Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

புரட்சி என்பது என்ன?

$
0
0

revolution

புரட்சி / அத்தியாயம் 1

‘இது வரலாற்று நூல் அல்ல. சோஷலிசத்தின்மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளை விவரிப்பதே இதன் நோக்கம்… இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும் சரி, நம் கண் முன்னே இப்போது நடந்திருந்தாலும் சரி. கலகம் ஒன்று நடந்திருந்தால், அதில் சோஷலிசத்தின் சாயல் சிறிதளவு படிந்திருந்தால் அதை இந்தப் புத்தகத்தில் இடம்பெறச் செய்திருக்கிறேன்.’ ஸ்பெயினைச் சேர்ந்த சோஷலிஸ்டும் எழுத்தாளரும் அரசியல் விமரிசகருமான அல்வாரெஸ் (முழுப்பெயர் Julio Álvarez del Vayo) தனது The March of Socialism என்னும் புத்தகத்தின் முன்னுரையில்  இவ்வாறு குறிப்பிடுகிறார்.

பிரெஞ்சுப் புரட்சி, பாரிஸ் கம்யூன், ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை இந்தப் புத்தகம் உள்ளடக்கியுள்ளது. அல்வாரெஸ் இவற்றில் சிலவற்றை விரிவாகப் படித்து ஆராய்ந்திருந்தார்; சிலவற்றை நேரில் தரிசித்திருக்கிறார். லெனின், ரோசா லக்சம்பர்க் தொடங்கி தான் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்த அனைத்து முக்கிய கம்யூனிஸ்ட்,சோஷலிஸ்ட் தலைவர்களையும் நேரில் சந்தித்திருக்கிறார்.

அல்வாரெஸின் மேற்சொன்ன புத்தகம் ஸ்பானிஷ் மொழியில் எழதப்பட்டு அவர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு ஆங்கிலத்தில் வெளிவந்தது. சோஷலிசம் என்னும் பதத்தை முடிந்தவரை மிகவும் விரிவான பொருளில் அவர் இந்தப் புத்தகத்தில் பயன்படுத்தியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஸ்பார்டகஸ் தொடங்கி லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகர மாற்றங்கள் வரையிலான நிகழ்வுகள் இதில் அலசப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகத்தின்மூலம் அவர் வந்தடைந்த முடிவு இதுதான். ‘சமூக அக்கறையுடன் நிகழ்த்தப்பட்ட ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு புரட்சியும் உலகில் பிற இடங்களில் பிற காலகட்டங்களில் நிகழ்ந்த போராட்டங்களோடும் புரட்சிகளோடும் தொடர்பு கொண்டுள்ளது.’

0

இருந்தும், புரட்சி என்னும் வார்த்தையை வன்முறையோடு மட்டுமே இன்றும் பலர் தொடர்புபடுத்தி வருகின்றனர். ஒருவர் புரட்சியாளர் என்றால் அவர் வன்முறையாளராகவும் இருப்பார் என்பது இவர்கள் நம்பிக்கை. மேலும் அவர் மையநீரோட்டத்திடம் இருந்து விலகி, கானகங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் பிற ஆபத்தான இடங்களிலும் பதுங்கி இருந்து, எந்நேரமும் போர் திட்டங்கள் வகுத்துக்கொண்டு, எந்நேரமும் ஆயுதம் சுமந்தபடி, பயங்கரவாதம் தவிர்த்து வேறொன்றும் சிந்திக்காமல் வாழ்ந்து வருபவர் என்றும் பலர் கற்பனை செய்துகொள்கிறார்கள்.

இன்னும் சிலர், சமூகத் தளத்தில் ஏற்படும் சிறு மாற்றங்களைக்கூட புரட்சி என்று பெயரிட்டுச் சிலாகித்துக்கொள்கிறார்கள். செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களுக்குப்‘புரட்சித் தலைவர்’ என்றும் ‘புரட்சித் தலைவி’ என்றும் பெயர்கள் அளிக்கப்படுகின்றன. ஒடுக்கப்படும் மக்களின் குரலாகச் செயல்படும் அமைப்புகள் மட்டுமல்ல ஒடுக்கும் பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘புரட்சிகர’ இயக்கங்களும் அமைப்புகளும்கூட இங்கே உள்ளன.

