மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 29
உலகில் நடக்கும் எந்தவொரு புரட்சியிலுமே யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுடைய மதிப்பீடுகளின் அடிப்படையில்தான் புதிய அரசு அமைவது வழக்கம். ரஷ்யாவில் ஜார் மன்னரை எதிர்த்து பாட்டாளிவர்க்கம் போராடி ஆட்சி அமைத்தபோது பாட்டாளிகளின் மதிப்பீடுகள்தான் புதிய ஆட்சியின் அடிப்படையாக அமைந்தன (அதை நடைமுறைப்படுத்துவதில் இருந்த சர்வாதிகாரத்தன்மை தனியாகப் பேசப்படவேண்டிய ஒன்று). அடிமை முறைக்கு எதிரான போராட்டமாக நடைபெற்ற அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு அமைந்த அரசு சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உருவானது.
ஆனால், இந்தியாவில் மட்டும்தான் ஒரு விபரீதமான விசித்திரம் நடைபெற்றது. பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக நாம் போராடினோம். ஆனால், அவர்களை விரட்டியடித்துவிட்டு நாமே பிரிட்டிஷாராகிவிட்டோம் (அதுவும் அரைகுறையாக). அதாவது, பிரிட்டிஷாரை விரட்டிவிட்டு அந்த இடத்தில் நம்மிடம் இருந்தவர்களில், யார் கூடுதல் பிரிட்டிஷ் அடிமை மனோபாவம் கொண்டவர்களாக இருந்தார்களோ அவர்களிடம் ஆட்சியை அமைக்கும் பொறுப்பையும் அரசியல் சாசனத்தை எழுதும் பொறுப்பையும் கொடுத்தோம். பிரிடிட்ஷாருக்கு எதிராக எந்த காந்தியின் வழியில் போராடினோமோ அவருடைய மதிப்பீடுகளை முற்றாக ஒதுக்கித் தள்ளினோம். எஜமானர் மாறிவிட்டார். ஆனால், அடிமைத்தனம் மாறவில்லை. அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆனால், நோயாளிதான் இறந்துவிட்டார்.
சுதந்தரம் பெற்ற பிறகு இந்தியா எப்படியான நாடாக இருக்கவேண்டும் என்று காந்தி ஒரு கனவை முன்வைத்திருந்தார். கிராம ஸ்வராஜ்ஜியம் என்று அவர் அதை எளிய வார்த்தைகளில் அடையாளப்படுத்தியிருந்தார்.
“இந்தியாவின் அதிகாரமையமாக டெல்லியோ பம்பாயோ கல்கத்தாவோ இருக்காது. அதிகாரமானது லட்சக்கணக்கான அதன் கிராமங்களிடம் இருக்கும். மக்கள் தன்னர்வத்துடன் ஒன்றுகூடிச் செயல்படுவார்கள். நாஜிக்களின் ஜெர்மனியைப் போலவோ கம்யூனிஸ்ட்டுகளின் ரஷ்யாவைப்போலவோ சர்வாதிகாரத்தால் அந்தக் கூட்டுறவு பெறப்பட்டிருக்காது.
ஏழு லட்சம் கிராமங்கள் இந்தியாவில் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு வாக்கு. அதாவது ஒவ்வொரு கிராமத்தினரும் ஒரு நபரைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த கிராமப் பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகியைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த மாவட்ட நிர்வாகிகள் மாநிலப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த மாநிலப் பிரதிநிதிகள் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர் அனைவருக்குமான தலைமை நிர்வாகியாக இருப்பார்.
ஒவ்வொரு கிராமமும் தன்னுடைய அடிப்படைத் தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொள்ளும் திறமை கொண்டதாக இருக்கும். அதேநேரம் தேவையான பிற விஷயங்களில் பிற கிராமங்களைச் சார்ந்ததாகவும் இருக்கும். உணவு, உடை ஆகியவற்றைத் தானே உற்பத்தி செய்துகொள்ளும். கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் இருக்கும். பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் மன மகிழ் நிகழ்வுகளுக்கும் விளையாட்டுக்கும் தேவையான இடங்கள் இருக்கும். அதற்கும் மேலாக நிலம் இருந்தால் அங்கு கஞ்சா, புகையிலை போன்றவை அல்லாமல் பிற உணவுப்பயிர்கள் பயிரிடப்படும். கிராமத்தின் சார்பில் ஒரு பொது கலையரங்கம் இருக்கும். பள்ளிக்கூடம் இருக்கும். பொது நலக்கூடம் இருக்கும். சுத்தமான குடிநீர் வசதி இருக்கும். நிலங்களுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகள் இருக்கும். அனைவருக்கும் கட்டாயக் கல்வி தரப்படும். முடிந்தவரை எல்லா செயல்பாடுகளும் கூட்டுறவாகச் செய்யப்படும். இன்று தீண்டாமையின் அடிப்படையில் சாதிகள் மேல் கீழ் என படிநிலைப்படுத்தப்பட்டிருப்பதுபோல் இருக்காது. அங்கு போராடும் வழி முறை என்பது சத்யாகிரக, ஒத்துழையாமை இயக்க வடிவில் அகிம்சை முறையிலேயே இருக்கும்.’
