Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

வேதங்களில் சாதி

$
0
0

vedaபறையர்கள் / அத்தியாயம் 4

தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் சாதிகள் மிகவும் வலிமையுடன் இருப்பதற்கு அடிப்படையாக அமைந்தவை வடநாட்டில் ஏற்பட்ட தொடர்ந்த படையெடுப்புகள்தாம். வடமேற்கு எல்லைப்புற மாநிலங்களின் அதாவது சிந்து, பஞ்சாப் பகுதிகளின் வழியாக நடந்த படையெடுப்புகளால் இந்தியாவில் நிலவி வந்த வர்ணப்பாகுபாடு சிதைந்தது. பார்ப்பனர்களின் வேள்விப் பண்பாடும் சமூகத் தலைமையும் கேள்விக்குட்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படைவீரர்கள் இந்தியப் பெண்களோடு கொண்ட மண உறவுகளும் புதிய சமூகம் உருவாகக் காரணங்களாயின.

வெளிநாட்டுப் படையெடுப்புகளால் ஏற்பட்ட சமூகமாற்றம் ஒரு புறமும் கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் இந்தியாவில் தோன்றிய அறிவுப்புரட்சி மறுபுறமுகமாகப் பார்ப்பனிய மேலாண்மையை அலைக்கழித்தன. இந்த அறிவுப் புரட்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் கவுதம புத்தர். இவர் தோற்றுவித்த பௌத்த சமயம், பார்ப்பனியத்தின் அனைத்து முனைகளையும் மழுங்கடித்தது. பார்ப்பனர்களின் அறிவுத்துறை வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்ததும் வேதக் கல்வியின் மையமாக விளங்கியதுமான தட்சசீலம் வெளிநாட்டுப் படையெடுப்புகளாலும் பண்பாட்டுத் தாக்குதல்களாலும் சிதைவடைந்தது.

இதனால் பார்ப்பனர்கள் தங்களின் பாதுகாப்புக்காக நல்லதொரு புகலிடத்தைத் தேட வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாயினர். இவற்றைத் தொடர்ந்து இஸ்லாமியரின் படையெடுப்புகள் பார்ப்பனியத்தின் அடிப்படைகளைத் தகர்க்கத் தொடங்கின. ஆசீவகம், உலகாயதம், பௌத்தம் ஆகிய மனித நேயக் கோட்பாடுகளை வன்முறையில் சிதைத்தொழித்த பார்ப்பனியத்தை இஸ்லாமும் வன்முறையில் சந்தித்தது. அத்த்துடன் பார்ப்பனியம் கையாண்ட வஞ்சகத் தன்மைக்கு மாறாக இஸ்லாம் பின்பற்றிய சகோதரத்தன்மை – அனைவரையும் சமமாக நடத்திய சமத்துவம் – மக்களிடையே இஸ்லாத்துக்கு நல்லதொரு செல்வாக்கு ஏற்படவும் வழி வகுத்தது.

இதனால் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளான பார்ப்பனர்களின் முழுக்கவனமும் தென்னாட்டுப் பக்கம் திரும்பியது. தென்னாடு வந்த பார்ப்பனர்களுக்கு குப்தப் பேரரசு, பல்லவப் பேரரசு இவற்றை அடுத்து வந்த பிற்காலப் பாண்டிய சோழப் பேரரசுகள் ஆகிய அனைத்தும் பார்ப்பனியத்தின் காவல் அரண்களாகத் திகழ்ந்தன. இவ்வாறு தென்னகம் வந்து குடியேறிய பார்ப்பனர்கள் சிதறிக் கிடந்தனர். அவர்களை, சிதறிக் கிடந்த பார்ப்பனியத்தை ஒரு கட்டுக்குள் ஒன்றிணைத்தவர் ஆதிசங்கரர் ஆவார்.

