Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

மன்னித்துவிடு ஜே!

$
0
0

imagesஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 2

ஜே என்றதும் நமக்கு அவனுடைய அதிரடி வாசகங்கள்தான் நினைவுக்கு வரும். இவற்றைச் சுட்டிக்காட்டி அவன் வெறும் விளம்பரப் பிரியன் என்று அன்பு நண்பர்கள் அடிக்கடிச் சொல்வது வழக்கம். ஆனால், அவனுடைய செயல்களுக்கு அவன்மட்டுமேவா காரணம்?

நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மாமா வேலை பாக்கறவனுக்குத்தான் இங்க டைரக்ஷன் வாய்ப்புக் கிடைக்கும் என்று அவன் ஒரு பத்திரிகை பேட்டியில் சொன்னபோது, வண்டி பிடித்தெல்லாம் அடிக்கவந்தார்கள். அப்படியானால், கிராமத்துப் பெண் கதாபாத்திரத்துக்கு எதற்காக செவப்புப் பெண்களையே தேர்ந்தெடுக்கிறீர்கள்? என்ற எளிய கேள்விக்கு இன்றுவரை யாரிடமும் பதில் இல்லை.

க்ரியேட்டிவாக பங்களிக்காத ஒரு இயக்குநர் வெறும் மேஸ்திரியே என்ற வாசகம் பலவாறாகத் திரிக்கப்பட்டு இன்றும் ஜே வை அடையாளம் காட்டும் வாக்கியமாக விளங்கிவருகிறது. தமிழக இசையமைப்பாளர்களின் இசைபற்றிய சில சாதகமான அம்சங்களைச் சொல்லிவிட்டு, ‘ஆனால் அதில் மண் வாசனை இல்லை, ஒரு நாட்டுப்புறக் குரலைக்கூட அவர்கள் உருப்படியாகப் பயன்படுத்தவில்லை’ என்ற நியாயமான குற்றச்சாட்டை முன்வைத்தபோது அவன் கடும்விமர்சனத்துக்கு ஆளாக நேர்ந்தது. பிற பாடல்களின் மீதான விமர்சனத்தை வைத்தபோதோ இசையின் ‘நுட்பமான’ ஸ்வரக் குறிப்புகளை வரிசையாக அடுக்கிவைத்து, படு பயங்கரமான பண்டித மிரட்டல்கணைகள் பல திசைகளில் இருந்து பாய்ந்து வந்தன. லைஃப் ஆஃப் பை படத்தில் இடம்பெற்றுள்ள தாலாட்டுப் பாடலையும் தமிழ் படங்களில் இடம்பெற்ற தாலாட்டுப் பாடல்களையும் ஒருமுறை கேட்டுப் பாருங்கள் என்ற ஒரு பதிலைத்தான் இவர்களை நோக்கி நாம் சொல்ல முடியும். சுஜாதாவை இலக்கியவாதியாக நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு சுந்தர ராமசாமியின் அருமையைப் புரியவைக்க முடியாது. வைரமுத்துவை கவிப்பேரரசாக கருதிக்கொண்டிருப்பவர்களுக்கு பிரமிளின் பெருமையைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. தமிழ் இசையமைப்பாளர்களின் ஆராதகர்களுக்கு தரமான இசையின் மகத்துவத்தைச் சொல்லிப் புரியவைக்க முடியாது.

