நாம் அனைவரும் தினமும் பலமுறை, எண்ணற்ற பல விஷயங்களுக்காக, நமக்குள் பேசிக்கொண்டே இருக்கிறோம்.
நண்பர்கள் யாராவது அருகில் வந்து, ‘என்னய்யா, அப்போதிலிருந்து கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்…. கண்டுக்கவே இல்லியே?…’ என்றோ, ‘என்னப்பா, எதிரே வந்தாக்கூட கண் தெரியாத மாதிரி போற. என் மேல ஏதாவது வருத்தமா?’ போன்ற கேள்விகளுக்கு, ‘ அடடா அப்படியெல்லாம இல்லப்பா. நான் கவனிக்கலே, ஏதோ நெனச்சிக்கிட்டிருந்தேன்… அதான்…’ என்று சங்கடமாக பதில் சொல்வோம்.
இந்த அனுபவங்களுக்கு ஆளாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. நாம், நமக்குள் ஆழ்ந்து, ஏதோ ஒரு காரியத்தைப் பற்றியோ, முக்கிய விஷயங்களையோ, சிந்தித்துக் கொண்டிருப்போம். அதாவது நமக்குள்ளே பேசிக்கொண்டு இருந்திருப்போம். இதற்குக் காரணம், பிரச்னைகளோ, கனவுகளாகவோ இருக்கலாம். சில சமயங்களில், தெருக்களில், சிலர் தமக்குள்ளே பேசிக்கொண்டு (வெளியில் கேட்கும் அளவுக்கு) போவதை பார்த்திருப்போம். அந்த அளவுக்கு சுற்றுப்புறத்தையே மறந்து குறிப்பிட்ட சூழலில் அல்லது பிரச்னையில் அவர் மூழ்கியிருக்கிறார் என்று சொல்லலாம். இவ்வாறு நமக்குள் நடக்கும் உரையாடல்கள்தான், நம்மிடம் நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களை உருவாக்குகின்றன.
‘என்னால், இது முடியாது..’ ‘எங்கே முடியப் போகிறது’, ‘முடிந்தால் நன்றாக இருக்கும்’, போன்ற எண்ணங்களின் நேரடி அர்த்தம், ‘என்னால் முடியாது’ என்பதுதான். இதுபோல ‘முடியாதுகள்’ ‘காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பது முதல் திட்டமிட்டபடி நடப்பது பற்றிய சந்தேகம்’ வரை பல விதங்களில் இருக்கும். இவைதவிர, நேரடியாக முடியாது என்பது ஒரு வகையான எதிர்மறைப் பதிவு.
இதைத் தவிர, நிறைவேறாத எதிர்பார்ப்புகள் மற்றும் சந்தேகங்கள் ஆகியவையும் இந்த வகையைச் சார்ந்ததுதான்.
‘நான் மட்டும் அப்படிச் செய்திருந்தால்’ ‘எனக்கு மட்டும் அதிர்ஷ்டம் இருந்திருந்தால்’… ‘வாய்ப்பு கிடைத்திருந்தால்’… ‘பணக்காரனாகப் பிறந்திருந்தால்…’ – இன்னும் இதுபோன்ற கணக்கற்ற ‘இருந்தால்கள்’ எல்லாமே நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் வேகத் தடைகள்.
‘எனக்கு நேரம் சரியில்லை’… ‘அதிர்ஷ்டம் இல்லை’… ‘என்னால் அந்த மாதிரி நடந்துக்க முடியாது’… போன்ற சுய தடைகள் மனத்தில் எதிர்மறை எண்ணத்தை உருவாக்கும் வழிகள். இதன் மூலம் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் செய்தி, ‘எதற்கும் முதலில் தயங்க வேண்டும்… சந்தேகப்பட வேண்டும்…! இதன் மூலம் நமக்குள் உள்ள திறமைகளைக்கூட நாம் வெளியே வர அனுமதிப்பதில்லை. புதிய திறமைகளைப்பற்றி நினைத்துப் பழக மறுப்பது போன்றவையும் இதனால் இயல்பாக நிகழும்.
அதே சமயம் வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொண்டு, ‘வெற்றி பெற்றால் நல்ல வாழ்க்கை, இல்லாவிட்டால் பார்த்துக்கொள்ளலாம்’ என்கிற ரீதியிலாவது முயற்சிப்பவர்கள், நேர்மறை எண்ணங்களை மனத்தில் புகுத்தத் தயாராக இருக்கிறார்கள் என்று அர்த்தம். இதற்கு மிகவும் படித்திருக்கவோ, இயல்பிலேயே பல திறமைகளை வளர்த்தவர்களாகவோ இருக்க வேண்டிய அவசியமே இல்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்து, அங்கேயும் நிலைக்க முடியாமல், பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்கள் ஏராளமான பேர்கள் இருக்கின்றனர். இவர்களில் வாழ்க்கையை சவாலாக எடுத்துக்கொண்டவர்கள் வெற்றியே பெறுகிறார்கள். தொடர்ந்து பிரச்னைகள் வந்தாலும், நேர்மறை எண்ணங்கள் மூலம் எதிர்கொண்டு, அதன் பாதிப்பிலிருந்து வெளியே வருகிறார்கள். முயற்சியைத் தொடர்கிறார்கள். அதனால் வெற்றி பெறுகிறார்கள்.
சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் அப்படிப்பட்ட பெண்மணியின் வாழ்க்கைச் சித்திரம் வெளியாகியிருந்தது. காதல் திருமணம் செய்து கொண்ட நிர்மலா என்ற அந்தப் பெண்ணுக்கு, அடுத்த வருடத்திலேயே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தன்னை மணந்து கொண்டவன், ஏற்கெனவே மணமாகி இரு குழந்தைகளுக்கும் தகப்பன் என்பதுதான் அது. அதற்குள் ஒரு பெண் குழந்தையும் பிறந்து, வறுமையைப் பங்கு போட்டுக்கொள்ள ஆரம்பித்தது. இதன்கூடவே, தெரிய வந்த உண்மையை வைத்து தினமும் சண்டை, பிரச்னை. நிர்மலாவுக்கு இவை நடந்தபோது வயது 20 மட்டுமே. ஏற்கெனவே வறுமை பழக்கமாகிவிட்டிருந்தாலும், குழந்தையோடு சண்டை, தகராறு என்பது தாங்க முடியாமல் இருந்ததால், அம்மாவின் வீட்டுக்கே வந்துவிட்டார். அங்கேயும் மனமுவந்த வரவேற்பில்லை என்பது வேறு விஷயம். சிறு வயதிலேயே மூன்று சக்கர வண்டியை ஓட்டப் பழகியிருந்த நிர்மலாவுக்கு ஆட்டோ ஓட்டிப் பிழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் எழுந்தது.
ஆனால் அவரது குடும்பத்தில், தமக்கையைத் தவிர அனைவரும் நிர்மலாவின் இந்த முடிவை எதிர்த்தனர். என்றாலும், வாழ்வதற்கு ஏதாவது செய்துதானே ஆகவேண்டும். குழந்தையை நல்ல விதத்தில் வளர்க்க வேண்டும் என்கிற அவரது ஆழ்ந்த விருப்பம், மனத்தில் நம்பிக்கையை, உறுதிப்பாட்டை உருவாக்கியது. ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்ட ஆரம்பித்தார். வீட்டில், வெளியில் பல்வேறு விதமான பேச்சுக்கள் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் நிர்மலா உழைக்க ஆரம்பித்தார். பல நாட்கள் அம்மா வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு ஆட்டோவில் தங்கிய நாட்களும் இருந்தன. ஆனால் மற்றவர்களை நிலைகுலையச் செய்யும் சம்பவங்களும், பேச்சுக்களும், நிர்மலாவை உறுதிப்படுத்தின. இந்த உறுதிப்பாடு நிலைத்ததால், அவரை மற்றவர்களும், வெளியுலகிலும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். இந்த விதத்திலேயே தன் உழைப்பையும், மன உறுதியையும் நம்பி தொடர்ந்து செயல்பட்டதால், அவர் வெற்றி பெற்றார். தனது பெண்ணை ஆங்கில வழிக் கல்வி பயிலும் தரமான பள்ளியில் படிக்க வைத்து வருகிறார்.
நிர்மலாவின் உதாரணம், மிகச் சாதாரணமான பின்னணியைக் கொண்ட, நேர்மறை எண்ணங்களால், அது குறித்த தொடர்ந்த உள் உரையாடல்களால் வெற்றி பெற்ற பெண்மணியைப் பற்றியது. இது போன்ற நமக்குத் தெரிந்தவர்களும் இருப்பார்கள். ‘ஏதோ அவனால் முடிந்தது, ஆயிரத்தில் ஒரு உதாரணம், இதையே எல்லோரும் செய்தால் வெற்றி பெற முடியுமா?’ என்று நினைத்தால், தோல்விக்காக உறுதியான களம் அமைத்துக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
எதிர்மறை எண்ணங்களை பலர் ‘சமாதானமாக’ வெளிப்படுத்துவார்கள். ‘நமக்கேன் வம்பு’… அவனவன் விதி… ‘எதுக்கு ரிஸ்க் எடுக்கனும்’… ‘இப்படித்தான் வாழ்க்கைன்னு ஆயிடுச்சி’… உள்ளதும் போச்சுன்னா என்ன செய்யறது…’ ‘நம்ப ஜாதகம் அப்படி’… இவற்றுடன் கூட அப்பாவியான முக பாவனை, பயந்த முக பாவனை, தயக்கமான முக பாவங்கள், நடத்தைகள், ‘ரெடிமேட் சிரிப்பு’, எதற்கும் முதலில் ‘ஸாரி’ சொல்லும் மனோபாவம்…, நன்றாக அடியோ, பேச்சோ வாங்கிவிட்டு, அதுவும் அதற்கு ஏற்றார்போல பெரிய தப்பு ஏதும் செய்யாமலே, மேற்படி விஷயங்களை அனுபவித்துவிட்டு, என்ன வருத்தமா? வலிக்குதா என்று கேட்டால் காமெடி நடிகர் வடிவேலு பாணியில் ‘லைட்டா வலிக்குது’ போன்றவை எதிர்மறை மனப்பான்மையின் சமாதானமான அல்லது சாத்விகமான வெளிப்பாடுகள்.
இவற்றை மாற்ற வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற, நியாயமான முறையில் போராடவும், நமது திறமைகள் அனைத்தையும் சோதித்துப் பார்க்கவும் தயாராக இருந்தாலே எதிர்மறை உரையாடல்கள் வலுவிழந்து போகும். அந்த இடத்தில் நேர்மறை உரையாடல்கள் நிகழ ஆரம்பிக்கும். இவை தாம் எண்ணங்களாக, நம்பிக்கைகளாக வெளிவந்து நம்மைக் காப்பாற்றும். முன்னேற்றும்.
0