 98 பிரிவினராகவும் இருந்த சாதிப்பிரிவு 1901ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 2378 சாதிகளாகப் பெருகின. 1955ம் ஆண்டுக் கணக்கெடுப்பில் பின்தங்கிய வகுப்புக்கான குழு (பேக்வர்ட் க்ளாஸ் கமிஷன்) பின் தங்கிய சாதிகள் மட்டும் 2399 என்று கணக்கிட்டது. அப்படியென்றால் முன்னேறிய சாதிகள் (ஃபார்வர்ட் க்ளாஸ்)
எத்தனை? தாழ்த்தப்பட்ட சாதிகள் எத்தனை? இவற்றைக் கணக்கிட்டால் தமிழ்நாட்டில் சாதிப்பிரிவுகள் மட்டும் நாலாயிரத்தை நெருங்குமா? தாண்டுமா?
ஆங்கிலேயர் ஆட்சியில் தங்களை உயர்ந்த குலத்தார் என்று கூறிக்கொண்டவர்கள், நாடு விடுதலைப் பெற்றபின் தங்களைத் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் தொடங்கி விட்டனர்.
0
மனிதர்களைப் பற்பல சாதிகளாகப் பாகுபடுத்தும் பழக்கம் வருணாசிரமம் என்னும் சதுர்வண முறை நம் துணைக்கண்டத்தை ஆக்கிரமித்து நம் சமூக போராட்டங்கள் அனைத்துக்கும் – சிப்பாய்க் கலகத்திலிருந்து அயோத்தி காலம் வரை காரணமாக இருந்திருக்கிறது.
மருத்துவ நோக்கில் சாதிகளைப் பிரிக்க வேண்டுமென்றால் ரத்த க்ரூப் ஏ,பி,ஓ பாஸிட்டிவ், நெகட்டிவ் என்றுதான் பிரிக்க முடியும். ரத்த தானம் செய்யும்போது பொருத்தமான ரத்தம் தானா? என்று பார்த்துக் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான் மருத்துவத்தின் சாதி.
மானுடவியலில் மனித சாதியை ஆப்பிரிக்கன், ஏசியன், ஆஸ்திரேலியன், நியூ கினியன், காகேசியன் என்று ஐந்து வகைகளில் அடக்கிவிடுகிறார்கள். நாமெல்லோரும் ஆசிய வகை.
இந்த வகைகளிடையே சரும நிறம், கண்களின் அளவு, அமைப்பு, தலைமயிர் சுருட்டை போன்ற வெளித் தோற்றங்களில் வேறுபாடுகள் தெரிகின்றன. ஆனால் உள்ளுறுப்புகளின் அமைப்பில் வித்தியாசம் இல்லை. ஓர் ஆப்பிரிக்கனின் இதயத்தை ஒரு ஆசியனுக்கு வைக்க முடியும்.
ஆசியனின் சிறுநீரகத்தை ஒரு காகேசியன் ஏற்கலாம். இறைச்சித் தோல் எலும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ என்று சிவவாக்கியர் கேட்டதற்கு பதில் ‘இல்லை’ என்பதே.
நவீன மனிதன் எப்போது உண்டானான் என்பது பற்றிச் சுவாரஸ்யமான சர்ச்சைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 1987ம் ஆண்டு அமெரிக்க பெர்கல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலன் வில்ஸன் என்பவர் நேச்சர் இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் ஒரு புதிய சித்தாந்தம் கொண்டு வந்தார்.
‘நம் முன்னோர்கள் ‘நியண்டர்தால்’ என்னும் இனமல்ல. நவீன மனிதன் சுமார் ஒரு லட்சத்திலிருந்து ஒரு லட்சத்து நாற்பதாயிரம் வருடங்களுக்கு முன் ஒரு ஆப்பிரிக்கக் குழுவிலிருந்து தோன்றினான். இன்றைய மனித சமுதாயம் அத்தனை பேரும் அந்த ஆப்பிரிக்கக் குழுவிலிருந்து தோன்றியவர்கள்தான்’ என்று ஆதாரம் காட்டி எழுதியிருக்கிறார் வில்ஸன். இதற்காக அவர் பயன்படுத்திய அறிவியல் வளர்ச்சி முறை மாலிக்யுலர் பயாலஜி என்னும் இயலைச் சார்ந்தது.
இந்த ஆய்வின்படி அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி, எள்ளுப்பாட்டி, என்று தாய் வழியிலேயே வம்சாவளியைப் பின்னால் தள்ளிக் கணக்கிட முடிந்தது. அவ்வாறு கணக்கிட்டால் நாம் எல்லோரும் ஒரு லட்சத்து சொச்சம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஒரே பெண்மணியின் வாரிசுகள். உலகில் உயிர் வாழும் அத்தனை மனிதர்களும் இந்த மகாமகா பாட்டியிடமிருந்து மைட்டோ காண்ட்ரியா பெற்றவர்கள் என்ற ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அந்தப் பெண்மணிக்கு ‘மைட்டோ காண்ட்ரியல் ஈவ்’ என்றும் பெயரிட்டார்.
பைபிளின் ஏவாள் இந்த மாதிரி இருக்க விரும்பவில்லை. இந்த ஒரே தாய் சித்தாந்தத்துக்கு எதிராக அவர்கள் மற்றொரு சித்தாந்தம் சொல்கிறார்கள். அது ‘நோவாவின் படகு’ சித்தாந்தம். இதன்படி ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பகுதியிலிருந்து வந்த நவீன மானிடர்களால் இடம் பெயர்க்கப்பட்டனர். பிறகு ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் அவர்கள் பரவினார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் ஆப்பிரிக்க ஏவாள் சித்தாந்தம் பலரை வசீகரித்துள்ளது. அதன் சமூகவியல் அர்த்தங்கள் மிக மிக ஆழமானவை. மனித இனத்தில் எல்லோரும் ஒரே தாயிடமிருந்து ஜனித்தவர்கள் ஆவார்கள்.
ஆராய்ச்சிகளும், மருத்துவ உண்மைகளும் என்ன சொன்னாலும் சாதி பிடியிலிருந்து இறங்கி சமூக தளத்தில் ஒன்றாக இருக்க இங்கு யாரும் தயாராக இல்லை என்பதே உண்மை.
0