ஆனால், ஜே தன் வாழ்நாள் முழுவதும் இவற்றைப் புரியவைக்கும் பெரும் சிலுவையை தன் தோளில் வலிந்து சுமத்திக்கொண்டான். தான் நம்பிய மதிப்பீடுகளை வெளிப்படையாக முன்வைத்திருக்கிறான். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், அவன் தன்னுடைய துறையாக எதைத் தேர்ந்தெடுத்தானோ அதன்மீதான விமர்சனத்தைத் துணிச்சலாக முன்வப்பவனாக இருந்திருக்கிறான். ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்தில் அமர்ந்துகொண்டு, மற்ற எல்லாவற்றைப் பற்றி தர்மாவேசம் கொண்டு வாள் சுழற்றும் சாதுரியத்தை அவன் கடைசிவரை கற்றுக்கொள்ளவே இல்லை. அதுதான் அவன் பலம். அதுவே அவனுடைய பலவீனமாகவும் ஆகிவிட்டது. பலவீனம் என்று எதைச் சொல்கிறேன் என்றால் அவனிடமிருந்து நமக்குக் கிடைத்திருக்க வேண்டிய காத்திரமான படைப்புகள் கிடைக்காமல் போனதற்கு அது காரணமாகிவிட்டது என்ற அடிப்படையில்தான் அதைச் சொல்கிறேன்.

ஒருமுறை ஒரு மன நல காப்பக அமைப்பாளர்கள் நிதி திரட்டும் நோக்கில் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்கள் ஆத்மார்த்தமாகச் சேவையில் ஈடுபடுபவர்கள்தான். கூடுதல் நிதி ஆதாரம் இருந்தால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியுமே என்ற நோக்கில் திரையுலகத்தினரை அழைத்திருந்தார்கள். ஆனால், நம் திரையுலகத்தினர் அந்த விழாவில் நடத்திய கூத்து இருக்கிறதே… இழவு வீட்டுக்குப் போனாலும் க்ளிவேஜ் தெரிய, இடுப்பை ஆட்டி ஆட்டித்தான் அழுவார்கள் போலிருக்கிறது.

ஜேவையும் ஒரு நிகழ்ச்சி தயாரிக்கச் சொல்லியிருந்தார்கள். அவனும் மிகுந்த அக்கறையுடன் ‘தூப்’ படத்தைத் தழுவி ஒரு ஸ்கிட்ட் தயார் செய்திருந்தான். தூப் படம் கேள்விப்பட்டிருப்பீங்க இல்லையா… என்.எஃப்.டி.சி. தயாரிச்ச படம். கார்கில் போர்ல ஒரு இளம் ராணுவ வீரர் இறந்துபோய்விடுவார். அவருடைய அப்பா ஒரு கல்லூரியில் பேராசிரியரா இருப்பார். ஓம்புரிதான் அந்த ரோல்ல நடிச்சிருந்தார். ராணுவ வீரரோட அம்மாவா ரேவதி நடிச்சிருப்பாங்க. இறந்துபோன வீரரின் ஞாபகார்த்தமா ஒரு பெட்ரோல் பங்க் வெச்சுக்க அரசாங்கம் இலவச பெர்மிட் கொடுத்திருப்பாங்க. பல லட்சம் லஞ்சமாகப் புரளும் காண்ட்ராக்ட் அது.

ஓம்புரிக்கு முதல்ல அதுல விருப்பம் இருக்காது. ஆனால், அவரோட மகனோட நண்பரான இன்னொரு ராணுவ வீரர் வந்து உங்க பையனோட லட்சியம் அது. அதனால அதை ஏத்துக்கோங்க என்று சொல்வார். சரி தன் மகனோட ஆசை அதுங்கறதுன்னா அதை நிறைவேற்றியாகணும்னு முன்வருவார். ஆனால், அவர் மிகவும் நேர்மையானவர். ஒரு நயா பைசா கூட லஞ்சமாக கொடுக்க மாட்டேன் என்ற பிடிவாதம் கொண்டவர். லட்சங்கள் புரளும் காண்டிராக்ட். நயா பைசா கூட லஞ்சமே தரமாட்டேனு சொல்ற நாயகன். கதை முடிச்சு வலுவாக விழுந்துவிட்டதா?

