வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சவால்களை, பிரச்னைகளை வெற்றிகொள்ள பலப்பல முறைகளைக் கையாளுகிறோம். நண்பர்களின் யோசனை, சுய முன்னேற்ற நூல்கள், வேண்டுதல்கள், உபதேசிகளின் உரைகள் என்று பட்டியல் நீள்கிறது. இவை எல்லாமே, நம்முள் ஒரு வேகத்தை, கிளர்ச்சியை, மாற்றங்களுக்கான தூண்டுதல் உணர்வை எழச் செய்கின்றன.
தனிப்பட்ட மனிதர்கள் மட்டுமின்றி, எல்லாவகையான வர்த்தக மற்றும் வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியனவும் பல காரணங்களுக்காக, மேற்படி முறைகளில் சிலவற்றைக் கையாளுகின்றன. பணியாளர்களின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு என்பதிலிருந்து, பழகு திறன் வரை அனைத்தையும் உயர்த்த முயற்சிகள் செய்கின்றன. பேச்சாற்றலில் சிறந்த வல்லுநர்கள், பிரபலமான உபதேசிகள் ஆகியோரை அதிகம் பணம் செலவழித்து, பணியாளர்கள் மத்தியில் பேச வைக்கின்றன.
இவை தவிர, சாதாரண பொதுமக்களில், மாணவர்களில் இருந்து பெரியவர்கள் வரை, ஒழுங்காகப் படிப்பது எப்படி, நினைவுத் திறன், தொடர்புத் திறன், உறவுத் திறன், பேச்சுத்திறன், மொழித் திறன் ஆகியவற்றை வளர்ப்பது எப்படி போன்ற பல எப்படிகளுக்கு விடை கூற, அந்தந்த விஷயத்தில் பயிற்சி பெற்ற பலர் காத்திருக்கின்றனர்.
பிரச்னைகளுக்கான விடை தேடும் முயற்சி, அவற்றைத் தீர்ப்பது எப்படி என்பதற்கான விடைகள் கூறும் முயற்சி ஆகியன காலங்காலமாக நடந்து வருகின்றன. சமீப காலத்தில் இது அதிகமாகி உள்ளது.
உதாரணமாக 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம். தொழில் முறையில், சுய முன்னேற்றம் காண உதவுவது ஒரு துறையாகவே வளர்ந்துவிட்டது. இது தொடர்பான புத்தகங்கள், கருத்தரங்கங்கள், பயிலரங்கங்கள், ஒலி நாடாக்கள், வீடியோ பதிவு தட்டுக்கள், போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் வர்த்தகத்தின் மதிப்பு 2000வது ஆண்டின் தொடக்கத்தில் 2.48 பில்லியன் டாலர்களாக இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2006ம் ஆண்டின் போது 9 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. 2010ம் ஆண்டில் 11.47 பில்லியன் டாலர்களாக ஆனது. முந்தைய ஐந்தாண்டு வளர்ச்சியை விடக் குறைந்ததற்குக் காரணம், 2008-10 ஆண்டு காலக் கட்டத்தில் அமெரிக்கா பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. இந்தத் துறையின் வளர்ச்சியைக் கணக்கிட்டால், ஆண்டுக்கு 5.5.% அதிகரித்து வருகிறது என்று கூற முடியும். இந்தக் கணக்கு அமெரிக்காவுக்கு மட்டும்தான். இதே துறையில் நம்பிக்கையும், ஆர்வமும் உள்ள பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், சில ஆசிய நாடுகள் ஆகியவற்றின் செலவினங்கள் மற்றும் சந்தை மதிப்பு கணக்கிடப்படவில்லை.
இதனால் புரியவரும் விஷயம், இந்த நூற்றாண்டு வாழ்க்கை முறையில் மக்கள் இந்தத் துறையில் அதிகமாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதுதான். அதே சமயம் ஒரே வியாதிக்கு பல்வேறு வைத்திய முறைகளும், எண்ணற்ற மருத்துவர்களும் உருவானால், அதற்கு என்ன காரணம்? வியாதியைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதன் தீவிரமும், வேகமும், பரவலும் அதிகமாகி இருக்கின்றன. பல்வேறு முறைகளில் இந்த வியாதியை அணுகினால்தான், இதை வெற்றிகொள்ள முடியும் என்ற தெளிவு ஏற்பட்டு இருக்கிறது என்று கூறலாம் அல்லவா? இதுபோலத்தான் சுய முன்னேற்றம் பிரச்னைகளை சமாளிக்கவும் பல்வேறு வழிகள் உருவாகியுள்ளன.
இதில் முக்கியமான முறை, பேச்சு வழியில் போதனைகள் அல்லது யோசனைகள் ஆகியன முதல் இடம் பிடித்துள்ளன. சமீபத்தில் ஒரு தொழிலகத்தில் பிரபலமான ஆன்மிக குருவும், நல்வாழ்க்கைக்கான வழிகாட்டி என்றும் அறியப்படுகிற ஸ்ரீரவிசங்கர் சொற்பொழிவாற்றினார். அப்போது யாருமே எதிர்பாராத அளவில் 5000 படித்த இளைய தலைமுறையினர் வந்திருந்து பேச்சைக் கேட்டனர்.