குழப்பங்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை.

புரட்சியை இடதுசாரி அரசியலோடும் மார்க்சிய அகராதியின் அடிப்படையிலும் புரிந்து வைத்திருப்பவர்களிடையே கூட பல சமயங்களில் கருத்து வேறுபாடுகளும் மயக்கங்களும் ஏற்பட்டுவிடுகின்றன. லெனின் ஒரு புரட்சியாளர், ஆம். ஆனால், சே குவேராவை எப்படி மதிப்பிடுவது? சீனப் புரட்சியை ஏற்று அங்கீகரிக்கமுடிகிறது. ஆனால், க்யூபாவிலும் வெனிசூலாவிலும் ஏற்பட்ட மாற்றங்களை ‘புரட்சிகர மாற்றங்கள்’ என்று அழைக்கமுடியுமா? மார்க்சியம், கம்யூனிசம், சோஷலிசம் பற்றியெல்லாம் அதிகம் உரையாடாத, அதே சமயம் அடித்தட்டு மக்களுக்காகக் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பலவற்றை மேற்கொண்ட ஃபிடல் காஸ்ட்ரோவையும் ஹியூகோ சாவேஸையும் புரட்சியாளர்கள் என்று அழைக்கலாமா?அவ்வாறு அழைப்பதை மார்க்சியம் ஏற்கிறதா?

எனில், புரட்சி என்பது என்ன? புரட்சியாளர் என்று யாரை அழைக்கமுடியும்?

0

ஒரே செயலை ஓர் அரசாங்கம் செய்தால் ஒரு மாதிரியாகவும், ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுவினர் செய்தால் இன்னொரு மாதிரியாகவும் அணுகும் போக்கு உலகம் தழுவியது. இந்தியாவிலேயே காந்திய வழி சிறந்தது என்றும் பகத் சிங்கின் வழி தீங்கானது என்றும் சொல்லப்பட்டது; இப்போதும் சொல்லப்பட்டு வருகிறது. பொதுப் புத்தியில் ஆழமாகப் பதிந்துள்ள சில பிம்பங்கள்தான் இப்படிப்பட்ட புரிதல்களை ஏற்படுத்துகின்றன.

உண்மையில் புரட்சியாளர்கள் வன்முறை மீது நம்பிக்கை கொண்டவர்களா? ரத்த வெறி கொண்டவர்களா? உயிரின் மதிப்பை உணராதவர்களா? பகத் சிங் பதிலளிக்கிறார். ‘மனித உயிர்களை வார்த்தைகளால் வடிக்க முடியாத அளவுக்கு புனிதமானதாகக் கருதுபவர்கள் நாங்கள். அது மட்டுமல்ல, மனிதகுல விடுதலைக்காக வெகுவிரைவில் எங்கள் உயிர்களையே நாங்கள் அர்ப்பணிக்க இருக்கிறோம். மனச்சாட்சியின் உறுத்தல் கொஞ்சமும் இன்றி கொலை செய்வதற்கென்றே பயிற்றுவிக்கப்பட்ட ஏகாதிபத்திய ராணுவத்தின் கூலிப் படைகள் போன்றவர்கள் அல்ல நாங்கள். மனித உயிர்களை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம்.’

நாடாளுமன்ற வெடிகுண்டு வழக்கில் கைதான பகத் சிங், பி.கே. தத் இருவரும் அளித்த வாக்குமூலத்தில் இந்த முழக்கம் இடம்பெறுகிறது. இந்த வாக்குமூலம் 1929 ஜூன் 6 அன்று இந்த இருவர் சார்பாக அசாப் அலி என்பவரால் படிக்கப்பட்டது. (விடுதலைப் பாதையில் பகத்சிங், தொகுப்பு : சிவவர்மா, பாரதி புத்தகாலயம்).