இந்த ஆதிசங்கரர் மனுதர்மத்தை எழுதிய மனுவைவிட ‘சூத்திரனை’ இழிவுபடுத்தியவர் ஆவார். சூத்திரன் ஒருவன் வேதம் படித்துவிட்டால் அவனை நெஞ்சைப் பிளப்பது, நாவை அறுப்பது; வேதத்தைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது, கண்ணைத் தோண்டுவது போன்ற செயல்களைச் செய்ய அறிவுரை வழங்கியவர்தான் ஆதிசங்கரர் ஆவார். சங்கராச்சாரியார் இப்படி சூத்திரர்களைத் துன்புறுத்தி அடக்குவதற்கு எடுத்துக் கொண்ட சான்றுகள் குப்த அரசர்கள் காலத்திய ‘கௌதம சூத்திரம்’ முதலிய நூல்களில் இருக்கின்றன. அதாவது சமுத்திர குப்தனுடைய காலத்தில் (கி.பி. நான்காம் நூற்றாண்டில்) ஆரம்பித்து சங்கராச்சாரியாரின் காலம் (கி.பி. 9வது நூற்றாண்டின் ஆரம்பம்) வரைக்கும் நம்முடைய பார்ப்பன முன்னோர்கள் சூத்திரர்களை அமுக்கி வைத்துத் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த இடைவிடாமல் முயன்று வந்தவர்கள் என்று தெரிகிறது.

0

இந்தியாவில் தொன்று தொட்டு சாதிக் கொடுமையும், சமயச் சண்டைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவ்வப்போது அறிவுடையோர், சாதிக் கொடுமையையும், சமய ஊழல்களையும் ஒழிக்க வேண்டுமென்று சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை வைதீகர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். இந்த வைதீகர்கள் சாதிக்கு ஆதாரமாகக் காட்டுவது மத நூல்களையே. மதநூல்களில் அந்தந்தக் காலத்தில் இருந்த பழக்கவழக்கங்களே சொல்லப்பட்டு இருந்தாலும் அதற்கு மிகுந்த சிறப்பை ஏற்றி வைத்திருக்கிறார்கள். மத நூல்கள் யாவும் கடவுள் தன்மை பொருந்தியதாகவும், கடவுளும் அதன் அவதாரங்களாகிய கடவுள்களும் நேரில் வந்து உபதேசித்ததாகவும் சொல்லுகிறார்கள்.

வேதத்திலும், உபநிடதங்களிலும், இதிகாசங்களிலும், ஸ்மிருதிகளிலும், இன்னும் மற்ற மத நூல்களிலும் சாதியைப் பற்றி சொல்லி இருப்பதாலும், சாதி நாட்டில் தொன்று தொட்டே இருந்ததாலும், அதனை விடாது கைப்பற்றி ஒழுகல் வேண்டுமென்பது வைதீகக் கொள்கை.
ஆய்வாளர்கள் கண்டறிந்த விஷயங்கள் இவை. மிகப் பழைய நூலாக இருக்கும் வேதத்தின் முதல் ஒன்பது மண்டிலங்களிலும் சாதி வேற்றுமையைப் பற்றிய குறிப்பு ஒன்றுமே காணப்படவில்லை. பிராமணன் என்னும் சொல் வேள்வி வேட்கும் முனிவனையும், பதிகங்கள் பாடும் புலவனையும் குறிக்கின்றனவே தவிர, பார்ப்பன வகுப்பினைக் குறிக்கவில்லை. ஏனைய மூன்று வகுப்பினரின் பெயர்களான சத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் சொற்களும்கூட அந்த ஒன்பது மண்டிலங்களிலும் காணப்படவில்லை. இதனால் அவை எழுதப்பட்ட காலங்களில் மக்கள் எல்லோரும் ஒரே வகுப்பினராக இருந்தனர், நால்வேறு வகுப்பினராகப் பிரிந்திரிக்கவில்லை என்பது புலனாகும்.

