ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 3
பத்தாம் வகுப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டபிறகு, அடுத்து பிளஸ் 1 சேரவேண்டும்.
பார்வையற்றோருக்கு இரண்டே பள்ளிகள்தான் இருக்கின்றன சென்னையில். ஒன்று
நுங்கம்பாக்கத்தில் உள்ள லிட்டில் ஃபிளவர் கான்வென்ட். மற்றொன்று பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றோர் பள்ளி. இதில் லிட்டில் ஃபிளவர் கான்வென்ட்டில் ஆண்கள் 5 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க அனுமதியில்லை. அந்தப் பள்ளியின் சட்ட திட்டம் அப்படி.
பூவிருந்தவல்லிஅரசு பார்வையற்றோர் பள்ளியைப் பொருத்தவரை எனக்கு அங்கு தினமும் போய் வருவதில் நடைமுறை சிக்கல். நிச்சயம் தினமும் சாத்தியமில்லை.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், நான் தேர்ந்தெடுத்தது ராயப்பேட்டையில் இருக்கும் ஸ்ரீ
வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளிதான். போக்குவரத்து மற்றும் இதர
காரணங்களால் இதுவே சரிப்படும் என்று தோன்றியது. ஆனால் இது பார்வையற்றோர் சிறப்பு பள்ளி இல்லை. ரெகுலர் பள்ளிதான். இருந்தாலும் எந்த நம்பிக்கையில் இந்தப் பள்ளியை தேர்ந்தெடுத்தேன்? அவர்கள் எப்படி அட்மிஷன் கொடுத்தார்கள்?
10வது முடித்தவுடன் பிளஸ் 1 அட்மிஷனுக்காக நான் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளிக்குப் போனேன். பார்வையற்ற மாணவர்கள் யாரையும் அவர்கள் அதுவரை சேர்த்ததில்லை. காரணம், அதுக்கான வசதிகள் அங்கே இல்லே. இரண்டாவது காரணம், பள்ளியின் தேர்ச்சி விகிதத்தில் ஒரு சிறு கீறல்கூட விழுந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தனர்.
ஆனால், பத்தாவது வகுப்பில் நல்ல ரேங்க் எடுத்திருந்ததால் எனக்கு நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் அவர்களுக்குத் தயக்கம். எதற்கு அநாவசிய ரிஸ்க் என்று நினைத்திருக்கவேண்டும்.
பள்ளியின் முதல்வர் என்னிடம் பேசினார். ‘நல்ல ரேங்க் எடுத்திருக்கே. ஓகே. ஆனா, உங்களை மாதிரி மாணவர்களை எங்களுக்கு ஹேண்டில் பண்ண தெரியாது தம்பி. நீங்க வேற எங்காவது ட்ரை பண்ணுங்களேன்.’
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எப்படி பதிலளிப்பது அல்லது பதிலளிப்பதா வேண்டாமா என்பதும் புரியவில்லை.
அப்போதைக்கு வேறு எங்கும் சேரமுடியாது என்றும் தெரிந்தது. இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்று நம்பிக்கையுடன் வாய் திறந்தேன்.
‘சார்… எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நான் நல்லா படிச்சி, நல்ல ரேங்க் வருவேன்.’
‘படிக்கிறதைப் பத்தி பிரச்னை இல்லேப்பா. நீ நல்லா படிப்பே என்பது உன்னோட சர்டிஃபிகேட்ஸை பார்த்தாலே தெரியுது. அது இல்லே விஷயம். How will you manage?
மேனேஜ் என்று அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது பிறகே புரிந்தது. அதாவது பிளஸ் 1 வகுப்புகளில் சில 3வது மாடியில் நடக்கும், இன்னும் சில நான்காவது மாடியில். அங்கெல்லாம் எப்படிச் செல்வாய்?
நான் சிறிதும் தாமதிக்காமல் பட்டென்று பதிலளித்தேன். ‘ஸ்டெப்ஸ் ஏறிப் போகிறதுக்கு கால்தான் நல்ல ஸ்ட்ராங்கா இருக்கணும் சார். எனக்கு கண் தானே தெரியாது? என்னோட கால் ரெண்டும் நல்லா ஸ்ட்ராங்கா இருக்கு. அது போதும் சார் எனக்கு.’
ஒரு கணம் சிலிர்த்துப்போன முதல்வர் எழுந்து வந்து என் தோளைத் தட்டிக்கொடுத்தார். ‘ஓ.கே. இந்த ஸ்கூல்ல உன்னைச் சேர்த்துக்கறேன்.’
என்னைப் பொறுத்தவரை அவருடைய இந்த முடிவு எனக்கு மிகப் பெரிய திருப்புமுனை.
என்னை நம்பி அட்மிஷன் போட்ட அவர் பெயரைக் காப்பாற்றவேண்டுமே என்ற அக்கறையுடன் மிக நன்றாகப் படித்து அனைத்துத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன். பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் ரேங்க் வாங்கி பள்ளிக்குப் பெருமை சேர்த்தேன்.
மற்றவர்கள் நம்மீதும் நம் திறமைமீதும் கொண்டுள்ள நம்பிக்கையைவிட நாம் நம்மீது கொண்டுள்ள நம்பிக்கை மிக மிக முக்கியம். நமது திறமைகளைப் பற்றியோ தகுதிகளைப் பற்றியோ எந்தச் சூழ்நிலையிலும் நாம் அவநம்பிக்கை கொள்ளக்கூடாது.
உன்னையறிந்தால்…. நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்…. உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.