காந்தியின் இந்த கிராம ராஜ்ஜியம் என்பது அப்படியொன்றும் முற்றிலும் புதியதொரு கண்டுபிடிப்பு அல்ல. காலகாலமாகவே இந்தியாவில் இருந்துவந்த கிராம நிர்வாக வழிமுறைதான். அதில் புதிய அறமாக சாதி சார்ந்த சமத்துவத்தை காந்தி அழுத்தமாக முன்வைத்திருந்தார். குழந்தை ஒன்று இளைஞராவது என்றால் குழந்தைப் பருவத்தில் இருந்த கைகளும் கால்களும் பலம் பெற்று வளர்வதுதானே. நேற்றில் கால் ஊன்றி நாளையை எட்டிப் பிடிக்கும் ஒன்றாகத்தானே எந்தவொன்றின் வளர்ச்சியும் இருக்கவேண்டும். யாராக இருந்தாலும் அப்படித்தான் யோசித்திருக்கவேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. இந்தியாவின் கடந்த கால வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்களிடம்தான் அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சாதியை இந்தியாவின் சாபமாகப் பார்த்தார்கள். கிராமத்தை அதன் கோட்டையாகப் பார்த்தார்கள்.
மனிதர்களைத் தனித்தனியாக அடையாளப்படுத்தும் சாதி, மதம், கடவுள் நம்பிக்கை போன்றவையெல்லாம் ஆதிக்க சக்திகளின் கண்டுபிடிப்புகள் அல்ல. எளிய மக்களின் பல ஆண்டுகால நம்பிக்கைகள், மதிப்பீடுகள் ஆகியவற்றின் விளைவாக உருவானவை. ஆனால், ஆதிக்க சக்திகள் எளிய மக்களின் அந்த நம்பிக்கைகளையும் மதிப்பீடுகளையும் தங்கள் ஆதாயத்துக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அந்த அதிகாரத்தை அவர்கள் கைகளில் இருந்து பறிப்பதுதான் நியாயமான செயலாக இருக்கமுடியும். ஏனென்றால் அந்த மதிப்பீடுகளுக்கு சாதகமான ஒரு பங்களிப்பும் உண்டு.
உதாரணமாக சாதி என்பதை எடுத்துக்கொண்டால், பிற சாதியினரிடம் விலகலை ஏற்படுத்தும் அதே நேரத்தில் குறிப்பிட்ட சாதியினருக்குள் நட்பையும் ஸ்நேகத்தையும் அது உருவாக்கவும் செய்கிறது. மனிதன் அடிப்படையில் சுய நலம் மிகுந்த ஒரு விலங்குதான். அப்படிப்பட்டவன் சக மனிதர்களுடன் நட்புறவு கொள்ள குலம், சாதி என்ற மனோபாவம் மிகவும் அவசியமாக இருந்தது. அந்தவகையில் சாதிக்கு ஒரு ஆக்கபூர்வமான பங்களிப்பு உண்டு. எனவே, சாதி மதிப்பீடுகள் முழுவதுமே தவறு என்று சொல்லி அவற்றின் அடிப்படையில் உருவான அமைப்புகளை அழிக்க முற்படுவது சரியாக இருக்காது. இதனால்தான் எளிய மக்களின் நலனில் அக்கறைகொண்டு செயல்படும் பல போராட்ட இயக்கங்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமலும் அவர்களைச் சுரண்டும் சக்திகளுக்கு பெரும் ஆதரவும் கிடைத்துவருகிறது.
