இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள ஐ.நா தீர்மானம் குறித்தும் அதன் பின்னணி அரசியல் குறித்தும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழரும் இடதுசாரி சிந்தனையாளருமான கலையரசனுடன் ஒரு பேட்டி.
ஐ.நா தீர்மானம் யாருக்குக் கிடைத்த வெற்றி? இலங்கைத் தமிழர்களுக்கு இதனால் ஏதேனும் பலன் உண்டா?

ஆனால், சம்பந்தப்பட்ட நாடு எவ்வளவு தூரம், மேற்கத்திய நலன்களுக்கு விரோதமானது என்பதைப் பொறுத்து, தீர்மானத்தின் அழுத்தம் அதிகரிக்கப்படும். இலங்கை அரசின் இராஜதந்திர நடவடிக்கை எதுவும் மேற்கத்திய நலன்களுக்கு எதிரானதல்ல. அதனால், தீர்மானம் மிகவும் மென்மையாக இருக்கிறது. அமெரிக்கத் தீர்மானம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பது, அதிலேயே அழுத்தம் திருத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, போருக்குப் பின்னரான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த நல்லிணக்க ஆணைக்குழு இலங்கை அரசினால்தான் உருவாக்கப்பட்டது. அதைக்கூட மதிப்பதில்லை. ஒவ்வொரு வருடமும், ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வருகின்ற பிரேரணை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அழுத்தம் கொடுப்பதால், அந்த ஆணைக்குழுவானது ஏற்கனவே அமெரிக்கா வழங்கிய ஆலோசனையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.
இதனால், இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது பலன் உண்டா என்று கேட்டால், அதற்கு ஆம் என்றும், இல்லை என்றும் பதிலளிக்கலாம். ஆம் என்றால், எத்தகைய பலன்கள்? இலங்கையின் மனித உரிமைகள் மேம்படுத்தப்படலாம். சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப் படலாம். இதன் மூலம், தமிழர்களின் (மனித) உரிமைகள் மதிக்கப்படலாம். அமெரிக்க அழுத்தத்தை பயன்படுத்தி, சம உரிமைகளை பெற்றுக் கொள்ளலாம். சட்டத்துறை சுதந்திரமாக செயற்பட்டால், ஒரு போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் உருவாகலாம். அது, சிறிலங்கா இராணுவம், புலிகள் ஆகிய இரண்டு தரப்பிலும் குற்றமிழைத்தவர்களை கண்டுபிடித்து தண்டிக்கலாம். மேற்குறிப்பிட்ட இலக்கினை அடைவது தான், அமெரிக்க தீர்மானத்தின் நோக்கமாக இருக்கின்றது. ஆனால், தமிழ் தேசியவாதிகள் எதிர்பார்ப்பது போல, இந்த நடவடிக்கைகள் தமிழீழம் என்ற தனிநாட்டை உருவாக்குவதற்கு உதவப் போவதில்லை. அதன் விளைவாக, தன்னாட்சி அதிகாரம் கொண்ட பிரதேசம் எதுவும் உருவாகப் போவதில்லை. அந்தக் கோணத்தில் இருந்து பார்த்தால், தமிழர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று கூறலாம்.
அமெரிக்காவுக்கு திடீரென்று இலங்கைத் தமிழர்கள்மீது ஏன் இந்த அக்கறை?
அமெரிக்காவுக்கு தமிழர்கள் மேல் விசேட கரிசனை இருப்பதாக கருத முடியாது. கடந்த காலத்தில், இரண்டு இனங்களையும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் வேலையைத்தான் அந்நாடு செய்து கொண்டிருந்தது. அதாவது, ஒரு நேரம் தமிழர்களுக்கு சார்பானவர்களாக நடிப்பார்கள். இன்னொரு நேரம், சிங்களவர்களுக்கு சார்பானவர்களாக நடிப்பார்கள். உண்மையில், அமெரிக்கா யாரையும் ஆதரிக்கவில்லை. அது தனது பொருளாதார நலன்களை பற்றி மட்டுமே சிந்திக்கின்றது. கடந்த காலத்தில், இந்தியாவும் அப்படித்தான் நடந்து கொண்டது.
தெற்காசியப் பிராந்தியத்தில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கும் இலங்கையில், தனது ஆதிக்கம் நிலைத்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகின்றது. அரபு வளைகுடாவில் உள்ள, எண்ணெய் வள நாடுகளில் இருந்து, சீனா, ஜப்பான் போன்ற தூர கிழக்காசியாவுக்கு செல்லும் கப்பல்கள் இலங்கை வழியாகத்தான் செல்லும். சீனாவோ, அல்லது இந்தியா தன்னிலும், அந்த விநியோகப் பாதையின் குறுக்கே வருவதை அமெரிக்கா விரும்பவில்லை. இன்றைக்கும், சர்வதேச வர்த்தகம் அமெரிக்காவின் மேற்பார்வையின் கீழ் தான் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் மேற்கத்திய நலன்களுக்கு எதிரான அரசு இருப்பதையும், அமெரிக்கா விரும்பவில்லை. அதற்காக, சிலநேரம் தமிழர்கள் சார்பாக நடப்பதாக காட்டி, இலங்கை அரசின் மேல் அழுத்தத்தை பிரயோகிக்கின்றது. அமெரிக்காவில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இயங்குவதற்கு அனுமதித்ததும் ஒரு காரணத்தோடுதான்.
