ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 24
பெண்களும் சுயதொழிலும் என்ற தலைப்பில் இரண்டு சர்வதேச கருத்தரங்குகளில் கலந்துகொள்வதற்காக முதல் முறையாக அமெரிக்கா சென்றிருந்தேன். உலகின் பல பாகங்களில் இருந்தும் தொழில்முனைவோர் திரண்டிருந்தனர். நானும் என் தோழி ஒருவரும் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தோம். கருத்தரங்கில் ஓர் அமர்வில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த ஒரு பெண்மணி வெளிப்படுத்திய கருத்து இது. ஆண்கள் சமைத்தால் சமையல் மேடையை சுத்தமே செய்வதில்லை என்றும், பாத்திரங்களிலிருந்து கரண்டிகளை வெளியில் எடுத்து, பின் அவற்றை மூடி ஃப்ரிட்ஜில் வைக்காமல் கரண்டிகளோடு உள்ளே வைப்பார்கள். துணி மாற்றும்பொழுது அல்லது குளிக்கச் செல்லும் பொழுது, பயன்படுத்திய ஆடைகளை அதற்குரிய கூடையிலோ வாஷிங் மெஷினிலோ போடுவதில்லை.
பல நாடுகளில் இருந்தும் வந்திருந்த பெண்கள் இந்தக் கருத்தை ஆமோதித்தார்கள். தங்கள் வீட்டிலும் இப்படித்தான் நடக்கிறது என்றார்கள். இதை ஊன்றி கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். ஆண்களின் மனோபாவம் இனம், மொழி, மதம் என்ற வேறுபாட்டுக்கு அப்பால் ஒரே மாதிரியாக இருக்கிறது. பெண்களின் எதிர்பார்ப்புகளும் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கிறது. இது ஒரு முக்கியமான விஷயம் அல்லவா?
வெளிநாட்டு பயணங்களின் பொழுதோ, நாம் அயல் நாட்டவரோடு வியாபாரம் பேசும்பொழுதோ அல்லது உணவருந்தும் வேளைகளிலோ அவர்களுடைய பொதுவான கலாச்சாரத்தை நாம் அறிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
உதாரணத்துக்கு நான் துருக்கி நாட்டிலிருந்து மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்வதற்காக அந்த நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லுக்குச் சிலமுறை பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதே போல் கொரியாவின் தலைநகரான சியோலுக்கும் போக வேண்டியிருந்தது. துருக்கி நாட்டில் மரியாதை நிமித்தமாக டர்கிஷ் காபி எனப்படும் ஒரு பானத்தை கொடுத்தார்கள். காபி என்றதும் நானும் இயல்பாக அதை சுவைத்தேன். ஆனால் அது மிகவும் ஸ்ட்ராங்காக இருந்தது. ஒரு சில துளிகள் அருந்துவதேகூட கடினமாக இருந்தது.
வேண்டாம் என்று மறுப்பது மரியாதைக் குறைவான விஷயம். பண்டைய துருக்கியில் மணப்பெண்ணைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்த வகை காபி பயன்பட்டிருக்கிறது. யார் வேகமாக குடிக்கிறார்களோ அவரையே மணமகன் தேர்வு செய்து வழக்கமாக இருந்திருக்கிறது. இப்படி ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பழக்க வழக்கங்களைத் தெரிந்துவைத்துக்கொள்வது தொழில் முனைவோருக்கு அவசியம். எங்கே சைவம், எங்கே அசைவம்? பிறர் மனம் புண்படாதபடி நம் உணவு வழக்கத்தைத் தொடர்வது எப்படி? சைவம் மட்டுமே உண்ணும் நான், ஊர்வன, பறப்பன, மிதப்பன எல்லாவற்றையும் கடித்து ருசித்துச் சாப்பிடுபவர்களுக்கு அருகில் என் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இயல்பாக இருக்க நேர்ந்ததை இங்கே நினைத்துப் பார்த்துக்கொள்கிறேன்.