ஒரு மனிதன் தன் கைகளால் கொலை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். கைகள் இருக்கும்வரை மனிதர்கள் கொலை செய்யத்தான் செய்வார்கள். எனவே, அந்தக் கைகளை வெட்டி எறிய வேண்டும் என்று சொல்வது போல் இருக்கிறது சாதி இருக்கும்வரை ஏற்றத்தாழ்வும் ஒடுக்குமுறையும் இருக்கும் என்று சொல்வது. உண்மையில் கைகளைக் கொண்டு ஒருவன் கொலை செய்யாமல் தடுக்க என்ன வழி உண்டோ, நல்ல செயல்களைச் செய்யவைக்க என்ன வழிகள் உண்டோ அதைத்தான் செய்யவேண்டும். அந்தவகையில் சாதி, மதம், தெய்வ நம்பிக்கை போன்ற அமைப்புகளை அவற்றின் தீய அம்சங்களை அகற்றிச் சீர்திருத்தத்தான் ஒருவர் முயற்சி செய்யவேண்டும். ஏனென்றால் அடிப்படையில் அவை ஆதிக்க சக்திகளின் கண்டுபிடிப்புகள் அல்ல. மனிதர்களின் அதி இயல்பானவை.
காந்திக்கு இந்தப் புரிதல் இருந்தது. எனவேதான் சாதி சார்ந்த கெட்ட குணங்களை விட்டொழித்துவிட்டு சேரிகளுக்குச் சென்று பிராயச்சித்தம் செய்யுங்கள் என்று ஆக்கபூர்வமாகத்தான் அறைகூவல்விடுத்தார். அம்பேத்காரியவாதிகள், பெரியாரியர்கள் தங்களுக்கு மேலாக இருக்கும் சாதி மீது வெறுப்புடன் விமர்சனம் வைத்தனரேதவிர தமக்குக் கீழான சாதியினர் மீதான அடக்குமுறையை அப்படி ஒன்றும் விட்டொழித்திருக்கவில்லை. முதலில் பிராமண-பனியாவை ஒழிப்போம். அதன் பிறகு நம் பிரச்னையைப் பார்ப்போம் என்றுதான் சிந்தித்தார்கள். அது எவ்வளவு பிழையான சிந்தனை என்பதை காலம் நமக்குத் தெளிவாகக் காட்டிவிட்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் ஒட்டுமொத்த சாதி வெறியை விட்டொழிக்கச் சொன்ன காந்தியின் அணுகுமுறை துலக்கம் பெறுகிறது. காந்தியின் போதனைகளை ஏற்றுக்கொண்ட மேல் சாதியினர் தங்களுக்குக் கீழே இருக்கும் சாதியினருக்கு சேவை செய்ய முன்வந்ததன் மூலம் சாதி வெறியை விட்டொழிப்பது எளிதுதான் என்பதையே உணரவைத்திருக்கிறார்கள்.
இந்த உண்மையைப் புரிந்துகொள்ளும் பக்குவமும் வெளிப்படையாக அதைச் சொல்லும் தைரியமும் உள்ளவர்களைத் தலைவர்களாகப் பெறும்போதுதான் ஒரு சமூகம் முன்னேற்றத்தின் பாதையில் செல்லமுடியும். ஆனால், துரதிஷ்டவசமாக இந்தியாவுக்கு அப்படியான கொடுப்பினை இருந்திருக்கவில்லை. அடிமை இந்தியாவை விழித்தெழ வைக்க ஒரு காந்தி இருந்தார். ஆனால், சுதந்தர இந்தியாவை வழி நடத்த நேருவும் அம்பேத்கரும்தான் நமக்குக் கிடைத்தார்கள்.
சுதந்திரம் பெற்ற புதிய இந்திய அரசு தீவிர ஆய்வுகளுக்குப் பிறகு முன்வைத்த அரசியல் சாசன முன்வரைவின் ஆயிரக்கணக்கான பக்கங்களில் கிராமம் என்ற ஒற்றை வார்த்தைகூட இருந்திருக்கவில்லை (கிராம அலகுகளுக்கு உரிய அதிகாரம் கொடுக்க வேண்டும் என்ற பரிந்துரையைப் பெயரளவில் சேர்க்கவே பெரும்பாடு படவேண்டியிருந்தது).
இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஏனென்றால் இந்தியாவின் நவ சிற்பிகளில் முதன்மையானவர்களாக இருந்த நேருவுக்கும் அம்பேத்கருக்கும் இந்திய கிராமம் பற்றி பிரிட்டிஷாரைவிடப் பெரிய வெறுப்பே இருந்தது. அவர்கள் பிறப்பால் நிறத்தால் இந்தியர்களாக இருந்தார்கள். சிந்தையாலும் செயலாலும் பிரிட்டிஷரின் தாசர்களாக, சொன்னதைச் செய்துமுடிக்கும் குமஸ்தாவர்க்கத்தின் தலைமைப் பணியாளர்களாக இருந்தனர்.
நேரு கிராமங்களை அறிவுபூர்வமாகவும் கலாசாரபூர்வமாகவும் பின்தங்கிய இடமாகக் கருதினார். அங்கிருப்பவர்கள் எல்லாரும் குறுகிய ம்னோபாவம் கொண்டவர்கள். எனவே, உண்மையற்றவர்களாகவும் வன்முறையாளர்களாகத்தான் இருப்பர்கள் என்று கருதினார். கிராமங்களைப் புகைப்படங்களில் பார்த்திருக்கும் தைரியத்தில் இந்த அபாரமான கண்டுபிடிப்பை வெளிப்படையாக, தைரியமாக, கூச்சமில்லாமல் முன்வைத்தார். இயற்கை வளங்கள் அதிகமாகவும் மக்கள்தொகை குறைவாகவும் இருந்த மேற்குலகுக்கு தொழில்மயமாதல் மிகவும் அவசியமானதாக இருந்தது. ஆனால், புலியைப் பார்த்து யானையும் சூடு போட்டுக்கொள்வதுபோல் மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இந்தியாவுக்கும் அதையே முன்வைத்தார். அவர் விரும்பிய நவீன கோயில்களைக் கொண்ட ஓர் இந்தியா உருவாகவேண்டுமென்றால் அதற்கு மையப்படுத்தப்பட்ட வலுவான ஓர் அரசுதான் தேவை என்பதில் உறுதியாக இருந்தார். இந்தியாவின் வளர்ச்சி என்பது அது எந்த அளவுக்கு மேற்குலகின் நகலாக ஆகிறதோ அதில்தான் இருக்கிறது என்று கருதினார். எனவே, அவருடைய உலகில் கிராமங்களுக்கு இடமே இல்லை என்பதில் ஆச்சரியமே இல்லை.
நவீன இந்தியாவின் இன்னொரு சிற்பியான அம்பேத்கரின் உலகிலும் கிராமங்களுக்கு இடமில்லை. அவர் கிராமங்களை சாதிவெறியின் அடையாளமாகக் கண்டார். சாதி சார்ந்த ஏற்றத் தாழ்வு மறைய வேண்டுமானால், கிராமங்கள் அழியவேண்டும் என்று நம்பினார். அவருடைய தீர்மானம் ஒருவகையில் சரியானதுதான். ஏனென்றால், அனைத்து கிராமங்களுமே அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் சாதியின் அதிகாரமையமாகவே இருந்தன. எனவே, சமத்துவமான சமூகம் உருவாகவேண்டுமென்றால் கிராமப்புற நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டாகவேண்டிய தேவை இருந்தது.
ஆனால், இவர்கள் இருவருமே கிராமத்தை வலுவிலக்கச் செய்ததன் மூலம் நகரத்தை வலுவானதாக ஆக்கிவிட்டார்கள். நாய்க்கு பதிலாக ஓநாயைக் காவலுக்குக் கொண்டுவந்து வைத்ததைப் போன்ற ஒரு செயல் இது.