ஏப்ரல் 8, 1929 அன்று நாடாளுமன்றத்தில் பகத் சிங்கும் பி.கே. தத்தும் இரு வெடிகுண்டுகளை வீசியபோது, பிரதான எதிரியான சர் ஜான் சைமன் அங்குதான் இருந்தார். அவர்மீதே அந்தக் குண்டுகளை அவர்கள் வீசியிருக்கலாம். செய்யவில்லை. மாறாக, அவர்கள் சரணடைந்தனர். ஏன்? ‘எங்களை அழிப்பதன் மூலம் இத்தேசத்தை அழிக்கமுடியாது. நாங்கள் செய்த செயலுக்குரிய தண்டனையை ஏற்றுக்கொள்ளவும், தனிநபர்களை அழிப்பதன்மூலம் கருத்துகளைக் கொல்லமுடியாது என்பதை ஏகாதிபத்திய சுரண்டல்காரர்கள் அறியச் செய்வதற்கும் நாங்களாகவே வலிய முன்வந்து கைதானோம். ஒரு தேசத்தின் முக்கியத்துவமற்ற இரண்டு நபர்களை அழிப்பதன்மூலம் அத்தேசத்தையே நசுக்கிட முடியாது. நாங்கள் வலியுறுத்திக் கூற விரும்பும் வரலாற்றுப் படிப்பினை இதுதான்.’

புரட்சி என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று கேட்கப்பட்டபோது பகத் சிங் அளித்த விடை இது.

‘புரட்சி என்பது ரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. புரட்சி என்பதன்மூலம், வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்தச் சமூக அமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.

‘சரியான நேரத்தில் காப்பாற்றவில்லையெனில், இந்த நாகரிகத்தின் முழுக் கட்டமைப்பும் நொறுங்கி விழுந்துவிடும். எனவே இந்த நாட்டில் அடிப்படையான மாற்றம் தேவைப்படுகிறது. இதனை உணர்ந்தவர்களின் கடமை, சமுதாயத்தை சோஷலிசத்தின் அடிப்படையில் புதிதாக மாற்றியமைக்கவேண்டியதே ஆகும்.

‘புரட்சி என்பது மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை. சுதந்தரம் என்பது அனைவரின் அழிக்க முடியாத பிறப்புரிமை. தொழிலாளர்களே சமுதாயத்தை உண்மையில் தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பவர்கள். மக்கள் அதிகாரமே தொழிலாளர்களின் இறுதி இலக்கு.

‘இக்கொள்கைகளுக்காகவும் இந்த நம்பிக்கைகளுக்காகவும் எங்களுக்கு வழங்கக்கூடிய தண்டனையின் மூலம் ஏற்படும் எத்தகைய துன்பத்தையும் நாங்கள் வரவேற்கவே செய்கிறோம். புரட்சியின் பலிபீடத்தில் எங்களது இளமையைக் காணிக்கையாக்குகிறோம். எங்களது மகத்தான லட்சியத்தோடு ஒப்பிடுகையில் நாங்கள் செய்யும் எந்த தியாகமும் பெரிதல்ல. நாங்கள் மனநிறைவுற்றுள்ளோம். புரட்சியின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.’

1931 மார்ச் 22 அன்று பகத்சிங் எழுதிய கடைசி கடிதத்தில் காணப்படும் வரிகள் கீழே.

‘வாழ வேண்டும் என்ற ஆசை இயற்கையானதே. அது என்னிடமும் உள்ளது. அதை நான் மறுக்க விரும்பவில்லை. ஆனால், அந்த ஆசை நிபந்தனைக்கு உட்பட்டது. ஒரு சிறைக் கைதியாகவோ நிபந்தனை வரம்புகளுக்கு உட்பட்டவனாகவோ வாழ எனக்கு விருப்பமில்லை… துணிச்சலோடும் புன்னகையோடும் நான் தூக்குமேடை ஏறினால், அது இந்தியத் தாய்மார்களின் உணர்வுகளைத் தூண்டும். தங்களது பிள்ளைகளும் பகத்சிங்கைப் போல் ஆக வேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள். இதன் மூலம் நாட்டின் விடுதலைக்காக தங்களது உயிர்களையும் தியாகம் செய்யச் சித்தமாயிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் பிறகு, புரட்சிப் பேரலையை எதிர்கொள்வதற்கு ஏகாதிபத்தியத்தால் முடியாமல் போகும்.’

0

மனித குல வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புரட்சிகர மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இப்போதும் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. பொருளாதாரம், சமூகம், அரசியல், சித்தாந்தம், கலை, இலக்கியம் என்று ஒவ்வொரு துறையிலும் இப்படிப்பட்ட அடிப்படையான மாற்றங்களைக் காணமுடியும். புரட்சிகர மாற்றங்கள் இல்லாமல் வளர்ச்சி என்பது சாத்தியமில்லை.