நம்மோட அரசாங்க அதிகார வர்க்கம் எந்த அளவுக்கு ஊழல் மலிஞ்சதா இருக்குங்கறதை அதைவிட வலுவா சொன்ன படம் இதுவரைக்கும் வரலைன்னுதான் சொல்லணும். எந்தவொரு அதிகாரிகிட்ட போனாலும் காசு காசுன்னு அலைவானுங்க. ஒரு அதிகாரிகிட்ட ஓம்புரி கோபத்துல கத்துவாரு… என் மகன் தேசத்துக்காக உயிரையே கொடுத்திருக்கான். அவனோட ஆசைய நிறைவேத்தப்போய் காசு கேட்கறீங்களேன்னு சத்தம் போடுவார். அந்த அதிகாரி நாற்காலியில் சாவகாசமாகச் சாய்ந்தபடியே அலட்சியமாகக் கேட்பார், உன் மகன் தேசத்துக்காக உயிரைக் கொடுத்தான். எனக்காக என்ன கொடுத்தான்?

இந்தக் கேள்வி இருக்கிறதே… ஊழலை எதிர்த்து ஆயிரம் ஆக்‌ஷன் படங்கள் ஏற்படுத்தும் அதிர்ச்சியை இந்த ஒரு படம் ஏற்படுத்திவிடும். யதார்த்தம் என்பது ஏன் அவசியம். மிகை என்பது விஷயத்தை எப்படி மலினப்படுத்திவிடுகிறது என்பதற்கு இந்தக் காட்சி ஒரு நல்ல உதாரணம். இன்னொரு காட்சியில் காவல்துறை அதிகாரி நோ அப்ஜெக்‌ஷன் சான்றிதழ் தர மறுத்துவிடுவார். எல்லா ஏற்பாடுகளும் கச்சிதமா முடிஞ்சுருக்கு. ஒரு பைசா கூடக் கொடுக்காமலா உன் ஃபைல் இவ்வளவு வேகமா என் டேபிளுக்கு வந்திருக்கும். எனக்குத் தரவேண்டியதைக் கொடு. உனக்கு வேண்டியதை நான் தர்றேன் என்று பேரம் பேசுவார். ஓம்புரி ஒரு பைசா கூடக் கொடுக்காமல் உன்னிடம் இருந்து சான்றிதழ் வாங்குகிறேன் பார் என்று சவால் விடுவார். தினமும் காவல் நிலையத்துக்கு வந்து அதிகாரியின் கண்ணில் படும்படி உட்கார்ந்துகொள்வார். ஓம்புரியின் தொந்தரவு தாங்க முடியாமல் ஒருகட்டத்தில் அந்த காவல்துறை அதிகாரி, செத்துப்போனவனுக்கு நீதான் அப்பான்னு எப்படி நம்பறது என்று கேட்டு விரட்டிவிடுவார்.

அடுத்த காட்சியில் ஓம்புரி, மகனுடைய பிறப்புச் சான்றிதழ், மகன் நடைவண்டியில் இருக்கும் புகைப்படம், பையனுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கும்போது எடுத்த படம், பள்ளியில் அவன் முதல் மதிப்பெண் பெற்றபோது எடுத்தபடம், ராணுவ உடையில் அணிவகுப்பில் இருக்கும் படம், வீட்டில் தாயும் தந்தையும் மகனுடன் இருக்கும் படம் என வரிசையாக மேஜையில் எடுத்துப்போடுவார். கடைசியாக மகனுடைய இறந்த உடல் விமானத்தில் கொண்டுவரப்பட்ட போது எடுக்கப்பட்ட படம், மகனுடைய உடலுக்கு துண்டைத் தோளில் போர்த்தியபடி கொள்ளிவைக்கும் படம் என வரிசையாக மேஜையில் எடுத்துப்போட்டபடியே சொல்வார்: உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால் இவனுடைய அம்மாவை அழைத்து வந்து சொல்லச் சொல்கிறேன், நான் தான் இவனுடைய தந்தை என்று என்று சொல்வார். காவல்துறை அதிகாரி பேச்சுமூச்சற்று ஒடுங்கிநிற்பார்.