இந்தியாவுக்குத் தேவையான தொழில் வளர்ச்சி என்பது மேற்குலகில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்தி சொன்னது வெறும் அலங்கார வாக்கியம் அல்ல. இன்றும் பெருமளவிலான மக்கள் கிராமங்களில்தான் வாழ்கிறார்கள். விவசாயம்தான் இந்தியாவின் பிரதான தொழிலாக இருக்கிறது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை முன்னேற்றத்தின் பாதையில் கொண்டு செல்வதென்றால், விளைநிலங்களின் பரப்பை அதிகரித்தல், ஏராளமான ஏரிகளையும் குளங்களையும் வெட்டி நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குதல், உற்பத்தி அளவைப் பெருக்குதல், கடின வேலைகளை எளிமைப்படுத்துதல், உற்பத்திப் பொருட்களைப் பதப்படுத்துதல், நியாயமான முறையில் பகிர்ந்தளித்தல் என நடந்தேறியிருக்க வேண்டும். அதுதான் உண்மையான இந்தியத் தொழில் வளர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால், நேருவோ, மேற்குலகுக்கு நன்மை தரும் முறையில் இந்தியாவைத் தகவமைப்பதையே தன் பொருளாதார லட்சியமாக முன்வைத்தார். அடுத்துவந்த அரசுகள், இந்தியாவின் கனிம வளங்களில் ஆரம்பித்து உழைப்பு சக்திவரை அனைத்தையும் சூறையாடிக்கொள்ள பன்னாட்டு முதலைகளுக்கு கதவுகளை அகலத் திறந்துவைத்துவிட்டிருக்கிறது. சுதேசி இயக்கம் என்பது இன்று அனைத்துத் தளங்களிலும் முற்றாகத் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. நேரு இதை விரும்பியிருக்கமாட்டார். ஆனால், அவர் ஆரம்பித்துவைத்த தொழில்மயமாக்கம் இதைத்தான் சாத்தியப்படுத்தும் என்பது காந்திக்குத் தெரிந்திருந்தது. எனவேதான் அவர் பலமுறை நேருவை அவருடைய மேற்கத்திய மோகம் குறித்து எச்சரித்திருக்கிறார். ஆனால், காந்தியின் கிராம ராஜ்ஜியம் ஒரு கற்பனைக் கனவு என்று எள்ளி நகையாடினார் நேரு.
காந்தி தன் கிராம ராஜ்ஜியத்தின் ஆதார அம்சத்தை ராம ராஜ்ஜியத்தில் இருந்து எடுத்திருந்தார். அம்பேத்கருக்கு கிராம ராஜ்ஜியத்தை எதிர்க்க அது ஒன்றே போதுமானதாக இருந்தது. ‘தவம் செய்யும் சூத்திரனின் தலையைக் கொய்வதுதான் ராம ராஜ்ஜியம்’ – இதுதான் இந்தியாவில் தோன்றிய அனைத்து மேதைகளின் போராளிகளின் ஏகோபித்த கண்டுபிடிப்பு.
உத்தர ராமாயணத்துக்கு மக்கள் மத்தியில் என்ன மரியாதை இருந்தது? அது பிற்சேர்க்கையா, இடைச்செருகலா? சரீரத்துடன் மேலுலகம் செல்ல விரும்பித்தான் சம்புகன் தவம் செய்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறதே… துவிஜர்களை எதிர்த்துப் போராடியதாகவா சொல்லப்பட்டிருக்கிறது. உன்னோடு ஐவரானோம் என்று வேடனை ஆரத் தழுவிய ராமன், பழங்குடிக் கிழவி கடித்துக் கொடுத்த பழத்தை ருசித்து உண்ட ராமன், இன்று போய் நாளை வா என்று பகைவனுக்கும் அருளிய ராமன், சிற்றன்னை சொன்ன ஒற்றை வார்த்தைக்காக நாட்டைத் துறந்து சென்ற ராமன்… இந்த ராமன்கள்தானே எளிய மக்களின் மனத்தில் இடம்பிடித்திருக்கும் ராமன். இந்திய மக்கள் தங்கள் சாதி உணர்வுக்கு ராமனையா முன்மாதிரியாக வைத்திருக்கிறார்கள்? வேண்டுமானால், இன்றைய பெண்ணிய அளவுகோல்களை வைத்து ராமனை ஆணாதிக்கவாதி என வேண்டுமானால் சொல்லமுடியுமே தவிர சாதி வெறிக்கு ராமனை முன்வைப்பதில் எந்த நியாயமும் இருக்கமுடியாது. ஆனால், அம்பேத்கரில் ஆரம்பித்து பெரியார் வரை அனைவரும் ராமராஜ்ஜியம் என்றால் அது சாதி வெறி பிடித்தது என்ற முடிவுக்கு சம்புகவதம் என்ற ஒற்றைக் கதையை முன்வைத்து வந்துவிட்டிருக்கிறார்கள்.