புரட்சி என்பது தற்செயலாகவோ தன்னிச்சையாகவே நடைபெறும் நிகழ்வல்ல. ஒரு சில தனி மனிதர்கள் மேற்கொள்ளும் நடடிவடிக்கையும் அல்ல. ஆயுதம் தரித்த ஒரு சிறு குழுவோ முற்போக்கான பெயர்களைக் கொண்ட ஓர் அரசியல் கட்சியோ கானகங்களில் மறைந்து வாழும் ஒரு இயக்கமோ வீறுகொண்டு எழுந்து மேற்கொள்ளும் ஆயுதப் போராட்டம் புரட்சி ஆகாது.

எது புரட்சி என்பதற்கு மார்க்சியம் சில தெளிவான வரையறைகளை வகுத்துள்ளது. இவற்றுக்குப் பின்னணியில் ஒரு தத்துவமும் தெளிவான அரசியல் பார்வையும் இருக்கிறது. ‘புரட்சிகள் கட்டளைப்படி நடப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட தருணத்தையொட்டி நடப்பதுமில்லை. அவை வரலாற்றுப் போக்கில் முதிர்ச்சியடைகின்றன. பல்வேறு உள்நாட்டு, அயல்நாட்டு காரணங்களைப் பொறுத்து உரிய நேரத்தில் வெடிக்கின்றன’ என்கிறார் லெனின்.

புரட்சி எப்போது ஏற்படுகிறது? லெனின் அளிக்கும் விளக்கம் இது. ‘இதுவரை வாழ்ந்தது போல் இனி மேற்கொண்டு வாழ முடியாது என்ற முடிவுக்கு கோடானுகோடி மக்கள் வரும்பொழுது புரட்சிகள் வருகின்றன.’

கம்யூனிஸ்டுகளின் புரட்சிகரத் தத்துவம் மார்க்சிய லெனினியம். கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரும் இந்தத் தத்துவத்தின் அடித்தளத்தை வடிவமைத்த ஆசான்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

மார்க்சியத்தைப் பொருத்தவரை புரட்சி பல வகைப்படும். சமூகப் புரட்சி, சோஷலிசப் புரட்சி, தேசிய விடுதலைப் புரட்சி, பூர்ஷ்வாப் புரட்சி, பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி மற்றும் மக்கள் ஜனநாயகப் புரட்சி. ஒவ்வொன்றுக்கும் தெளிவான வரையறை இருக்கிறது. ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு தத்துவம் இருக்கிறது.

0

The Marchகார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரும் எழுதத் தொடங்கியதற்கு முன்பே சோஷலிசம் பற்றிய உரையாடல்களும் விவாதங்களும் நிகழ்ந்திருக்கின்றன. தத்துவார்த்தமான உரையாடல்களும் விவாதங்களும் நடைபெறாமலேயேகூட சோஷலிசத்துக்கானப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனால்தான் அல்வாரெஸ் சோஷலிசம் என்னும் பதத்தை நெகிழ்வுத் தன்மையுடன் பயன்படுத்தி ஸ்பார்டகஸிடம் இருந்து தன் புத்தகத்தைத் தொடங்குகிறார்.

இந்தப் புத்தகமும்கூட ஸ்பார்டகஸிடம் இருந்தே தொடங்குகிறது.

சோஷலிசத்தைத் தத்துவார்த்த ரீதியில் செழுமைப்படுத்தியவர்கள் மட்டுமல்ல, அதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியவர்களும்கூட புரட்சியாளர்கள்தாம். அவர்களைத் தத்துவவாதிகள் என்று ஒருபோதும் அழைக்கமுடியாது என்றபோதும்.

சிலர் சிந்தனையாளர்களாக மட்டுமே அறியப்பட்டிருக்கிறார்கள். சிலர், செயற்பாட்டாளர்களாக மட்டும். வெகு சிலரே இந்த இரு தளங்களிலும் வலுவாகக் காலூன்றியிருக்கிறார்கள்.

0

ஆதாரம் :

1) The March of Socialism, Julio Álvarez del Vayo, Translated by Joseph M. Bernstein, Jonathan Cape.

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!