இந்தக் காட்சியில் ஓம்புரியின் குரலில் தென்படும் பாவமும் ஒரு பைசா லஞ்சம் கொடுக்கமாட்டேன் என்ற வைராக்கியமும் அவ்வளவு அழுத்தமாக வெளிப்பட்டிருக்கும். இந்தப் படத்தை நான் எத்தனையோ தடவை பார்த்திருக்கிறேன். அத்தனை தடவையும் இந்தக் காட்சியில் என்னை அறியாமல் அழுதுவிடுவேன். ஒரு நடிகர், தான் அழுது பார்வையாளர்களை அழ வைப்பதைத்தான் நமது திரைப்படங்களில் இதுவரை பார்த்திருக்கிறோம். அது மிக மிக மலினமான, கத்துக்குட்டித்தனமான யுக்தி. யார் எதிரில் வந்து ஓ வென்று அழுதாலும் நமக்கு பரிதாபம் தோன்றி கண் கலங்க ஆரம்பித்துவிடும். ஆனால், இந்தக் காட்சியில் ஓம்புரி அழமாட்டார். நம்மை அழவைப்பார். நடிப்பு என்றால் என்ன… திரைக்கதை என்றால் என்ன… வசனம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் ஒருவர் இந்தப் படத்தை ஒருதடவையாவது பார்க்கவேண்டும். இப்படி ஒரு படம் வந்தது பலருக்குத் தெரிந்திருக்காது. என்.எஃப்.டி.சி.யில் போய் கேட்டால்கூட படத்தின் பிரிண்ட் உங்களுக்குக் கிடைக்காது. தேசிய ஒளிபரப்பில் எப்போதாவது அனைவரும் தூங்கிய பிறகு ரகசியமாக ஒளிபரப்பியிருப்பார்கள். இதுதான் நம் திரையுலகின் நிலை.

ஜே இந்தக் கதையின் கருவை அப்படியே எடுத்துக்கொண்டு பேராசிரியர் கதாபாத்திரத்துக்கு பதிலாக ஒரு பெண்ணை பிரதான கதாபாத்திரமாக்கினான். இப்போது கதைக்குக் கூடுதல் கனம் கிடைத்துவிட்டது அல்லவா? பெண் என்றால் பாலியல்ரீதியான தாக்குதல்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டியிருக்குமே… அந்தவகையில் தூப் படத்தைவிட பல காட்சிகள் இதில் வலுவாக வந்திருந்தன. மன நல விடுதியினருக்கான நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட கதை என்பதால் ஒரு நல்ல மன நல விடுதியை உருவாக்குவதை நாயகியின் லட்சியமாகக் கொண்டுவந்திருந்தான். ஆனால், அந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் திரையுலகத்தினருடைய ஆட்டம் பாட்டமும், அவர்கள் தயாரித்திருந்த ஸ்கிட்ட்களும் அந்த சேவை மையத்தின் செயல்பாடுகளுக்கு முற்றிலும் நேர் எதிராக இருந்ததோடு சேவையை இழிவுபடுத்துவதாகவும்கூட இருந்தன. அந்த சேவை மையத்தினரோ மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு கவர்ச்சி நடிகை தன்னுடைய ஜாக்கெட்டை மேடையிலேயே ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை சேவை மையத்துக்குத் தரப்போவதாகக் கூவினார். கூட்டம் அதைக் கேட்டு ஒரேயடியாக ஆர்ப்பரித்தது. ஏலத்தொகை சரமாரியாக ஏறியது. இதில் ஒரு கொடுமை என்னவென்றால், அடுத்ததாக ஜே.யின் நிகழ்ச்சி. எனவே, அவன் மேடையில் ஓரத்தில் தன் குழுவினருடன் நின்றுகொண்டிருந்தான். ஏலத்தொகை எக்கச்சக்கமாக குவிந்ததும் நடிகை, ”இவ்வளவுபணம் வரும்னு தெரிஞ்சிருந்தா என் உள்ளாடையைக்கூட ஏலம் விட்டிருக்கலாம் போல இருக்கே’ என்று சொன்னாள். ஜேக்கு கோபம் பொத்துக்கொண்டுவந்தது. பாய்ந்து சென்று அவளை ஓங்கி அறைந்துவிட்டான். அவளுடைய தவறு மறக்கப்பட்டுவிட்டது. ஜே-யின் ஆவேசம் பெரிய பிரச்னைக்குரியதாக ஆக்கப்பட்டுவிட்டது. திரையுலகத்தினர் திமு திமுவென மேடையேறி ஜேயைப் புரட்டி எடுக்க ஆரம்பித்துவிட்டனர். காவலர்கள் வந்து சமாதானப்படுத்த வேண்டி வந்தது.