உத்வேகம் அளிக்கும் உரையை யார் மூலமாகக் கேட்டாலும், அது தொடர்புடைய செய்கையை உடனடியாகச் செய்தால் பலன் தரலாம். மகாபாரதத்தில் கூட இதுதான் நடந்தது. அர்ச்சுனனுக்கு பகவான் கிருஷ்ணர் கீதோபதேசம் செய்து முடித்தவுடனே அல்லது உணர்த்திய உடனே அர்ச்சுனன் போரில் ஈடுபட்டான். ஒருவேளை இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் நிகழ்ந்திருந்தால், அர்ச்சுனன் போரில் கலந்துகொண்டு வெற்றி கண்டிருப்பார் என்று கூறமுடியாது. ஏனெனில் மற்றவர்மூலம் கேட்கும் பேச்சுக்கு, குறிப்பிட்ட காலம்தான் தூண்டுதல் அல்லது உந்துதல் வலிமை இருக்கும். செவிவழிச் சந்தை முறையைப் பயன்படுத்தும் பல நிறுவனங்கள் பல்வேறு கூட்டங்களை நடத்துகிறார்கள். ஆனால், அந்த உரைகளை கேட்கும்வரை இருக்கும் மனோவேகம், உற்சாகம், உத்வேகம், அரங்கைவிட்டு வெளியே வந்தவுடன் அதே மட்டத்தில் உள்ளதா என்று யோசித்துப் பாருங்கள்.
பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நுகர்வோர் பொருள்களை சந்தைப்படுத்த, நுகர்வோரை வியாபாரிகளாக மாற்றும் முறையைக் கையாள்கிறார்கள். இதற்கு மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் என்று கூறுகிறார்கள். இதன் முக்கிய வியாபார நுணுக்கமே, பேச்சுதான். பல்வேறு நபர்களை ஓரிடத்தில் கூட்டி, யாராவது ஒருவர், விற்பனை செய்யவேண்டிய பொருளைப் பற்றியும், அதை விற்பதால் கிடைக்கப் போகும் லாபத்தைப் பற்றியும், விவரமாகவும் அலங்கார வார்த்தைகளிலும் விவரிப்பார். அந்தப் பொருள் அல்லது நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி ஆனதன் மூலம் தான் பெற்ற லாபங்களை விளக்கிக் கூறுவார். அதுபோல் பார்வையாளர்களையும் சேர்ந்து லாபம் காண அழைப்பார். இதைக் கேட்பவர்களில் பலர், இந்த உத்வேக உரையில் மயங்கி, பொருளை வாங்குவதோ, பிரதிநிதியாவதோ நடக்கிறது.
ஆனால் அந்த அரங்கை விட்டு வெளியே வரும்போதுதான், தானும் அப்பொருள்களை விற்கத் தொடங்கும்போதுதான் சந்தேகமே வருகிறது. பொருள்களின் தரம், பயன்பாடு ஆகியன பற்றி சொல்லப்பட்டதற்கும், உண்மை நிலைக்கும், எந்தத் தொடர்பும் இல்லாததை உணர்ந்து ஏமாந்து போனவர்கள், பிரச்னைகளில் மாட்டிக்கொண்டவர்கள் ஏராளம். சில வருடங்களுக்கு முன்னால், ஜப்பான் லைஃப்-ன் காந்தப் படுக்கை, வீட் எண்ட்-ன் காந்தப் படுக்கை, கோனி பயோ நிறுவனப் பொருள்கள் போன்றவற்றை வாங்கி ஏமாந்தவர்கள் நிறைய பேர்கள். இவற்றை வாங்கியவர்களும், வாங்கச் சொன்னவர்களும் ‘உத்வேக உரைகளுக்கு’ பலியானவர்கள்தாம்.
இது போல பல்வேறு விஷயங்களுக்கு உத்வேக உரைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தொடர் பலன்களைத் தராமல், நிரந்தர மாற்றங்களை உருவாக்க முடியாமல் இருப்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன. அறிவுரைகள், வழிமுறைகள், உத்வேக மற்றும் கிளர்ந்தெழச் செய்யும் உரைகள் ஆகியவை நம்மை வந்து சேரும்போது, அதை எடுத்துக்கொள்ளும் விதம் நபருக்கு நபர் மாறுபடுகிறது. மழை நீர் எந்த நிறமுள்ள மண்மீது விழுகிறதோ, அதே நிறத்தைத் தானும் பெறுகிறது. அதுபோலத்தான், எந்த வகையான உரையாக இருந்தாலும், படிக்கும் நூல்களாக இருந்தாலும், அவை அந்தந்த நபர்களின் மனநிலை, அனுபவம், அறிவு, புரியும் ஆற்றல் போன்றவற்றைப் பொறுத்தே அமையும். மேற்படி உரைகளும், எழுத்துகளும், வாழ்க்கையில் வெற்றி பெற உதவ வேண்டுமானால், இவற்றை வரவேற்பதற்கு நமது மனத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பயிரிடும் முன்னால், மண்ணைப் பதப்படுத்துவதுபோல மனத்தையும் பதமான நிலையில் வைத்திருக்க வேண்டும். பதமான மண்ணுக்கு வெளியிலிருந்து சத்தை தன்னுள் இழுத்துக்கொள்ளும் தன்மை இருக்கும். அது மட்டுமின்றி தன்னுள் இருக்கும் சத்தையும் தொடர்ந்து வளப்படுத்தி மேலும் வளர்க்கவும் செய்யும். அதுபோல மனத்தையும் நேர்மறை சிந்தனைகளால் பதப்படுத்த வேண்டும். இதற்கு வழிமுறைகள் உள்ளன. ஆனால் இந்த வகையான சிந்தனை தொடர்ந்து இருக்கவேண்டுமானால், மனத்தைத் தொடர்ந்து அதற்கான நிலையில் வைத்திருக்க வேண்டும். இதற்கு தன்னோடு பேசுதல் மிக முக்கியம்.
0