இருக்கு வேதத்தின் (ரிக் வேதம்) பத்தாம் மண்டிலத்திலுள்ள புருஷ சூக்தம் நால்வகை மக்கள் பிரிவை உணர்த்துகிறது. ஆனால் அதிலும், இந்த நான்கு பிரிவினருக்குள் உயர்வு, தாழ்வு இல்லாமல் வாழ்க்கைக்கு முதன்மையாக வேண்டப்படும் நால் வகைத் தொழில்களைச் செய்து கொண்டு உண்ணல் கலத்தல்களில் வேறுபாடின்றி ஒருமித்து வாழ்ந்து வந்ததாகவே சொல்லப்படுகிறது. மேலும், ரிக், யஜுர், சாமம் உள்ளிட்ட மூன்று வேதங்கள் இயற்றப்பட்ட காலங்களிலும் மக்கள் பாகுபாடு இல்லை என்று சொல்லலாம்.

சுக்கில யஜுர் வேதத்தின் முப்பதாம் இயலில் பல்வேறு தொழில்களைச் செய்யும் பல்வேறு மக்கள் கூட்டத்தின் பெயர்கள் மட்டுமே காணக்கிடைக்கின்றன. சாதி வேறுபாடுகளும், உயர்வு தாழ்வுகளும் பேசப்படவில்லை. வேத காலத்தில் சாதி வேற்றுமையின் பொருட்டு பூணூல் அணியும் வழக்கம் காணப்படவில்லை. அக்காலத்தில் கடவுள் நம்பிக்கை அதிகமாக இருந்ததால், கடவுளைத் தொழிலில் புகுத்திருப்போர் தொழிலில் புகாதார் தம்மை அணுகாமல் விலகிப் போவதற்கு ஓர் அடையாளமாக அதனை அத்தொழில் இயற்றும் நேரங்களில் மட்டும் அணிந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

புராணங்கள், இதிகாசங்கள், பிற்பட்ட உபநிடதங்கள் தோன்றிய காலத்திலேதான் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு வகுப்புகள் பிரிந்தன. இக்கால அளவுகளில் சூத்திரன் சமையல் செய்த உணவைப் பார்ப்பனன் அருந்தும் முறை பழைய கற்ப சூத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. வாயு புராணத்தில் கிருத யுகத்தில் சாதிகள் இல்லை என்றும் பிறகு தொழில்களுக்கு ஏற்ப மக்கள் நான்காகப் பிரிந்தார்களென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. வைதீகர்கள் ஐந்தாம் வேதமாகக் கொண்டுள்ள மகாபாரதம் சாந்தி பருவத்தில் மேற்கூறிய நால்வகை சாதியாரில் ஒழுக்கத்தால் மிக்கவரே உயர்ந்த சாதியாரெனவும், ஒழுக்கமில்லாதவரே தாழ்ந்த சாதியாரெனவும் சொல்லப்பட்டிருக்கிறது. அக்காலங்களில் உண்மை பேசுதலே மிகச் சிறந்த ஒழுக்கமாகவும், அதனையுடையோரே பிராமணராகவும் கருதப்பட்டனர்.

0

இந்தியாவில், ஒவ்வொரு சாதியும் தன்னுடைய இருப்பை உணர்ந்தே இருக்கிறது. அதன் இருத்தல் தத்துவமானது முதலும் முடிவுமாக தன்னை காத்துக் கொள்வதேயாகும். சாதிகள் ஒரு கூட்டமைப்பாகக் கூட ஆகவில்லை. இந்து – முஸ்லிம் கலவரம் ஏற்படும் நேரங்களில் தவிர்த்த மற்ற நேரங்களில், மற்ற சாதிகளோடு தம் சாதிக்கு உறவு உண்டு என்று எந்த சாதியினரும் எண்ணுவதில்லை. மற்ற நேரங்களில் எல்லாம், ஒவ்வொரு சாதியும் பிற சாதிகளில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவுமே முயல்கிறது.