இருக்கும் இடத்துக்குத் தகுந்தபடி நடந்துகொள்வது முக்கியம். அயல்நாட்டுச் சந்திப்புகளில் நேரம் தவறாமை மிக மிக முக்கியம். வியாபாரச் சந்திப்புகளின் பொழுது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எதுவும் பேசக்கூடாது. ஃபார்மல் டைம், இன்ஃபார்மல் டைம் போன்ற பிரிவுகள் அங்கே உள்ளன. வியாபாரம் தவிர்த்த சந்திப்புகளில் மட்டுமே தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதுவும் பொதுவான சில விஷயங்களைப் பற்றி மட்டுமே பேச வேண்டும்.
வியாபார ஒப்பந்தங்கள் முடிந்த பின்பு அவர்களை விருந்துக்கு அழைக்கலாம். நம் நாட்டை நினைவுபடுத்தும் ஒரு சில பரிசுப் பொருள்கள் கொடுப்பது சிறப்பு. எந்தவொரு நாட்டுக்குச் சென்றாலும், வியாபார நோக்கம் நிறைவேறிய பிறகே சுற்றிப்பார்க்கும் படலம் மேற்கொள்ளவேண்டும். இது மிகவும் முக்கியமானது.
0
செல்வத்தின் விதிகளுக்குத் திரும்புவோம். நமது முந்தைய தலைமுறையினர், ஈட்டும் பணம் முழுவதையும் தம்மைச் சுற்றியுள்ளவர்களுக்காகச் செலவு செய்து, வாழ்ந்து முடித்தனர். பெரும்பாலான குடும்பங்களில் ஒருவர் மட்டும் பணம் ஈட்டுபவராக இருப்பார். தங்கள் ஆசைகளை முதன்மைப்படுத்தி வாழாமல், தங்களுக்கென்று விருப்பங்களை வைத்துக் கொள்ளாமல், எதையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்தனர்.
அதற்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் ஈட்டும் பணத்தின் ஒரு பகுதியை தங்களுக்காகச் செலவு செய்தனர். வருமானத்தில் ஒரு பகுதி சினிமா, உடைகள், ஹோட்டல் ஆகியவற்றுக்குச் செலவு செய்யப்பட்டன. தான் சம்பாதிப்பதைச் சேமிக்க தனக்கும் உரிமை உண்டு என்று அவர்கள் நினைத்தனர்.
இதற்கு அடுத்த தலைமுறை அதாவது இன்றைய தலைமுறை, நான் சம்பாதிப்பது நான் மகிர்ச்சியாக இருப்பதற்கே என்று கருதுகின்றனர். பணம் நீராகச் செலவழிக்கப்படுகிறது. ஷாப்பிங் மால்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. கேளிக்கைக்கான சாத்தியங்கள் மிகவும் விரிவடைந்திருக்கின்றன. கம்ப்யூட்டர், ஸ்மார்ட் ஃபோன், பைக், கார் என்று வாங்கவேண்டிய சாதனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட தலைமுறைக்குத்தான் இன்றைய வியாபாரிகளும் தொழில்முனைவோரும் சர்வீஸ் செய்துகொண்டிருக்கிறார்கள். விதவிதமான விளம்பரங்கள்மூலம் இவர்கள் இளைஞர்களை ஈர்க்கிறார்கள்.
தனி மனிதனின் சமூக மதிப்பு பணத்தைக் கொண்டு மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதை நாம் மறுக்கக்கூடாது. தனிநபர் அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி போன்ற அம்சங்களும் முக்கியமானவை. ஒருவன் மேலும் மேலும் சம்பாதித்துக்கொண்டே போகலாம். அவன் வாழும் சமூகம் சீர்கெட்டதாக இருந்தால் அவனால் தன் செல்வத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது.
இன்றைய இளைஞர்களும் யுவதிகளும் பகிர்ந்து வாழ்பவர்களாக இல்லை. மத்திய தர, கீழ் மத்தியதர குடும்பங்களில் ஒருவர் அல்லது இருவர் என்று சிறு குடும்பங்களாக மாறிவிட்டது. நான், எனது, என்னுடைய பொருள்கள் என்றுதான் பெரும்பாலானோர் சிந்திக்கிறார்கள். இந்தக் கண்ணோட்டம் சமுதாய வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆடம்பர மோகம், வறட்டுத்தனமான கௌரவம் ஆகியவற்றால் கடன்,மேலும் கடன் என்று பலர் நிம்மதியிழந்து வருகிறார்கள்.
0