இதே போன்ற அரசியலைத் தான், முன்பு ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதங்களும், பயிற்சியும் அளித்த இந்திரா காந்தியின் அரசும் செய்து கொண்டிருந்தது. வல்லரசுகளின் விளையாட்டில் இருந்து தமிழ் மக்கள் தப்ப முடியாது. ஆனால், இந்த நிலைமையை எந்தளவு தூரம், எமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையே தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. “தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒரே குரலில் பேச வேண்டும்,” என்ற நடைமுறைச் சாத்தியமற்ற, சிறுபிள்ளைத் தனமான அரசியலால் எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை. சில குறைபாடுகள் இருந்தாலும், ஈழத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை முன்னிறுத்துவது தவிர்க்கவியலாதது. இன்றைய நிலையில், தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் பொதுவான இணக்கப்பாட்டை கொண்டு வந்து, தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமையை பலப்படுத்துவதும் அவசியமானது. அமெரிக்க தூதரகமும், இதனை பல தடவை வலியுறுத்திக் கூறியுள்ளது.
அமெரிக்காவே ஒரு போர்க்குற்றவாளிதான் என்ற போதும் அமெரிக்காவை விட்டால் இப்படியொரு அழுத்தத்தை இலங்கைக்கு அளிக்க வேறு யாருக்கும் திறன் இல்லை என்று சொல்லப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அமெரிக்கா ஒரு போர்க்குற்றவாளி, இனப்படுகொலைக் குற்றங்களைக் கூட புரிந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆப்கானிஸ்தான், ஈராக்கில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக இது வரையில் எந்த விசாரணையும் இல்லை. அதனால், பிற நாடுகளை குற்றம் சாட்டும் தார்மீக கடமையை அமெரிக்கா இழந்துவிட்டதும் உண்மைதான். ஆனால், ஒரு உலகப் பேரரசு என்ற முறையில், உலகில் சமாதானத்தை நிலைநிறுத்துவதில் அமெரிக்காவி ன் நிலைப்பாடு என்ன என்பதையே நாம் இங்கு பார்க்கிறோம். சரித்திர காலத்தில், ரோமர்களால் Pax Romana (ரோமர்களின் சமாதான ஆட்சி) என்றும், அல்லது பிரிட்டிஷாரால் Pax Britannica (பிரிட்டிஷ் சமாதான ஆட்சி) என்றும் அழைக்கப்பட்ட, “ஒரு மேலாண்மை வல்லரசின் கீழான நீதி” பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். நான் முன்பு சுட்டிக் காட்டியது போன்று, மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை போன்ற குற்றச்சாட்டுகள் யாவும், இன்று வரையில் அமெரிக்காவின் எதிரிகளை குறி வைத்து தான் ஏவப்பட்டு வந்தன. சில நேரம், நட்பு நாடுகளிலும், அமெரிக்கா எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதற்கான கருவியாக பயன்படுத்தப்படுகின்றது.
இலங்கையிலும், அதிகபட்சம் ஒரு ஆட்சி மாற்றத்தைதான், அமெரிக்க தீர்மானம் இலக்காக கொண்டுள்ளது. அதை தவிர்த்துவிட்டு பார்த்தால், இலங்கையில் இனப்பாகுபாடு நிறுத்தப்படவும், தமிழ் மக்களின் சம உரிமை போன்றவற்றை பெற்றுக் கொள்ளவும், அமெரிக்க அழுத்தம் உதவலாம். ஏற்கனவே, இனப்பிரச்சினையை வளர்த்து விட்டதில் அமெரிக்காவின் பங்கு எந்தளவு உள்ளது? இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்ட போருக்கு, அமெரிக்காவின் ஆதரவும் ஒரு காரணம். பனிப்போரின் இறுதிக் காலத்தில் ஈழப்போர் தொடங்கியது என்பதையும், உலகில் வல்லரசுச் சமநிலையில் மாற்றம் ஏற்பட்ட காலத்தில் அந்தப் போர் தீவிரமடைந்து இருந்ததையும் மறந்து விடலாகாது.
ஒற்றைத் துருவ வல்லரசாக, அமெரிக்கா தனது மேலாண்மையை நிச்சயப்படுத்திக் கொண்ட பிறகு, மூன்றாமுலக நாடுகளில் நடந்த இனப்போர்களுக்கும் முடிவு கட்டப்பட்டது. அதற்குப் பின்னர், அமெரிக்கா தலைமையிலான உலகமயமாக்கல் கொள்கை முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டது. அதற்கு, இன்று “தோற்றுப்போன” ஈழத் தமிழர்கள் முகம் கொடுக்கிறார்கள். வடக்கு-கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்களக் குடியேற்றங்கள், புத்தர் சிலைகளை கட்டுதல் போன்ற சிங்கள பேரினவாத நடவடிக்கைகள்கூட, அமெரிக்காவின் உலகமயமாக்கல் கொள்கைக்கு உட்பட்டுதான் நடந்து கொண்டிருக்கின்றன. அதனை ஈடுகட்டும் வகையில்தான், தமிழரின் மனித உரிமைகள், சம உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஐ.நா. தீர்மானம் அமைந்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால்: அமெரிக்காவின் அழுத்தமானது, அடக்கப்படும் தமிழர்களை சுதந்தரமாக நிம்மதிப் பெருமூச்சுவிட வைக்கும். ஆனால், அது ஒரு விடுதலை ஆகாது. தமிழர்கள் விடுதலை அடைய வேண்டுமானால், அமெரிக்காவின் உலகமயமாக்கலுக்கு எதிராகவும் போராட வேண்டியிருக்கும்.