எனவேதான் அம்பேத்கர் கிராமங்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது என்பது சாதி இந்துக்களிடம் அதிகாரத்தைக் கொடுப்பதாகவே முடியும். இந்தியாவுக்கு மையப்படுத்தப்பட்ட வலுவான அரசாங்கமே தேவை என்று நினைத்தார். ஆனால், எண்ணிக்கை பலமே அரச அதிகாரத்தைத் தீர்மானிக்கும் தேர்தலமைப்பில் (விகிதாசார பிரதிநிதித்துவத்துக்கு மாற்றாக) அதே சாதி இந்துக்களே மிகப் பெரிய அதிகார மையமாக உருவாக வாய்ப்பு உண்டு என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். அதாவது, தாழ்த்தப்பட்ட சாதியினரை கலகம் செய்யச் சொல்லிவிட்டு, கம்பைப் பிற்படுத்தப்பட்ட சாதியிடம் கொடுத்துவிட்டார். கிராமப்புற அலகாக இருந்த வரையில் ஆதிக்க சாதிகளுக்குக் குறைவான அதிகாரமே இருந்தது. இன்றோ அவை பூதாகாரமாகப் பெருகிவிட்டிருக்கின்றன.
உண்மையில் பழங்கால கிராமங்களில் இருந்த மேல் சாதி ஆதிக்க மனோபாவத்தை நீக்க என்ன செய்திருக்கவேண்டும். உதாரணமாக, ஆலமரத்தடியில் நடக்கும் பஞ்சாயத்து சாதி வெறி மிகுந்ததாக இருக்கிறது என்றால் அதை மாற்ற என்ன செய்திருக்கவேண்டும். வாதிக்கும் பிரதிவாதிக்கும் நாற்காலியைக் கொண்டுவந்து போடு என்பதில் இருந்து ஆரம்பித்திருக்கலாம். குற்றம் நிரூபிக்கப்படும்வரை எல்லாரும் நிரபராதிகளே. அவர்களை நிறக வைத்துக் கேள்வி கேட்கக்கூடாது. ஒரு கிராமத்தில் எத்தனை சாதிகள் இருக்கின்றனவோ அத்தனை பிரதிநிதிகள் நீதி வழங்கும் குழுவில் இருக்கவேண்டும். என்ன தவறுக்கு என்ன தண்டனை என்பதை மக்கள் தீர்மானித்து வடிவமைத்துக் கொடுக்கவேண்டும். அதை இம்மி பிசகாமல் ஒப்பிக்கும் பொறுப்பு மட்டுமே நீதிபதிகளுக்கு உண்டு என நீதி அமைப்பில் ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டுவந்திருக்க வேண்டும்.
ஆனால், பஞ்சாயத்து ஆலமரத்தை அடியோடு பிடுங்கி எறிவதுதான் சாதி வெறியை ஒழிக்க ஒரே வழி என்று அம்பேத்கர் நினைத்தார். கிராமங்களை அரசியல் சாசனச் சட்டத்தில் செல்லாக்காசாக ஆக்கினார். ஆனால், அதற்கான விலையை நாம் இன்றும் கொடுத்துவருகிறோம். ஒருவேளை ஒவ்வொரு கிராம சபைக்கும் அதனதன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் அதிகாரம் தரப்பட்டிருந்தால், விளைநிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டிருக்காது. ஏரிகள் தூர்ந்துபோயிருக்காது. கிணறுகள் மண்ணிட்டு மூடப்பட்டிருக்காது. மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டிருக்காது. அனைத்து சாதியினரையும் உள்ளடக்கிய நிர்வாக முறை அமலாகியிருந்தால் மேற்கத்திய அடிமைகளிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டுப் புலம்பும் நிலை வந்திருக்காது.
இன்றைய நம் அரசின் ராணுவ பலமும் காவல்துறை பலமும் நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு பெருகிவிட்டிருக்கிறது. இன்று நம் ஊழல் மிகுந்த தலைவர்களைச் சரிக்கட்டுவதன் மூலம் தேச விரோத சக்திகள் ஒட்டுமொத்த தேசத்தையே சூறையாடிவிட முடிகிறது. அதிகாரக் குவிப்பு நமக்கு எந்த நன்மையையும் இதுவரை செய்திருக்கவில்லை. அல்லது அதன் மூலம் நமக்குக் கிடைத்த நன்மையைவிட தீமையே அதிகம். காந்தி இதையெல்லாம் முன்பே யூகித்துவிட்டிருந்தார். அதனால்தான் மையப்படுத்தப்பட்ட அரசை ஆதிமுதல் அந்தம்வரை எதிர்த்தார். கிராமங்களின் குடியரசு ஒன்றை முன்வைத்தார். அதை மறுதலித்ததன் மூலம் நேருவும் அம்பேத்கரும்தான் காந்தியைக் கொன்றிருக்கிறார்கள். கோட்சே அல்ல.
0