சமூகவியலாளர் கூறும் குழு உணர்வு, இந்துக்களிடம் அறவே இல்லாத ஒன்று. நாம் அனைவரும் இந்துக்களே என்னும் உணர்வு அவர்களிடம் இல்லை. ஒவ்வொரு இந்துவிடமும் சாதிய உணர்வுதான் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்துக்களை ஒரு சமூகமாகவோ, தேசமாகவோ கொள்ள முயலவில்லை. இந்தியர்கள் ஒரே தேசத்தவராக இல்லை. அவர்கள் தமக்கென ஒரே சீரான அடையாளத்தைப் பெறாத கும்பலாகவே உள்ளனர். ஆனால் இந்தியர்கள் பலர், நாட்டுப்பற்று காரணமாக இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

நாடுகள் எப்படி தம் சுயநலன் கருதி தனித்து வாழ முற்படுகின்றனவோ, அது போலவே பல்வேறு சாதிகளும் தன்னலங்கருதி தமக்குள் உறவின்றி தனித்து வாழ முற்படுகின்றன. இந்தத் தன்மைதான் சாதிகளிடம் உள்ள சமூக விரோத மனப்பான்மையாக இருக்கிறது. இந்தத் தன்னல மனப்பான்மை, அனைத்துச் சாதிகளிலும் இருக்கிறது. பார்ப்பனர் அல்லாதவருக்கு எதிராக தங்கள் ‘சொந்த நலன்களைக்’ காத்துக் கொள்வதே பார்ப்பனர்களின் அக்கறையாக இருக்கிறது. அதுபோலவே, பார்ப்பனர்களுக்கு எதிராகத் தங்கள் ‘சொந்த நலன்களை’க் காத்துக் கொள்வதே – பார்ப்பனர் அல்லாதோரின் அக்கறையாக இருக்கிறது. எனவே, இந்துக்கள் பல்வேறு சாதிகள் சேர்ந்த கதம்பமாக மட்டும் இருக்கவில்லை. தன் சொந்த நலன்களுக்காக மட்டுமே வாழும் – பரஸ்பரம் போட்டி மனப்பான்மை கொண்ட கூட்டங்களாகவும் உள்ளனர்.

சாதியினால் இந்துக்களின் தர்ம நெறிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையைப் பார்க்க பரிதாபமாக உள்ளது. பொது நலன் என்கிற உணர்ச்சியையே சாதி கொன்றுவிட்டது. உதவும் உணர்ச்சியையும் அது அழித்துவிட்டது. மக்களிடையே பொதுக் கருத்து ஏற்படுவதற்கும் வழியில்லாமல் இருக்கிறது. இந்து மதத்தவன் ‘பொது மக்கள்’ என்று கருதுவது தன் சாதியினரையே; தன் சாதிக்கு மட்டுமே அவன் பொறுப்பாளியாக இருக்கிறான். தன் சாதிக்கு மட்டுமே அவன் விசுவாசம் உள்ளனவாக இருக்கிறான்.

நல்ல இயல்புகளைச் சாதி அடக்கி விடுகிறது. பொது ஒழுக்கம் என்பதாக அல்லாமல், இங்கு சாதி ஒழுக்கமே இருக்கிறது. தர்ம உணர்ச்சி இருக்கிறது. அது தம் சாதியினரோடு தொடங்கி, தம் சாதியினரோடு முடிந்து விடுகிறது. இரக்க உணர்ச்சி இருக்கிறது. அது மற்ற சாதி மனிதர்களிடம் காட்டப்படுவதில்லை. நல்லவரும் உயர்ந்தவருமான பிற சாதியைச் சேர்ந்த ஒருவரை இந்து அங்கீகரிப்பானா?

சாதி என்ற அடித்தளத்தின்மீது எதையுமே உங்களால் கட்டமுடியாது. ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது. உயர்ந்த நெறிகளையும் உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக்கக் கொண்டு நீங்கள் உருவாக்கும் எல்லாமே உருக்குலைந்து போகும்.

0

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!