திரையுலகத்தினரோ ஜே மன்னிப்புக் கேட்டால்தான் இந்த அரங்கில் இருந்து உயிருடன் போக முடியும் என்று கூக்குரலிட்டனர். ஜே இன்னும் கொஞ்ச நேரம் பேசாமல் இருந்திருந்தால் ஓரளவுக்கு பிரச்னையை சரிசெய்திருக்கலாம். ஆனால், ஏற்கெனவே ரத்தம் வழியும் முகத்துடன் இருந்த ஜே, மைக்கை வாங்கி, நான் சொன்னது தவறுதான்… உடம்பை விற்றுக் கிடைச்ச காசைக் கொடுக்கக் கூச்சமாக இருந்ததால்தான் இந்த நடிகை தன் ஆடையை விற்று நன்கொடை தர முன்வந்திருக்கிறார். அவருடைய நல்லெண்ணத்தையும் தர்ம சங்கடத்தையும் புரிந்துகொள்ளாதது என் தவறுதான் என்று சொல்லிவிட்டான்.

திரையுலகம் இதைக் கேட்டதும் கொலைவெறியுடன் ஜே மீது பாய்ந்தது. நல்லவேளையாக காவலர்கள் சட்டென்று ஒரு வளையம் போல் அமைத்து அவனை வெளியே கொண்டுசென்று ஜீப்பில் ஏற்றி நேராக காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள். இல்லையென்றால் அன்று ஜேயை அவர்கள் கொன்றே போட்டிருப்பார்கள். பிரபல பத்திரிகைகளில் ஜே நடிகையை அடித்தது மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டிருந்தது. பிற விஷயங்கள் சொல்லிவைத்தாற்போல் அனைத்து பத்திரிகைகளாலும் மறைக்கப்பட்டுவிட்டன.

ஜே அடிப்படையில் நுண்ணுணர்வு உடையவன். ஒரு முழுமை விரும்பி. அவனுக்கு சூழலுடன் தன்னைப் பொருத்திக் கொள்வதில் நிறைய சிக்கல்கள் இருந்தன.

எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டுபோக அவனுக்கு முடிந்திருக்கவில்லை. எனவே போதையை நாடினான். அதை அவன் செய்திருக்கக்கூடாது என்று சகல சீரழிவுகளையும் சகித்துக்கொண்டும் பல நேரங்களில் சீரழிவுக்குக் காரணமாகவும் இருந்துகொண்டிருக்கும் நாம் நியாயஸ்தனின் குரலில் சொல்கிறோம். அவன் குடியில் வீழ்ந்ததற்கு நாமும்தான் காரணம் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்பது நல்லது. அவனுடைய கலை திறமையை மேம்படுத்திக்கொள்ளவும் தீவிரமாகத் தொடர்ந்து ஒரு விஷயத்தில் ஈடுபடவும் முடியாதபடி அது அவனை விழவைத்துவிட்டது. அவனுடைய காலடி நிலத்தைப் பள்ளமாக்கிவிட்டு நாம் சொல்கிறோம் பார்த்து நடந்திருக்கலாமே என்று. என்ன செய்ய? ஜேக்கு நமக்கு மத்தியில் அல்லவா வாழ வேண்டிவந்துவிட்டது. வீ டோண்ட் டிஸர்வ் யூ ஜே. எங்களால் உன்னைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. உன்னைப் பாதுகாக்கவும் முடியவில்லை மன்னித்துவிடு ஜே.

0

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!