அமெரிக்கத் தீர்மானத்தை ஏற்க மறுக்கும் அளவுக்கு இலங்கைக்கு உண்மையில் துணிச்சல் இருக்கிறதா? யார் கொடுத்த துணிச்சல் இது?
உண்மையில் அது ஒரு வகையில் அமெரிக்கா கொடுத்த துணிச்சல்தான்! அமெரிக்க தீர்மானம், இலங்கை மீது பெரிய அழுத்தம் எதையும் கொடுக்கவில்லை. அது முன்பு யூகோஸ்லேவியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைப் போன்று கடுமையாக இல்லை. அமெரிக்கா அவற்றை தனது எதிரி நாடுகளாக கருதியது. ஆனால், சிறிலங்காவை தனது நட்பு நாடாக கருதுகின்றது. ஐ.நா. தீர்மானம் ஒரு புறம் இருக்கையில், அமெரிக்கப் படைகள், சிறிலங்கா படையினருடன் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றனர். USAID என்ற அமெரிக்க அரசின் பணத்தில் இயங்கும் தொண்டு நிறுவனம், யாழ்ப்பாணத்தில் கலாசார, களியாட்ட விழாக்களை நடத்தியுள்ளது. இது போன்ற பல உதாரணங்களை குறிப்பிடலாம். சட்ட அடிப்படையில் பார்த்தால், ஐ.நா. வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இலங்கையை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தவில்லை. இந்த விடயங்கள் எல்லாம் எமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இலங்கை அரசுக்கு தெரியாமல் இருக்குமா? மேலும், ஏற்கனவே இஸ்ரேல், இலங்கைக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக திகழ்கின்றது. அண்ணன் எவ்வழியோ, தம்பியும் அவ்வழியே செல்வது தானே உலக யதார்த்தம்?
இலங்கையின் செயலைப் போர்க்குற்றம் என்று அழைப்பதா அல்லது இனப்படுகொலை என்பதா?

2009 ம் ஆண்டு, எத்தனை ஆயிரம் மக்கள் அழிந்தாலும், புலிகளை அழித்தே தீருவதென்று இலங்கை அரசு கங்கணம் கட்டிய பொழுது தான், நாம் விழித்துக் கொண்டோம். ஆனால், அந்த நேரம் காலம் கடந்து விட்டிருந்தது. சர்வதேச மட்டத்தில், “பயங்கரவாத எதிர்ப்புப் போர்” என்ற பெயரில், புலிகளுக்கு எதிராக உருவான புனிதக் கூட்டு, தமிழ் இனப்படுகொலையைக்கூட மௌனமாக அங்கீகரிக்கும் அளவுக்கு சென்றது. இறுதிப்போரில், சிறிலங்கா இராணுவமும், புலிகளும் மூர்க்கமாக மோதிக் கொண்டதால், அங்கே போர்க்குற்றங்களும் நடைபெற்றுள்ளன.
இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம், சர்வதேச சட்டத்தின்படி, போர்க்குற்றங்கள் எவை என்பதை வரையறுப்பது இலகு. ஆனால், இனப்படுகொலை நடந்தது என்பதை நிரூபிக்க வேண்டுமானால், அதற்கென்று சில அளவுகோல்களை வைத்திருக்கின்றனர். மிக முக்கியமாக, ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்ற திட்டம் அங்கே இருந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, யூதர்களை முற்றாக அழிக்க வேண்டுமென்ற திட்டம் ஒன்றை, ஜெர்மன் நாஜிகள் “Endlösung” என்ற பெயரில் தீட்டி வைத்திருந்தார்கள். அது போன்ற ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். ஒரு நாட்டில் நடந்த போரையும், அதன் இறுதியில் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும் இனப்படுகொலை என்று ஒரு தடவை தீர்ப்பு கூறிவிட்டால், அது சர்வதேச அரங்கில் பெரியதொரு தாக்கத்தை உண்டாக்கும். அந்த தீர்ப்பு, வேறு பல உலக நாடுகளின் விடயத்திலும் பிரயோகிக்கப்படலாம். உதாரணத்துக்கு, இனப்படுகொலை குற்றச்சாட்டின் கீழ் இஸ்ரேலை தண்டிக்க வேண்டுமென, பாலஸ்தீன ஆர்வலர்கள் பல வருடங்களாக போராடி வருகின்றனர். அதையும் சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றும்.
0